திருவிடைமருதூர், ஜூன் 7: திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை அருகே கோட்டூரில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கஞ்சனூர், கோட்டூர், துகிலி, மணலூர் ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெறும் வகையில் கோட்டூர் கற்பகாம்பாள் கல்வி பயிலகத்தில் இலவச தையல் பயிற்சி முகாம் துவக்க விழா தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் கோ.க அண்ணாதுரை தலைமை வகித்தார். இந்த இலவச பயிற்சி முகாமில் தினமும் ஒரு மணி நேர பயிற்சி வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஒரு மாத காலம் நடக்கும் இந்த சிறப்பு பயிற்சியில் பயிலும் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. தொடர்ந்து கற்பகாம்பாள் கல்வி பயிலத்தில் பயின்று 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற சுஜாதா,பாரதி, செளந்தர்யா ஆகிய மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கோட்டூர் ஊராட்சி திமுக செயலாளர் பாலமுருகன் வரவேற்றார்.