Friday, May 17, 2024
Home » காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: புராதன சின்னங்களை பார்த்து பரவசம்

காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: புராதன சின்னங்களை பார்த்து பரவசம்

by Karthik Yash

மாமல்லபுரம், ஜன.18: காணும் பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்து புரதன சின்னங்களை கண்டு ரசித்தனர்.
தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தோடு குவிந்தனர். இதனால், மாமல்லபுரம் முழுவதும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. எந்த திசையில் பார்த்தாலும் மனித தலைகளே காணப்பட்டன. சென்னை புறநகர், தாம்பரம், காஞ்சிபுரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், உத்திரமேரூர் செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கட்டுச்சோற்றை கட்டி கொண்டு நேற்று காலை முதலே வரத் தொடங்கினர்.

கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை, கலங்கரை விளக்கம், கிருஷ்ணா மண்டபம், மகிஷாசுரமர்த்தினி, வராக மண்டபம் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்களை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு வெண்ணெய் உருண்டை பாறை முன்பு இருவரும் கை உயர்த்திய இடத்தில் நின்று சுற்றுலா பயணிகள் பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, கடற்கரையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைத்து திருப்பி அனுப்பட்டனர்.

மேலும், கடற்கரைக்கு வந்த பலர் அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை பார்த்து, கடற்கரையில் ஒரு பகுதியில் வட்டமிட்டு அமர்ந்தும், மணலில் உற்சாகமாக நடந்தும் பெரியோர்கள் முதல் சிறுவர்கள் ஆனந்தமாக துள்ளி குதித்து தங்களது பொழுதை கழித்தனர். குழந்தைகள் கடற்கரை மணலில் ஆனந்தமாக ஓடி பிடித்து விளையாடினர். தொல்லியல் துறை டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், சிலர் கம்பி வேலியை தாண்டி குதித்து புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க சென்றனர்.

காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்திற்கு அதிகமான பயணிகள் வருவார்கள் என கணித்த மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் மாமல்லபுரம் வரும் பயணிகள் வாகனங்களை பூஞ்சேரி அரசு மருத்துவமனை நுழைவு வாயில், சென்னையில் இருந்து வரும் இசிஆர் நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்தி வாகனங்களை அங்கேயே நிறுத்த ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்த சிறப்பு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் மூலம் மாமல்லபுரம் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து புராதன சின்னங்களை நடந்தே சுற்றிப் பார்க்க சென்றனர்.

புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்நாட்டு பயணிகளுக்கு தலா ஒரு நபருக்கு ₹40, வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ₹600 வசூலிக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பயணிகள் வந்ததால் டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இவர்களை, கட்டுபடுத்த முடியாமல் தொல்லியல் துறை பாதுகாவலர்கள் திணறினர். லட்சக்கணக்கான பயணிகள் மாமல்லபுரம் வந்ததால் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் தங்கும் விடுதிகள் மற்றும் சாலையோர கடைகள், சிற்ப கூடங்களில் அதிகளவில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

பாதுகாப்பு பணியில் போலீசார்
செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சாய் பிரனீத் தலைமையில், மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் (பொ) இன்ஸ்பெக்டர் மங்கள பிரியா, திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு மாமல்லபுரம் நகரம், இசிஆர் சாலை முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், போலீசார் கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அங்கு வந்த பயணிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தனர். தொடர்ந்து, பயணிகள் போர்வையில் திருடர்கள் சுற்றி வருகின்றனர், அதனால் பயணிகள் தங்களது நகைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டை மீறி யாரும் கடலில் யாரும் குளிக்க கூடாது. விழிப்புடன் இருக்க வேண்டும் என அவ்வபோது போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி கொண்டே இருந்தனர். படகுடன் கூடிய நீச்சல் படை வீரர்களும், போலீஸ் ரோந்து வாகனமும் கடற்கரையில் பணி அமர்த்தப்பட்டிருந்தது. புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து, போலீஸ் எச்சரிக்கையையும் மீறி கடலில் குளிக்கலாம் என ஜாலியாக கடற்கரைக்கு வந்தவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

குளிக்க தடை
இதுகுறித்து, டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் கூறுகையில், ‘மாமல்லபுரம் போலீஸ் உட்கோட்டத்துக்குட்பட்ட மாமல்லபுரம், திருவிடந்தை, கோவளம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், கொண்டங்கி ஏரி, தையூர் ஏரி, வாயலூர் பாலாறு தடுப்பனை, வல்லிபுரம் பாலாறு தடுப்பனை ஆகிய பகுதிகளில் பயணிகள் யாரும் கடலில் குளிக்காத வகையிலும், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில், திருப்போரூர் முருகன் கோயில் மற்றும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஷ்வரர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு கருதி போலீசார் பணியமர்த்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’ என்றார்.

You may also like

Leave a Comment

17 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi