Thursday, May 16, 2024
Home » அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்

அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்

by kannappan
Published: Last Updated on

242. ஸத்கர்த்ரே நமஹ  (Sathkarthre namaha)திருமாலின் திருமார்பில் உள்ள ஸ்ரீவத்சம் என்னும் மறுவின் அம்சமாக, கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில், திருச்சியை அடுத்துள்ள உறையூரில் தோன்றியவர் திருப்பாணாழ்வார். அவருக்குத் திருவரங்கநாதன் மேல் அளவில்லாத பக்தி உண்டு. ஆனால், “மிகவும் தாழ்ந்தவனான அடியேன் எங்கே? மிகவும் உயர்ந்தவனான அரங்கன் எங்கே? அவனது கோயிலுக்குள் அடியேன் கால் வைக்கலாகாது!” என்று எண்ணிய திருப்பாணாழ்வார், திருவரங்கத்திலுள்ள தென் திருக்காவிரிக் கரையில் நின்றபடி, கையில் வீணையை மீட்டிக் கொண்டு, அரங்கனின் நாமங்களை வாயாரப் பாடி வந்தார்.அரங்கனின் திருமஞ்சனத்துக்காகக் காவிரி நீர் எடுக்க வந்த லோகசாரங்க முனிவர், திருப்பாணாழ்வார் படித்துறையில் மெய்மறந்து நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். “விலகு!, “விலகு!” என்று கூறினார். ஆனால் அரங்கனின் குணங்களில் மெய்மறந்திருந்த திருப்பாணாழ்வாரின் செவிகளில் லோகசாரங்கரின் குரல் கேட்கவில்லை. ஒரு கல்லை எடுத்துத் திருப்பாணாழ்வார் மேல் வீசினார் லோகசாரங்கர். அது அவரது நெற்றியில் பட்டு ரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது. கண் திறந்து பார்த்த திருப்பாணாழ்வார், “சுவாமி! தங்கள் பாதையில் இடையூறாக நின்றமைக்கு அடியேனை மன்னித்தருள வேண்டும்!” என்று லோகசாரங்க முனிவரிடம் பிரார்த்தித்து விட்டு விலகிச் சென்றார்.குடத்தில் காவிரி நீரை மொண்டு திருவரங்கநாதனின் சந்நதிக்குக் கொண்டு சென்றார் லோகசாரங்கர். ஆனால் சந்நதியின் கதவு உள்பக்கமாகத் தாளிடப் பட்டிருந்தது. லோகசாரங்கர் எவ்வளவோ முயன்றும் அவரால் கதவைத் திறக்க முடியவில்லை. மிக உயர்ந்த பக்தரான திருப்பாணாழ்வாரைத் தாழ்ந்தவர் என்று கருதி, அவரிடம் அபசாரப் பட்டதன் விளைவாக லோகசாரங்கர் மேல் கோபம் கொண்ட அரங்கன், சந்நதியைத் தாளிட்டுக் கொண்டதை உணர்ந்தார் லோகசாரங்கர். வருத்தத்துடன் வீடு திரும்பினார்.அன்றிரவு அவரது கனவில் காட்சி தந்த அரங்கன், “எமது பக்தரான திருப்பாணாழ்வாரிடம் அபசாரப் பட்டதற்குப் பரிகாரமாக நாளை அவரை உம் தோளின் மீதேற்றிக் கொண்டு நம் சந்நதிக்கு அழைத்து வாரும்!” என்றார். கனவில் தோன்றிய பெருமாளின் நெற்றியில் ரத்தம் வடிவதைக் கண்டார் லோகசாரங்கர். திருப்பாணாழ்வார் மீது தான் வீசிய கல்லைத் தன் மீது வீசியதாக எண்ணி, அக்காயத்தைத் தன் நெற்றியில் அரங்கன் பெற்றுக் கொண்டதாக உணர்ந்தார்.மறுநாள் காலை திருப்பாணாழ்வார் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று அவரிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார் லோகசாரங்கர். அரங்கன் கனவில் இட்ட நியமனத்தை அவரிடம் கூறித் திருப்பாணாழ்வாரைத் தன் தோளின்மீது ஏற்றிக் கொண்டு திருவரங்கம் கோயிலுக்குள் சென்றார் லோகசாரங்கர்.முனிவரின் தோளில் ஏறிக் கோயிலுக்குள் நுழைந்தபடியால், திருப்பாணாழ்வார் ‘முனிவாகனர்’ என்று பெயர் பெற்றார்.“அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்தவிமலன் விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன்நிமலன் நின்மலன் நீதிவாணவன் நீள்மதிள் அரங்கத்தம்மான் திருக்கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே!”என்று தொடங்கி, அரங்கனின் திருவடி முதல் திருமுடி வரை வர்ணித்துப் பத்துப் பாடல்கள் பாடிய திருப்பாணாழ்வார்,“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானைஅண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!”“அரங்கனைக் கண்ட கண்ணால் இனி வைகுண்டத்திலுள்ள பெருமாளைக் கூட நான் காண மாட்டேன்!” என்று சொல்லி அரங்கனின் திருவடிகளிலேயே கலந்து, நித்திய கைங்கரியத்தைப் பெற்றார்.பெருமாளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் வழியில் நிற்கலாகாது என்று திருப்பாணாழ்வாரை லோகசாரங்கர் விலகி நிற்கச் சொல்ல, அரங்கனோ திருப்பாணாழ்வாரைத் தனது திருமேனியிலேயே கலக்கும்படி அருள்செய்து கௌரவித்தாரல்லவா? இவ்வாறு தனது பக்தர்களுக்கும் சான்றோர்களுக்கும் உயர்ந்த நன்மைகளைச் செய்வதால் திருமால் ‘ஸத்கர்தா’ என்றழைக்கப்படுகிறார்.‘ஸத்’ என்பது திருப்பாணாழ்வார் போல், பக்தியோடும் பணிவோடும் வாழும் சான்றோர்களைக் குறிக்கும். ‘கர்தா’ என்றால் நன்மை செய்பவர் என்று பொருள். ஸத்துக்களுக்கு நன்மை செய்வதால் ‘ஸத்கர்தா’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 242-வது திருநாமம்.“ஸத்கர்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் உயர்ந்த நன்மைகள் கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.243. ஸத்க்ருதாய நமஹ (Sathkruthaaya namaha)சபரி என்னும் வேடுவப் பெண் ஒரு பழங்குடி கிராமத்திலே வாழ்ந்து வந்தாள். தர்மத்தைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் அறிய விரும்பிய அவள், ரிஷ்யமுக மலையின் அடிவாரத்தில் வாழ்ந்து வந்த மதங்கர் உள்ளிட்ட முனிவர்களைச் சந்தித்து அவர்களை வணங்கினாள். மதங்க முனிவரையே தனக்குக் குருவாக ஏற்று, அவருக்கும் அவருடன் வாழ்ந்த முனிவர்களுக்கும் அனைத்துப் பணிவிடைகளும் செய்து வந்தாள்.ஒருநாள் சபரியை அழைத்த மதங்க முனிவர், ராம நாமத்தை அவளுக்கு உபதேசம் செய்தார். ராம நாமத்தைப் பற்றி அதுவரை எதுவும் அறியாதவளான சபரி, “ ‘ராம’ என்ற இந்தச் சொல்லின் பொருள் என்ன?” என்று மதங்கரிடம் வினவினாள். அதற்கு மதங்கரோ, “நீ ‘ராம’ ‘ராம’ என்று எப்போதும் சொல்லிக் கொண்டே இருந்தால், பொருள் உன்னைத் தேடி வரும்!” என்று விடையளித்தார்.சபரியும் குருவின் ஆணைப்படி ராம நாமத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கினாள். மதங்கர் தமது மனித உடலை நீத்து வைகுண்டத்துக்குப் புறப்படுவதற்கான நேரம் வந்தது. அப்போது சபரியிடம், “ராம நாமத்தின் பொருள் உன்னைத் தேடி வரும் என்று நான் சொன்னேன் அல்லவா? அந்த ராம நாமத்தின் பொருளான சாட்சாத் ராமபிரான் உன்னைத் தேடி வந்து உனக்கு அருள்புரிவான்!” என்று அவளிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.அன்று முதல் ராமனின் வருகைக்காகத் தினமும் காத்திருந்தாள் சபரி. ராமனுக்குச் சமர்ப்பிப்பதற்காகப் பழங்களைப் பறிப்பாள். ஒவ்வொரு மரத்திலிருந்தும் பழங்களைப் பறித்து விட்டு, அவற்றுள் ஒன்றைக் கடித்துப் பார்ப்பாள். அது சுவையாக இருந்தால், அம்மரத்திலிருந்து பறிக்கப்பட்ட மீதமுள்ள பழங்களை ராமனுக்கென்று எடுத்து வைப்பாள். அது சுவையாக இல்லாத பட்சத்தில், அம்மரத்திலிருந்து பறிக்கப்பட்ட அனைத்துப் பழங்களையும் நிராகரித்து விடுவாள்.இப்படிப் பல நாட்கள் ராமனுக்காகச் சபரி காத்திருக்க, ஒருநாள், ரிஷ்யமுக மலையிலுள்ள சுக்ரீவனைச் சந்திப்பதற்காக வந்த ராமனும் லக்ஷ்மணனும் அம்மலையடிவாரத்திலுள்ள சபரியின் ஆசிரமத்துக்கு எழுந்தருளினார்கள்.ஆழ்ந்த பக்தியோடும் அளவில்லா ஆனந்தத்தோடும் அவர்களை வரவேற்ற சபரி, தான் பறித்து வைத்திருந்த பழங்களை அவர்கள் உண்பதற்காகச் சமர்ப்பித்தாள். இதுவரை குகன் தந்த பழங்களையோ, பரத்வாஜ முனிவர் தந்த விருந்தையோ ஏற்காத ராமன், சபரி தந்த பழங்களை வாங்கி அமுதுசெய்தான். என்ன காரணம்? குகனும் பரத்வாஜரும் தாமாக ராமனுக்கு அவற்றைச் சமர்ப்பித்தார்கள். சபரியோ குருவின் கட்டளைப்படி ராமனுக்குப் பழங்களைச் சமர்ப்பித்தாள். குருவின் துணையோடு தன்னிடம் வருபவரை இறைவன் ஏற்று அங்கீகரிக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று.“உன்னைத் தரிசிப்பதற்காக எத்தனையோ யோகிகள் காத்திருக்க, அவர்களுக்கெல்லாம் தரிசனம் தராது, ஒன்றுமில்லாதவளான என்னைத் தேடி வந்துள்ளாயே! இதிலிருந்து நீ உன் அடியார்களுக்குள் குலம், கல்வி அறிவு, செல்வாக்கு உள்ளிட்ட எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை என்பதை உணர முடிகிறது!” என்று சொன்னாள் சபரி. ராமனுடைய அருட்பார்வையையும் கடாட்சத்தையும் பெற்றுக் கொண்ட அவள், “ராமா! நான் வைகுண்டத்துக்குப் புறப்படுகிறேன்!” என்று சொல்லி ராமனிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில், சபரிக்கு ராமன் முக்தியை அருளவில்லை. அவளது குருவான மதங்கரின் அருளாலேயே அவள் முக்தியை எய்திவிட்டாள்.வேதாந்த தேசிகன், தமது ரகுவீர கத்யத்தில்,“அவந்த்ய-மஹிம-முனிஜன-பஜன-முஷித-ஹ்ருதய-கலுஷ-சபரீ-மோக்ஷ-ஸாக்ஷிபூத!”என்கிறார். சபரியின் மோட்சத்திற்கு ராமன் சாட்சியாக இருந்தானே ஒழிய அவன் தர வேண்டிய அவசியமில்லாத படி அவளது குருவே மோட்சத்தை அவளுக்குத் தந்துவிட்டார்.‘ஸத்’ என்பது சபரி போன்ற தூய பக்தர்களைக் குறிக்கும். ‘க்ருத:’ என்றால் பூஜிக்கப்படுபவர் என்று பொருள். சபரி போன்ற தூய பக்தர்களால் பூஜிக்கப்படுவதால், ‘ஸத்க்ருத:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 243-வது திருநாமம்.“ஸத்க்ருதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், திருமாலின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமாவார்கள் என்பதில் ஐயமில்லை.244. ஸாதவே நமஹ (Saadhave namaha)தனது அத்தை மகன்களாகிய பாண்டவர்களைச் சந்திப்பதற்காக, துவாரகையில் இருந்து இந்திரப்ரஸ்தத்துக்கு எழுந்தருளினான் கண்ணன். கண்ணனை ஒரு கணம் கூட விட்டுப் பிரியாமல் கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வந்தான் அர்ஜுனன். தினமும் காலையில் கண்ணன் தியானம் செய்வதைக் கண்ட அர்ஜுனனுக்கு வியப்பு ஏற்பட்டது. “பக்தர்களாகிய நாம் பகவானான கண்ணனைத் தியானிக்கிறோம். கண்ணன் யாரைத் தியானிக்கிறான்?” என்று சிந்தித்தான்.தனது அண்ணனான யுதிஷ்டிரனிடம் தனது ஐயத்தை வெளிப்படுத்தினான் அர்ஜுனன். “அர்ஜுனா! நாம் எல்லோரும் நமக்கு ஆத்மாவான கண்ணனைத் தியானிக்கிறோம். கண்ணனுக்கு யார் ஆத்மாவாக உள்ளார்களோ அவர்களைக் கண்ணன் தியானிக்கிறான்!” என்று சொன்னார் யுதிஷ்டிரர். அவர் சொன்னதன் பொருள் அர்ஜுனனுக்குப் புரியவில்லை. “நமக்கு ஆத்மாவாகக் கண்ணன் இருக்கிறான். கண்ணனுக்கு ஆத்மாவாக யார் உள்ளார்?” என்று சிந்தித்தான் அர்ஜுனன்.அடுத்தநாள் காலை கண்ணன் தியானிக்கச் செல்லும் போது அவனைத் தடுத்த அர்ஜுனன், “கண்ணா! நீயே பரமாத்மா! நீ யாரைத் தியானிக்கிறாய்?” என்று கேட்டான். “ஒரு நீண்ட பட்டியல் உள்ளது! தியானத்தை முடித்து விட்டு வந்து சொல்கிறேன்!” என்றான் கண்ணன். “அப்படியானால் எத்தனை பேரை நீ தியானிக்கிறாய்?” என்று கேட்டான் அர்ஜுனன். “அர்ஜுனா! நான் தினமும் காலையில் பதினான்கு பேரைத் தியானிக்கிறேன்! தியானித்து விட்டு வந்து பெயர்களைச் சொல்கிறேன்! அந்தப் பட்டியலில் உன் பெயரும் உள்ளது!” என்றான் கண்ணன்.கண்ணன் தியானம் செய்யும் வரை அர்ஜுனன் அறைக்கு வெளியே காத்திருந்தான். கண்ணன் வெளியே வந்தவுடன், “அந்தப் பதினான்கு பேர் பட்டியலைச் சொல்கிறாயா கண்ணா?” என்று கேட்டான்.“ப்ரஹ்லாத, நாரத, பராசர, புண்டரீகவ்யாஸ, அம்பரீஷ, சுக, சௌனக, பீஷ்ம, தால்ப்யான்ருக்மாங்கத, அர்ஜுன, வஸிஷ்ட, விபீஷணாதீன்புண்யான் இமான் பரமபாகவதான் ஸ்மராமி”என்று விடையளித்தான் கண்ணன். “எனது மிகச்சிறந்த பக்தர்களாகிய இப்பதினான்கு பேரையும் நான் தினமும் தியானிக்கிறேன். அந்த பக்தர்களுக்கு என்ன நன்மை செய்யலாம் என்று சிந்தித்து, அருள்புரிந்து விட்டுத் தான் எனது மற்ற வேலைகளுக்குச் செல்வேன்!” என்றான் கண்ணன்.1.இரணியனின் மகனாகப் பிறந்து, தலைசிறந்த பக்தனாக விளங்கிய பக்தப் பிரகலாதன்2.தேவரிஷியான நாரதர்3.வியாசரின் தந்தையான பராசர முனிவர்4.புண்டரீகர் என்னும் முனிவர்5.வேத வியாசர்6.இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவனும், ஏகாதசி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்தவனுமான அம்பரீஷ மன்னன்7.வியாசரின் மகனும், பாகவத புராணத்தை வழங்கியவருமான சுக முனிவர்8.புராணங்களைப் பிரச்சாரம் செய்த சௌனக முனிவர்9.பீஷ்மர்10.தால்பியர் என்னும் முனிவர்11.ஏகாதசி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்த ருக்மாங்கதன் என்னும் அரசன்12.பாண்டவர்களுள் ஒருவனான அர்ஜுனன்13.வசிஷ்ட முனிவர்14.விபீஷணன்“கண்ணா! உனக்குள் ஆத்மாவாக இருப்பவரை நீ தியானிப்பதாக அண்ணன் யுதிஷ்டிரன் சொன்னாரே!” என்று கேட்டான் அர்ஜுனன். “என் பக்தர்களையே எனது ஆத்மாவாக நான் கருதுகிறேன்! அதைத் தான் உன் அண்ணன் அவ்வாறு கூறியுள்ளார். என் பக்தர்கள் பக்தியோடு எனக்குச் சிறிதளவு திரவியத்தைச் சமர்ப்பித்தாலும், அதை மிகப் பெரியதாகக் கருதி அவர்களுக்கு அருள்புரிவேன். அவர்களுக்குத் தேரோட்டியாகவும், தூதுவனாகவும் செயல்படுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். அவர்கள் இட்ட வழக்காக நான் இருப்பேன்! அவர்கள் விரும்பவதைச் சாதித்துக் கொடுப்பேன்! என்று சொன்னான்.அடியார்களையே தனக்கு உயிராக எண்ணி, அவர்களின் கட்டளைகளை ஏற்று, அவர்கள் விரும்புவதைச் சாதித்துத் தருவதால் திருமால் ‘ஸாது:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஸாத்’ என்றால் சாதித்தல் என்று பொருள். அடியார்கள் விரும்புவதை எல்லாம் சாதித்துத் தருவதால் ‘ஸாது:’. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 244-வது திருநாமம்.“ஸாதவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் நல்ல ஆசைகளைத் திருமால் நிறைவேற்றித் தருவார்.245. ஜஹ்நவே நமஹ (Jahnave namaha)பாண்டவர்கள் தங்கள் பன்னிரண்டு ஆண்டு கால வனவாசத்தையும், ஓராண்டு கால அஜ்ஞாத வாசத்தையும் நிறைவு செய்தார்கள். ஆனால் இந்தப் பதின்மூன்று ஆண்டுகள் முடிந்தபின்னும், வாக்களித்த படி பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க மறுத்தான் துரியோதனன். அதனால் மேற்கொண்டு என்னசெய்யலாம் என்பதை உபப்லாவ்ய வனத்தில் இருந்தபடி, பாண்டவர்களும் கண்ணனும் ஆலோசித்தார்கள்.அப்போது கௌரவர்கள் சார்பில் தூதுவனாக சஞ்ஜயன் வந்து பாண்டவர்களைச் சந்தித்தான். அவன் யுதிஷ்டிரனிடம், “தர்மபுத்திரரே! நீங்கள் மிகவும் சாந்தமான சுவபாவம் கொண்டவர். போர் புரிவதோ, ஆட்சி புரிவதோ உம்மைப் போன்ற மனிதருக்குச் சரிவராத செயல்களாகும். மேலும், போர் புரிந்து, பங்காளிகளான கௌரவர்களைக் கொன்று பெறக்கூடிய ராஜ்ஜியத்தில் நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்? அதனால் போர் புரியும் எண்ணத்தைக் கைவிடுங்கள்!” என்றான்.ஆனால் யுதிஷ்டிரரோ, “சஞ்ஜயா! எங்களுக்குப் போர் புரியும் எண்ணமில்லை. நாங்கள் எங்களுக்கு நியாயப்படி சேர வேண்டிய ராஜ்ஜியத்தின் பங்கைத் தான் கேட்டோம். ஆனால் அதைத் தர மறுத்ததன் மூலம், துரியோதனன் எங்களைப் போருக்குத் தூண்டி விட்டான். இனி நாங்கள் போர் புரிந்தாவது ராஜ்ஜியத்தைப் பெறாமல் விடமாட்டோம்!” என்றார்.எப்போதும் போருக்குத் தயாராக இருக்கும் பீமன், அன்று வித்தியாசமாக, “எங்கள் ஐவருக்கும் ஐந்து கிராமங்களைத் தந்தால் கூடப் பரவாயில்லை!” என்றான். அர்ஜுனன், “மூத்தவரான யுதிஷ்டிரர் சொன்னது தான் சரி. போர் தான் இதற்கு ஒரே தீர்வு!” என்றான். நகுல-சகாதேவர்களும் அக்கருத்தை ஏற்றார்கள். எனவே பாரதப் போர் நடப்பது உறுதியாகிவிட்டது.அடுத்த நாள் காலை, சஞ்ஜயன் பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்படத் தயாரானான். யுதிஷ்டிரர், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோரிடம் விடைபெற்றுக் கொண்ட சஞ்ஜயன், அர்ஜுனனைத் தேடினான். “அர்ஜுனனும் கண்ணனும் தனிமையில் அறையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நான் சொல்லி விடுகிறேன்!” என்றார் யுதிஷ்டிரர். “அது முறையல்ல! நானே அர்ஜுனனை நேரில் சந்தித்து விடைபெற்றுக் கொண்டு செல்ல விரும்புகிறேன்!” என்றான் சஞ்ஜயன்.அர்ஜுனனை அழைத்து வருவதற்காக அவனது அறைக்குச் சென்ற சகாதேவன், கதவைத் திறக்க முற்பட்டான். கதவு உள்புறம் தாளிடப்பட்டிருந்தது. கதவைத் தட்டினான் சகதேவன். “யாரது?” என்று உள்ளிருந்து கண்ணன் கேட்க, “நான் தான் சகாதேவன்!” என்றான். “நாங்கள் முக்கியமான ஆலோசனையில் இருக்கிறோம். அப்புறம் வா!” என்று சொல்லி விட்டான் கண்ணன்.சற்று நேரம் கழித்து அபிமன்யு கதவைத் தட்டினான். அவனையும் கண்ணன் அனுமதிக்கவில்லை. சஞ்ஜயனே நேரடியாக அறையின் வாயிலுக்குச் சென்று கதவைத் தட்டினான். “உள்ளே வா சஞ்ஜயா!” என்ற கண்ணனின் குரல் கேட்டது. உள்ளே சென்ற சஞ்ஜயன் அற்புதமான ஒரு காட்சியைக் கண்டான். கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் அக்காட்சியைக் கண்டு விட்டு, அவர்களைக் கைகூப்பி வணங்கிய சஞ்ஜயன், நேராக திருதராஷ்டிரனிடம் சென்றான்.“அரசே! நீங்கள் தோல்வி அடையப் போவது உறுதி! நிச்சயமாகப் பாண்டவர்கள் தான் வெல்லப் போகிறார்கள்! நான் கண்ட காட்சி இதை உறுதிப்படுத்தி விட்டது!” என்றான். “அப்படி எதைக் கண்டாய்?” என்று திருதராஷ்டிரன் கேட்க, “அர்ஜுனனிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்புவதற்காக அவனது அறைக்குச் சென்றேன். அங்கே ஓர் அற்புதக் காட்சியைக் கண்டேன். சத்யபாமாவின் மடியில் தலை வைத்துக் கண்ணன் சயனித்திருந்தான், கண்ணனின் திருவடிகள் அர்ஜுனனின் மடிமேல் இருந்தன. அர்ஜுனன் தனது கால்களைத் திரௌபதியின் மடிமீது வைத்திருந்தான். இதிலிருந்து அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் உள்ள நட்பின் ஆழத்தைத் தெளிவாக அறிய முடிகிறதல்லவா? தன் மனைவி சத்யபாமாவோடு ஏகாந்தமாக இருக்கும் சூழ்நிலையில் கூட நண்பனான அர்ஜுனனைக் கண்ணன் உடன் வைத்திருக்கிறானே! கண்ணனுக்கு இவ்வளவு நெருங்கியவனாக இருக்கும் அர்ஜுனனை நிச்சயமாக துரியோதனனால் வெல்ல முடியாது! நீங்கள் மண்ணைக் கவ்வப் போவது உறுதி!” என்றான் சஞ்ஜயன்.“இதை நீயே துரியோதனனிடம் எடுத்துச் சொல்லி, போர் வேண்டாம் என அறிவுறுத்தலாமே!” என்று சஞ்ஜயனிடம் கேட்டான் திருதராஷ்டிரன். அதற்குச் சஞ்ஜயன், “இல்லை அரசே! நான் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கண்ணனின் பெருமையைத் துரியோதனனால் உணர முடியாது. ஏனெனில்,  துரியோதனன் போன்ற பக்தியில்லாதவர்களிடம் கண்ணன் தன் பெருமையை வெளிக்காட்டுவதில்லை. அர்ஜுனன் போன்ற பக்தர்கள் மட்டுமே அவனது பெருமையை அறிவார்கள்!” என்று சொல்லி விட்டான் சஞ்ஜயன்.‘ஜஹ்னு:’ என்றால் மறைப்பவர் என்று பொருள். தன் பெருமைகளைத் துரியோதனன் போன்ற பக்தியில்லாதவர்களிடமும், தீயவர்களிடமும் வெளிக்காட்டாமல் மறைத்துக் கொள்வதால், திருமால் ‘ஜஹ்னு:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 245-வது திருநாமம்.“ஜஹ்னவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தனது மேன்மைகளை முழுமையாகத் திருமால் காட்டியருள்வார்.திருக்குடந்தைதொகுப்பு: டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

You may also like

Leave a Comment

nineteen − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi