Saturday, May 11, 2024
Home » அகிலத்தையே ஆளும் ஆயிரங்காளியம்மன்

அகிலத்தையே ஆளும் ஆயிரங்காளியம்மன்

by kannappan

திருமலைராயன்பட்டினம்காவிரியின் கிளையாறே திருமலைராயன் ஆறு. மெல்ல நீண்டு நெளிந்து வங்கக் கடலருகே ஆடி அசைந்து சட்டென்று ஓடிச் சென்று ஒரே மூச்சில் இணையும் தலமே திருமலைராயன்பட்டினம். இந்தப் பட்டினம் அம்மையே என ஈசனால் அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் அவதரித்த காரைக்காலுக்கு அருகேயுள்ளது. திருமலைராயன் எனும் அரசன் முதலில் தஞ்சைப் பகுதியை ஆண்டு வந்தான். பின்னர், இந்தப் பட்டினத்திற்கு தன் தலைநகரை மாற்றிக் கொண்டான். அவன் உருவாக்கிய நகரமாதலால் திருமலைராயன் பட்டினம் என்றழைக்கப்பட்டது. இத்தலத்தில்தான் ஆயிரம் காளியம்மன் எனும் திருப்பெயரில் பேழைக்குள் பராசக்தியானவள் அருள்பாலிக்கிறாள். ஆயிரமாயிரம் புவனங்களை படைத்துக் காப்பவள் இத்தலத்திற்கு எப்படி எழுந்தருளினாள் என்பதே வியப்புக்குரியதாகும்.அது பல நூறு ஆண்டுகட்கு முந்தைய காலம். வட நாட்டில் காளி வழிபாடு தழைத்தோங்கிய நேரமது.இன்றைய கொல்கத்தாவாக அது இருக்கலாம் என்பது அனுமானம். அங்கிருந்த அரசன் ஒருவன் காளியன்னையை நினைத்து தீவிர தவத்தில் ஆழ்ந்தான். காளியும் காட்சி கொடுத்தாள். ‘‘நான் ஒரு பெட்டியில் இருந்தபடி அருள்வேன். என்னை அனுதினமும் திறந்து அளவிலா நிவேதனங்களாக ஆயிரமாயிரமாக படைத்து வழிபட மோட்சப் பேறு அளிப்பேன்’’ என்றாள். அரசனின் எதிரே அழகிய பேழையொன்று தோன்றியது. அதற்குள்ளாக அன்னையின் திருவடிகளும் வேலனுக்கு வேல் வழங்கிய திருக்கரங்களும், கருணைகூர் திருமுகத்தோடும் அன்னை காட்சியளித்தாள். பேழையை பூக்களால் அர்ச்சித்தான். நெஞ்சு நிறைய அவளின் திருநாமங்களை சொன்னான். ஆயிரம் ஆயிரமாக நிவேதனங்களை அன்னையின் திருமுன்பு பரப்பினான். பொங்கல் பானை என்றால் அதில் ஆயிரம்.மாம்பழம் எனில் அதிலும் ஆயிரம் என்று ஆயிரங்களில் படைத்தான்.இப்படியாக பல ஆண்டுகள் விமரிசையாக பூஜித்தான்.  ஒருநாள் அன்னையே இனி நீ பூஜித்ததுபோதுமென்றாள். வழிபாடு பூர்த்தியாகி விட்டதை தெரிவித்தாள். அந்த அரசனை ஆயிரங்காளி ஆட்கொண்டாள். ஆனால், அதற்கு முன்பு, ‘‘என்னை இந்த பேழைக்குள் வைத்து கடலில் விட்டுவிடு’’ என்று அருளாணையிட்டாள். அரசனும் அன்னை சொல்லை தட்டாது பேழையை வங்கக்கடலில் மிதக்க விட்டான். கடலளவு கருணை கொண்ட நாயகி வங்கக் கடலில் மிதந்தாள். திருமலைராயன் பட்டினத்தின் கிழக்கில் அமைந்த வங்கக்கடலில் மிதந்து கொண்டிருந்தாள். மீனவர்கள் வலை வீசினார்கள். ஆனால். வீசிய வலைக்குள் அகப்படாது நகர்ந்தாள். பெருஞ்சக்தியொன்று பேழைக்குள் நிலைகொண்டிருக்கிறது என்பதை தெளிவாக அறிந்தனர். பணிவோடு கடற்கரையில் கைகட்டி நின்றனர்.  மூன்று நாட்களும் தவமிருப்பதுபோல காத்துக் கிடந்தனர். தாயே… தாயே…. என்று கைகூப்பி தொழுதனர். மூன்றாம் நாள் இரவு சிவநெறிச் செல்வராம் செங்குந்த முதலியார் மரபினரின் முதல்வர் கனவில் தோன்றினாள்.‘‘நான் மூன்று நாட்கள் கடலிலேயே இருந்து விட்டேன். நாளை காலை வந்து என்னை ஊருக்குள் அழைத்துச் சென்று ஒரிடத்தில் நிலைப்படுத்தி வையுங்கள்’’ என்றாள். செங்குந்தருக்கு கனவு கைக்குப்பியபடியே கடலருகே செல்லச் செல்ல காளி அலையின் மீதேறி குழந்தை சறுக்கி வருவது போல வேகமாக வந்தபடி இருந்தாள். தரை தொடுவதற்கு முன்பு சிவநெறிச் செல்வர் பெட்டியை வாரி அணைத்துக் கொண்டார். பக்தர்கள் ஒன்று கூடி பேழையை மகிழ்ச்சி பொங்க தோளில் சுமந்தனர். மேள தாளங்கள் மத்தளங்களோடும், சங்கு முழங்கவும் மலர்களை மழையைபோல் பொழிந்தபடி ராஜசோழீஸ்வர முடையார் கீழ வீதி ஈசானிய பாகத்திலுள்ள மடத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தனர். குல முதல்வர், பெட்டியிலிருந்து அம்மனை பீடத்தினில் எழுந்தருளச் செய்தார். பேழையைத் திறந்தார். ஓர் ஓலை இருப்பதை கண்ணுற்றார். அதை எடுத்துப் படிக்கத் தொடங்கினார்.அருள்மிகு ஆயிரங் காளி அம்மன்இருளினை நீக்கி இன்பம் அளிப்பவள்அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும்எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும்ஆண்டுகள் ஐந்திற் கொருமுறைதிண்ணமாய்ப் பூசித்துத் திருவெலாம்பெறுகவே!என்று இருந்தது. ஊர் மக்கள் காளியின் அன்பான ஆணையையும், கருணையோடு இப்படி தலத்திற்கு எழுந்தருளிய அற்புதத்தையும் எண்ணி எண்ணி உவகை கொண்டனர். சட்டென்று எல்லோரையும் இப்படி ஆட்கொண்டாளே என்று வியந்தனர். வருடக் கணக்கில் பழகியவள் போலல்லவா இவள் இருக்கிறாள். எத்தனையோ ஜென்ம சம்மந்தம் இந்த மூன்று நாட்களில் இத்தனை நெருக்கமாக நம்மைப் பிடித்துக் கொண்டதே என்று உணர்ச்சிப் பிழம்பாகிக் கிடந்தனர்.  எல்லோர் கண்களிலும் நீர் கன்னத்தில் வழிந்தபடி இருந்தது. சிலர் கண்கள் மூடி நின்றபடியே தியானத்தில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு என்றுமில்லாமல் அன்று தியானம் கைகூடியிருந்தது. அன்னை தியானத்தை அளித்து விட்டாள் என்றே தோன்றியது. நேற்று வரை என்னைப் பெற்றவள் அன்னை. இன்று முதல் இவள் பேரன்னை. இதோ இங்கிருக்கும் எல்லோரையும் பெற்றவளே பேழைக்குள் இருக்கிறாள் என்கிற மகாபாவம் வந்தது.‘‘எந்தை தந்தை தந்தைக்கும் மூத்தப்பன் என்கிற வரிகள் மனதினில் ஓடின. அன்றே அன்னையை அலங்கரித்தனர். ஆயிரம் ஆயிரமாக பலவகைப் பழங்களையும் பண்டங்களையும் நிவேதனமாகப் படைத்தனர். தொடர்ந்து பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்தபடி இருந்தனர். மீண்டும் பேழைக்குள் வைத்தனர். எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு என்று கணிக்க முடியாத இந்தக் கொண்டாட்டம் இன்று வரை தொடர்கிறது. ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வைகாசி மாதம் வளர்பிறை பட்சத்தில் திங்கட்கிழமை நல்ல ஹோரையில் இரவு பத்து மணிக்கும் மேல் காளியம்மன் மடத்திற்கு அம்மனின் பெட்டியை திறப்பதற்காக அருளாளர் குழு செல்வார்கள். மக்கள் வெள்ளம்போல திரண்டு நிற்பர்.அந்த அருளாளர் குழு ஒரு மண்டலம் இதற்காகவே விரதம் அனுஷ்டிப்பார்கள். பாய்தனில் படுக்கையை மறப்பார்கள். கருவறைக்குள் புகும் முன்பு ஒரு வெள்ளிக் கடத்தினில் அன்னை ஆயிரங்காளியை எழுந்தருளச் செய்து பக்கத்திலுள்ள நடராஜர் சந்நதியில் அதனை வைத்திருப்பார்கள். காளியம்மன் பேழையிலிருந்து எழுந்தருளி தரிசனம் தரும்வரை அந்த கடத்திற்கு அடியவர்கள் வழிபாடு செய்வார்கள்.  விரதத்திலிருக்கும் அருளாளர்கள் கர்ப்பக் கிரகத்திற்குள் பயபக்தியோடு நுழைவார்கள். அதற்குப் பிறகு அந்தச் சந்நதியின் சாந்நித்தியத்தில் தங்களையே மறப்பார்களாம். ஏதோவொரு பெருஞ்சக்தி அவர்களை ஆட்கொள்ளுமாம். இடையறதா சக்தியின் துடிப்பு எல்லோரையும் பிணைத்துக் கட்டுமாம். வெளியிலிருந்து பார்க்க முடியாத வண்ணம் ஏழு திரைகள் போட்டு மறைப்பர்.உள்ளுக்குள் பேழையைத் திறக்கும்போது ‘கலீர்’ என்று அம்மனின் பாதச் சிலம்பொலி கேட்கும்போது அவர்கள் விருட்டென்று சிலிர்த்துப் போவார்களாம். பெட்டியைத் திறக்கும்போது வெளியில் அதிர் வேட்டுக்கள் வானத்தை அதிரச் செய்யும். பெட்டியின் உள்ளே அன்னையைச் சுற்றிலும் சந்தனம் குவிந்திருக்கும். ஐந்தாண்டுகட்கு முன்னர் வைக்கப்பட்டிருந்த எலுமிச்சை பழங்கள் வதங்காது பொன்னிறத்தில் தகதகக்கும் ஆச்சரியமும் நடக்கும். பேழையிலிருக்கும் அன்னையை வெளியில் எடுத்து பல மணி நேரங்கள் அலங்கரிப்பார்கள். திருமுடி முதல் திருவடிவரை திரிபுரநாயகியாம் ஆயிரங்காளி நம்மீதுள்ள கருணையினாற் தன்னுடைய பேருருவம் மறைத்து நம்மைப்போல் சிற்றுருவம் பூணுகிறாள். மலர்ப் பாதங்களில் சிலம்பும், வளைக்கரங்களும், பட்டாடையும் நெற்றியில் திலகமோடு அழகுத் திருமுகத்துடன் காளியன்னை வீர வடிவம் கொள்கிறாள்.மாதுளம்பூ மேனி கொண்ட அம்மனின் கம்பீரமான தோற்றத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். வீரகோலம் பூணுவதாலேயே வீரமாகாளி என்றழைக்கப்படுகிறாள். அன்னையின் அலங்காரம் நிறைவு பெற்றதும் ஆறு திரைகளை அகற்றி விடுவார்கள். இப்போது இருப்பது ஒரே ஒரு திரைதான். காளியம்மன் மடத்திலிருந்து புதுப்பானையைப் பெற்று தங்கள் இல்லத்திலிருந்து பொங்கல் பொங்குவதற்குண்டான பொருள் யாவும் கொண்டு  வந்து மடத்தினில் பொங்கல் வைப்பார்கள். இதனிடையே அன்று மாலை ஆறு மணிக்கு அபிராமி உடனுறை ராஜசோளீஸ் வரர் திருக்கோயிலிலிருந்து காளியம்மனுக்கு வரும் சீர்வரிசையை பார்க்க காண கண்கோடி வேண்டும். அடுத்ததாக மாலைகள் ஆயிரம், கனிகள் ஆயிரம். தின்பண்டங்கள் ஆயிரம். வரிசைப் பொருள்களை ஏற்றி வரும் ஊர்திகள் அலங்கரிக்கப்பட்டு நகர்ந்து கொண்டிருக்கும்.வானத்திலிருந்து பார்க்க நீண்ட நெடிய ஆற்றில் நிவேதனங்கள் மிதந்து செல்வது போலிருக்கும். காளியம்மன் கோயிலை அடைந்ததும் சித்ரான்னங்கள் உள்ளிட்ட அனைத்தும் தேவியின் முன்பு சமர்ப்பிக்கப்படும். காளியன்னைக்கு படையல் போட்டு முடித்ததும் நடராஜரின் சந்நதியில் தரிசனத்திற்கு வைத்திருந்த வெள்ளிக் கடத்திலிருக்கும் தீர்த்தத்தால் அம்மனின் திருவடியில் அபிஷேகம் செய்வார்கள். சட்டென்று ஏழாவதாக மறைத்திருந்த திரையும் நீங்கும். திருமலையராயன் பட்டினமே வங்கக்கடலை அதிரச் செய்யும் அளவுக்கு பிளிறுவர். தாயே… மகாசக்தி… ஆதி சக்தி… பராசக்தி… ஓம் சக்தி என்று கண்களில் நீர் பொங்க அலறுவர். ஐந்து வருடங்களுக்கு முன்பு பார்த்த அம்மையின் பிரிவுத் துயர், அந்தத் தாபம் அழுகையாகவும், ஆனந்தமாகவும், அலறலாகவும், அமைதியாகவும், அதிர்ந்துபோயும், விக்கித்துப்போயும், வியந்தும் என்று பல்வேறு பாவனைகளில் பக்தர்களிடமிருந்து வெளிப்படும்.தீபாராதனை காட்டும்போது ஞானபூரணியின் முகம் கருணையால் ஒளிரும். பக்தர்கள் விக்கித்துக் கிடப்பர். தன்னை மறந்து தன் சுயம் இழந்து அம்மையின் பூரண சாந்நித்தியத்தில் லயித்து விடுவர். இந்த ஜென்மம் பெற்றதின் காரணத்தை அந்தக் கணத்தில் உணராத பக்தர் அங்கிருக்க மாட்டார். திங்கட்கிழமை தொடங்கிய நிகழ்வில் புதன், வியாழக் கிழமை இரண்டு நாட்களில் தொடரும். இரவு பகலாக தொடர்ந்து லட்சக் கணக்கில் பக்தர்கள் தரிசித்தபடி இருப்பர். பிரசாதங்கள் நிவேதிக்கப்பட்டும் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டபடி இருக்கும். அம்மனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்க்கும் விதம் பார்த்து பக்தர்கள் ஆச்சரியமடைந்தபடி இருப்பார்கள். வெள்ளிக் கிழமை விடியற்காலையில் விரதமிருந்த அருளாளர்கள் மீண்டும் பேழைக்குள் அம்மனை வைத்து விடும்போது பக்தர்கள் பிரிவைத் தாங்காது கலங்குவார்கள்.இன்னும் ஓர் ஐந்தாண்டா… எங்களால் முடியாது தாயே என்று ஆற்றாமையோடு ஒருபுறம் முகம் புதைத்து அழுவார்கள். சிலர் மூர்ச்சையடைவார்கள். ஆனால், அந்த ஐந்து நாட்களும் தனக்குள் என்ன நடந்தது என்று தெரியாத அளவுக்கு ஒரு பரவசத்திலேயே இருப்பார்கள். இத்தனை வைபவமிக்க அன்னை ஆயிரமாயிரம் அற்புதங்களை இன்றளவும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறாள். தாய் தந்தையர் கூட பார்த்துப் பார்த்து செய்வார்களோ இல்லையோ இத்தலத்திலுள்ள அன்னை தன் திருவடி நிழலுக்கு அருகே வந்து விட்டாலே போதும். வேண்டுவனவற்றை வேண்டிப் பெறாமலேயே வாரியிறைத்து விடுகிறாள்.  ஊரின் மையத்திலேயே ஆலயத்தில் நுழைவாயில் வரவேற்கிறது. கோயிலையே திருமடம் என்றே அழைக்கிறார்கள்.குங்குமத்தின் சுகந்தம் நெஞ்சை நிறைக்கிறது. காளியன்னையின்  பெருஞ்சக்திபேழைப் பீடத்திலிருந்து வெளிப்பட்டபடி இருப்பதை உணரலாம். தன் முயற்சியற்று மனம் குவிந்து பேரமைதி நம்மை ஆட்கொள்கிறது. சக்தியின் பாய்ச்சல் அருவமாக நம்மை துளைத்தெடுத்துச் செல்வதை கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்தால் புரிந்து கொள்ளலாம். வெள்ளிப் பேழையைப் பார்த்தால் அம்பாளின் தர்பார் போலுள்ளது. அகிலத்தையே இப்படித்தான் ஆட்சி செய்வாளோ என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. தேவார வைப்புத் தலத்தில் இத்தலம் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். திருமலைராயன்பட்டினம் செல்வோம். காளியின் திருவடி பரவுவோம். இத்தலம் காரைக்காலுக்கு மிக அருகேயே உள்ளது.கிருஷ்ணா…

You may also like

Leave a Comment

nine + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi