Wednesday, May 29, 2024
Home » ஈசனின் அடிமுடி காண முயன்றபோது திருமால் வணங்கிய திருமாமுடீஸ்வரர்

ஈசனின் அடிமுடி காண முயன்றபோது திருமால் வணங்கிய திருமாமுடீஸ்வரர்

by kannappan

கும்பாபிஷேகம், யாகம், ஆகம பூஜைகள் என அனைத்து ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கும் கலசம் வைப்பது என்பது மிக முக்கியமானதாகும். கலசமே இறைவனுடைய ரூபம். பிரபஞ்சத்தின் சகல சக்திகளையும் தனக்குள் பொதித்து வைத்து பரவவிடும் ஆற்றல் கும்பத்திற்கு உண்டு. சிறப்பு வாய்ந்த இந்த கலசம், ஈசனின் திருமுடி என கூறப்படுகிறது. அவ்வாறு ஈசனின் திருமுடியான கலசத்தை திருமால் பூஜித்த தலமே கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரர் கோயில். இக்கோயில் திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் பாதையில் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.பார்வதிதேவி, ஈசனின் வலப்பாகத்தை அடையும் பொருட்டு காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலையை நோக்கி பயணமானாள். ஓரிடத்தில் வாழை இலைகளால் வாழைப் பந்தல் அமைத்து தங்கினாள். பிறகு முருகனை நோக்கி தண்ணீர் வேண்ட, குமரக்கடவுள் வேலால் ஓர் இடத்தை துளைக்க அங்கிருந்து நீர் ஆறாக பொங்கிப் பெருகியது. சேயால் உற்பத்தியான இந்த ஆறு, சேயாறு என்றானது.இதே சமயத்தில் பிரம்மாவும் திருமாலும் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் சிவபெருமானின் அடிமுடியை தேடிய வண்ணம் இருந்தனர். பிரம்மன் அன்னப்பறவையாக ஆகாயம் நோக்கி சென்றார். திருமால் வராஹ ரூபத்தோடு பூமியை அகழ்ந்து கொண்டு சென்றார். இருவருமே முடிவில்லாத ஈசனின் சொரூபத்தை காண முடியாமல் திகைத்தனர். அண்ட பேரண்டமான ஆதி சக்தியான சிவபெருமானின் வடிவை எவராலும் காண முடியவில்லை. வராஹ ரூபத்தில் தொடர்ந்து அகழ்ந்து கொண்டே போயும் தேடல் ஒரு முடிவுக்கு வராததால், சரணாகதி நிலைக்கு வந்தார் திருமால். அப்போதுதான் இந்த சேயாற்றின் பிரவாகத்தோடு கலசமும் மிதந்து வந்தது. இதை கண்ட திருமால் ‘இது மதி சூடியவனின் கலச முடியல்லவா!’ என அந்தக்கலசத்தை கண்டு மகிழ்ச்சி கொண்டார்.சேயாற்று தீர்த்தத்தையும், ஆயிரக்கணக்கான மலர்களையும் கொண்டு குபேர மூலையில், ஒரு மேடான பகுதியில் கலசத்தை ஸ்தாபித்து பூஜித்தார். இவ்வாறு ஈசனின் திருமுடியை திருமால் ஆனந்தமாக பூஜித்ததால் இத்தல ஈசனுக்கு திருமாமுடீஸ்வரர் எனும் திருநாமம் ஏற்பட்டது. சிறிய ராஜகோபுரமாக இருந்தாலும் கலைநயத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. கோபுர வாயிலுக்குள் நேரே தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். துவார பாலகர்களுக்குப் பின்னால் கருவறையில் லிங்கத் திருமேனியராக திருமாமுடீஸ்வரர் அருள்பாலிக்கிறார். திருமாலே பூஜித்த ஈசனாதலால் அருட்பிரவாகம் பெருகியிருப்பதை உணரலாம்.   தாயார் திரிபுரசுந்தரி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். அபயவரத திருக்கரங்களுடன் பேரழகு மிளிர, நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள் அன்னை. வேண்டாததை நீக்கி வேண்டுவனவற்றை தாயுள்ளத்தோடு வாரித் தருகிறாள். இச்சன்னதியின் வாயிலிலேயே மிகப்பழமையானதும் அரிதானதுமான ராஜதுர்க்கையை தரிசிக்கலாம். அதேபோல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன், குமரக்கடவுள், பைரவர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். திருமாமுடீஸ்வரரை வணங்கினால், இறைவனின் காட்சி கிட்டும் என்று திருமாலே உறுதி கூறும் கோயிலாகும்.  ரத சப்தமியன்று நடைபெறும் ஆற்றுத் திருவிழாவின்போது உற்சவ மூர்த்திகள் சேயாற்றங்கரைக்கு எழுந்தருள்வர். அதேபோல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலிருந்து உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார்கள். அதன்படி இந்தாண்டு வரும் பிப்ரவரி 1ம் தேதி ரதசப்தமி விழா நடைபெற உள்ளது. சித்திரை மாதத்தில் 10நாட்கள் பிரம்மோற்சவம் மிக விமரிசையாக நடக்கும். 10 நாட்களுக்கும் இறைவனுக்கு தும்பை மலர் மாலை சாத்தி வணங்கினால் சகல செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். …

You may also like

Leave a Comment

12 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi