Sunday, April 28, 2024
Home » ஆத்ம திருப்தி அளிக்கும் ‘வீடு திரும்புதல்’ திட்டம்!

ஆத்ம திருப்தி அளிக்கும் ‘வீடு திரும்புதல்’ திட்டம்!

by
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழிசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் பார்த்திருப்போம். யாருடைய ஆதரவும் இன்றி அவர்கள் சுற்றித் திரிந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் யார்? இவர்களின் குடும்பம் எங்கே? இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று எதுவுமே நமக்குத் தெரியாது. அவர்களை பார்த்துவிட்டு நாம் அப்படியே கடந்துவிடுகிறோம். இவர்களுக்கான காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் அங்கு சேர்த்தாலும் அந்த பாதிப்பில், நோயில் இருந்து அவர்களை விடுவிக்க முடியாது. அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சி அவர்களுடைய குடும்பத்தில் மட்டுமே கிடைக்கும். அவர்களுக்கான மகிழ்ச்சியினை மீட்டு குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறார் ‘Aspiring Lives’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஃபரிஹா சுமன். மனநிலை பாதிக்கப்பட்டு நினைவை இழந்து வீட்டை விட்டு வெளியேறி காப்பகங்களில் இருப்பவர்களை சந்தித்து பேசி அவர்களுடைய குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறார் ஃபரிஹா. ‘‘இந்த வேலையில கிடைக்கிற மனநிறைவுக்கு எது கொடுத்தாலும் ஈடாகாது’’ என்கிறார் ஃபரிஹா சுமன்.‘‘என்னுடைய சொந்த ஊர் திருப்பத்தூர். சின்ன வயசுல இருந்தே பொது சேவைகள் செய்வது எனக்கு பிடிக்கும். அதனால் என்.எஸ்.எஸ்சில் சேர்ந்து சில வேலைகளில் ஈடுபட்டு வந்தேன். கல்லூரியில் இளங்கலை படிப்பை முடிச்சதும், சமூகப்பணி (MSW) படிப்பு படிக்க முடியும் என்பதால், சென்னையில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் சமூகப்பணியில் முதுகலையில் பட்டம் பெற்றேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தன்னார்வ நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தேன். அவ்வாறு வேலையில் ஈடுபட்ட போதுதான் பல தன்னார்வ நிறுவனங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவங்களுக்காக பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை என்று தெரிந்தது. பொதுவாக இயங்கி வரும் பல தன்னார்வ நிறுவனங்களும் கல்வி, ஊனமுற்றோர் நலன், பெண்களின் முன்னேற்றம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் சார்ந்த வேலைகள்தான் செய்து வந்தனர். மேலும் நான் தன்னார்வ நிறுவனங்களில் வேலை பார்த்து பழகியதால் ஒரு புதிய தன்னார்வ நிறுவனத்தை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்து தெரிந்து வைத்திருந்தேன். அதனால் நானே ஒரு தன்னார்வ நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தேன். அதுவும் குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் குறித்த சேவைகளை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். என் மனதில் இருந்த எண்ணத்தை என்னுடன் தன்னார்வ நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மணிஷ்குமாரிடம் தெரிவித்தேன். அவர் இந்த துறையில் சீனியர் என்பதால், அவருக்கு என்னுடைய திட்டம் பிடித்திருந்தது. எங்களுடன் என்னுடைய மற்றொரு நண்பரான நித்திஷ்குமாரும் இணைந்தார். நாங்க மூவரும் இணைந்து ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது குறித்து கலந்தாலோசித்தோம். அதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களுடைய வீடுகளுக்கு திரும்பக் கொண்டு போய் சேர்ப்பது குறித்து செயல்படலாம்னு முடிவு செய்தோம்’’ என்றவர், தன் தொண்டு நிறுவனத்தின் செயல்பாட்டினைப் பற்றி விவரித்தார்.‘‘பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாது. வீட்டில் யாரும் கவனிக்காத தருணத்தில் அவர்களாவே வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள். திரும்ப வீட்டிற்கு போகத் தெரியாது. அதனால் அப்படியே தெருவில் சுற்றிக் கொண்டு இருப்பார்கள். இவர்களை காணவில்லை என்று தெரிந்து கொண்டு வீட்டில் இருப்பவர்கள் தேடி பார்ப்பார்கள். கிடைக்காத பட்சத்தில் போலீசில் புகார் தெரிவிப்பார்கள். ஆனால், பல நாட்களாகியும் அவர் களை பற்றிய விவரங்கள் சரிவர கிடைக்காமல் போய்விடுவதால், வீட்டினரும் அப்படியே மறந்துவிடுகிறார்கள். இவ்வாறு வீட்டை விட்டு வெளியே சுற்றிக் கொண்டு இருப்பவர்களை பொதுமக்களில் யாராவது ஒருவரால் மனநல காப்பகங்களில் சேர்க்கப்படுகின்றனர். அவ்வாறு சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் தெருவில் சுற்றிக் கொண்டு இருப்பவர்களை அவர்களுடைய குடும்பத்தினருடன் சேர்க்க முடிவு செய்தோம். அவர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘Aspiring Lives’. நாங்க கல்லூரியில் படிக்கும் போதே இதனை துவங்கினோம். எங்களின் இந்த திட்டத்திற்கு ‘வீடு திரும்புதல்’ என்று பெயர் வைத்தோம். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் காணாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம் போக்குவரத்து, ரயில்கள்தான். வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் வழி தெரியாமல் ஏதாவது ரயிலில் ஏறி வேறு ஊர்களுக்கு சென்றுவிடுகிறார்கள். அப்படி செல்பர்கள் பலருக்கு மொழி பிரச்சனை இருக்கும். அதனாலேயே அவர்கள் பல ஆண்டுகளாக காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு  இருப்பார்கள். அவர்களை நாங்க முதலில் சந்தித்து பேசுவோம். இவர்கள் நார்மலான மனநிலையில் இருக்க மாட்டார்கள். ஒரு இடத்தில் அமர மாட்டார்கள். அதனால் இரண்டு மூன்று தடவை மீண்டும் மீண்டும் சென்று அவர்களிடம் பேசுவோம். அப்போதுதான் அவர்கள் என்ன ெமாழி பேசுகிறார்கள் என்றே தெரியும். உடனே நாங்களும் அந்த மொழியில் பேசி அவர்கள் சொல்லும் தகவல்களை குறித்துக் ெகாள்வோம். இதற்காகவே சில மொழிகளை நாங்க தெரிந்து வைத்திருந்தோம். பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் ஊரின் பெயர் நினைவில் இருக்கும். ஆனால் பல மாநிலங்களில் அந்த பெயர் கொண்ட ஊர் இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த குறிப்பிட்ட ஊரின் எண்களை இணையத்தில் தொடர்பு கொண்டு, மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பி விவரங்கள் கேட்போம். அப்படித்தான் அவர்களின் வீட்டினரை கண்டறிவோம். அதன் பிறகு இருவரின் ஒப்புதலின்படி இவர்களை வீட்டிற்கு திரும்ப அனுப்பி வைப்போம். இதுவரை 68 ஆண்கள், 45 பெண்கள் என மொத்தம் 113 பேரை அவர்களின் குடும்பத்தினரோடு சேர்த்து வைத்திருக்கிறோம். தற்போது கேரளா (22) மற்றும் சென்னையில் (4) மனநல காப்பகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்’’ என்றவர், தான் சந்தித்த நெகிழ்வான தருணத்தைப் பற்றி விவரித்தார்.‘‘கிட்டதட்ட 28 ஆண்டுகள் கழித்து ஒருவரை அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றோம். அந்த வீட்டினர் அவர் இறந்துவிட்டதாக நினைத்து அவருடைய படத்திற்கு மாலை போட்டிருந்தனர். அவர் உயிருடன் தன் ஊருக்கு வந்த போது, அவர் வீட்டினர் மட்டுமில்லாமல் அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரை கண்ணீர் மல்க வரவேற்றனர். ஊர் விட்டு ஊர் என்றில்லாமல் நாடு விட்டு நாடும் வீடு திரும்பும் நிகழ்வினை ஒருங்கிணைத்துள்ளோம். வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் இருந்த மனநல காப்பகத்தில் இருந்தார். நாங்க காப்பகத்திற்காக சென்ற போது அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அப்போது அவருடைய ஊர் வங்காளதேசம் என தெரிய வந்தது. மேலும் அவர் கொடுத்த தகவலின் படி அவருடைய வீட்டினரை தொடர்பு கொண்டு பேசி வீடு திரும்பும் நிகழ்வை ஒருங்கிணைத்தோம். இந்திய-வங்காளதேச எல்லையில்தான் இந்த வீடு திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. அவரை வரவேற்க அந்த கிராமமே வந்திருந்தது. எங்களுக்கு நெகிழ்வாக இருந்தது. ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் சேரும் போது ஏற்படும் திருப்தி எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாது. இதனை நாங்க எங்களின் சுய திருப்திக்காகவும் மற்றவர்களின் சந்தோஷத்திற்காகவும் செய்கிறோம். அவர்களை குடும்பத்தினருடன் மட்டுமே இணைப்பதோடு எங்க வேலை முடிந்திடாது. ஒவ்வொரு குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவர்களின் மனநிலை குறித்து விசாரிப்போம். அவர்களின் மனநலம் குறித்த சிகிச்சை முறைகள், மேலும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர்களுக்கு சொல்லித் தருவோம். சில சமயம் அவர்களின் ஊர்களில் இவர்களின் சிகிச்சைக்கான மருந்து, மாத்திரைகள் கிடைக்காது. அந்த சமயத்தில் அதை நாங்க வாங்கி அனுப்பி வைப்போம். இப்படி தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறோம். இந்த சேவையில் சில சிக்கல்களும் இருக்கிறது. சில குடும்பத்தினர் அவர்கள் இறந்துவிட்டதாக நினைத்திருப்பார்கள். அப்படி ஒருவரை வீட்டில் இணைக்க முனைந்தபோது அவர்கள், ‘இறந்தவர் இறந்ததாகவே இருக்கட்டும். அவர் அங்கேயே இருக்கட்டும்’னு சொல்லிட்டாங்க. சில வீடுகளில் சொத்துப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதற்காகவே  ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு பலரின் வீட்டில் விலாசம் கண்டறிந்தும் அவர்களை வீட்டிற்கு அனுப்ப முடியவில்லை. இன்றும் காப்பகத்தில்தான் வாழ்ந்து வருகிறார்கள். சில சமயம் இவர்களின் வீட்டினர் அழைத்து போக வந்தாலும், பாதிக்கப்பட்டவர்களால் அவர்களின் உறவுகளை நினைவுகூர முடியாத பட்சத்தில் காப்பகத்தில் இருக்கவும் நேரிடுகிறது. இவ்வளவு பிரச்சனைகளை தாண்டிதான் ஒருவரை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம். நான் இந்த வேலையில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். இதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி, மன அமைதி வேறு எந்த வேலையிலும் கிடைப்பதில்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்களை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தோம் என்ற மன நிம்மதி கிடைக்கிறது’’ என்றார் ஃபரிஹா சுமன்.தொகுப்பு : மா.வினோத்குமார்

You may also like

Leave a Comment

seventeen − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi