Thursday, May 16, 2024
Home » ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை’: 3 நாட்களில் 3,095 ரவுடிகள் கைது.! தமிழ்நாடு காவல் துறை அதிரடி

ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை’: 3 நாட்களில் 3,095 ரவுடிகள் கைது.! தமிழ்நாடு காவல் துறை அதிரடி

by kannappan

சென்னை: ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை’ மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் கொலை, கொலை முயற்சி மற்றும் கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வந்த 3,095 ரவுடிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து  அரிவாள், பட்டாக்கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தினர். அப்போது கோவை, மதுரை, திண்டுக்கல், கடலூர், கன்னியாகுமரி, தாம்பரம் உள்பட தமிழகம் முழுவதும் 19 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு சம்பவங்கள் நடந்தது. தஞ்சை பகுதியில் அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது. அதைதொடர்ந்து பெட் ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளை போலீசார் இரும்பு கரம் கொண்டு கைது செய்தனர். மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நவம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் பேரணி நடக்க உள்ளது. இந்த பேரணியின் போது பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்று ஒன்றிய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை தொடர்ந்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தும் முக்கிய நிர்வாகிகளான மதுரை, கோவை பகுதிகளை சேர்ந்த 4 ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், இந்து அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிர்வாகிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சேலத்தில் தேசிய பாதுகாப்பு முகமை சோதனையில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சேலத்தை சேர்ந்த  நவீன் சக்கரவர்த்தி(24), சஞ்சய் பிரகாஷ்(25) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தமிழகத்தில் பெரிய அளவில் தாக்குதல் தொடர்பான ஆவணங்கள், அரசியல் தலைவர்களை கொலை செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் துப்பாக்கி தயாரித்தது. தோட்டாக்கள் தயாரித்தது, வெடி பொருட்கள் தயாரித்ததற்கான ஆவணங்கள் சிக்கியது. மேலும், தாக்குதல் சம்பவத்தின் போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க ‘சயனைட்’ குப்பியும் தயாரித்துள்ளனர். அதற்காக காட்டில் உள்ள குறிப்பிட்ட செடியின் சாறு, மற்றொரு செடியின் விதைகளை விஷமாக சேகரித்து ‘சயனைட்’ தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இரண்டு வாலிபர்களும் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தின் மறைமுக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இரண்டு வாலிபர்களும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக ஆன்லைன் மூலம் வாக்கி டாக்கி வாங்கி அதை ரகசியமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.எனவே தமிழகத்தில் பெரிய அளவில் தாக்குதல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதுதொடர்பாக ஒன்றிய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாநிலத்தில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து என 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் ஏ.பிளஸ் கேட்டகிரியில் உள்ள தாதாக்கள், ரவுடிகள், பி மற்றும் பி. பிளஸ் ரவுடிகள் மற்றும் சி பிரிவு ரவுடிகளை கூண்டோடு கைது செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக ரவுடிகளுக்கு எதிரான ‘மின்னல் ரவுடி வேட்டை’ என்ற பெயரில் பெரிய அளவில் ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டங்களில் பிரபல தாதாவாக வலம் வந்த ராக்கெட் ராஜா உள்ளிட்ட ரவுடிகள் பலர் இந்த மின்னல் ரவுடி வேட்டையில் கைது ெசய்யப்பட்டுள்ளனர். சென்னை,மதுரை, கோவை, திருச்சி, சேலம் என 9 மாநகர போலீஸ் கமிஷனர்கள்மற்றும் 37 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் இந்த அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 72 மணி நேரத்தில் நடந்து முடிந்த ‘மின்னல் ரவுடி வேட்டை’யில் 3,095 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அரிவாள், பட்டாக்கத்திகள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரவுடிகளில் பல்வேறு வழக்கில் தலைமறைவாக இருந்த 489 ரவுடிகள் ஆவார்கள். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 216 ரவுடிகள் என மொத்தம் 705 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2,390 ரவுடிகள் காவல் நிலைய பதிவேடு குற்றவாளிகள் ஆவார்கள். இவர்களிடம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் முன்னிலையில் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி குற்றங்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட ரவுடிகள் 6 மாதகாலம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

twelve − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi