Saturday, July 27, 2024
Home » இளம் தலைமுறையினரை கையாள்வதில் சிரமமிருக்கிறதா?

இளம் தலைமுறையினரை கையாள்வதில் சிரமமிருக்கிறதா?

by Porselvi

இன்றைக்கு வளருகின்ற குழந்தைகளுக்கு கிடைக்கக் கூடிய சமூக தாக்கங்கள் இதற்கு முந்தைய தலைமுறையினரிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இன்றைய சூழலில் பிள்ளைகளை சமாளிப்பதில் பெற்றவர்களும் ஆசிரியர்களும் நிறையவே தடுமாறித்தான் போகிறார்கள் என்பதே நிஜம். இத்தலைமுறை பிள்ளைகளை handle with care என்கிற முன்ஜாக்கிரதை யுடனே கையாளவேண்டியிருக்கிறது என்றால் அதில் மிகையில்லை. இந்த தலைமுறை பிள்ளைகள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவர்களாக, தொட்டாற் சிணுங்கிகளாக ‘‘முணுக்” கென்றால் கோபிப்பவர்களாக… மிகச் சிறுவயதிலேயே அதீத சுயமரியாதையை எதிர்பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். இது நிச்சயம் அவர்கள் தவறல்ல..நமது சமூக மாற்றங்களே அவர்களை இத்தகையவர்களாக மாற்றி இருக்கிறது என்ற கசப்பான உண்மையை ஜீரணித்து தான் ஆகவேண்டும். இன்று ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதற்கு கிடைக்கும் நவீன வசதிகளும் அதற்கு காரணம். எதற்குமே ‘‘நோ” என்ற சொல்லே கிடையாது பெற்றவர்கள் தரப்பில். ஒரு குழந்தை அழ ஆரம்பித்தாலோ அல்லது சாப்பிட வைக்கவோ உடனே செல்போனை அதனிடம் திணிப்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. ஒரு மூன்று வயது குழந்தை நான்கு மணி நேர இரயில் பயணத்தை ஒரு செல்போனின் உதவியுடன் கடந்து வருவதை மிக சகஜமாக காணமுடிகிறது.

இதற்கு முந்தைய தலைமுறையில் ஓரளவுக்கு வளரும் வரை தூங்குவதற்கு முன்பு அம்மா அல்லது அப்பாவுடன் படுத்துக்கொண்டு கதை பேசுவதோ அல்லது கதை கேட்பதோதான் வழக்கம். தற்போது நாம் காணும் பிள்ளைகள் அனைவருமே தனித்தனி அறைகளில் ஆளுக்கொரு மொபைலை நோண்டியபடி இரவு இரண்டு மணி வரை தூங்காமல் விழித்திருப்பதை சர்வசாதாரணமாக காணலாம். கல்யாணம் ஆன தம்பதிகளுக்கு கூட தனி அறைகள் கிடைக்காமல் வாழ்ந்த முந்தைய தலைமுறையினரை நாம் பார்த்திருக்கிறோம். இன்று பெரும்பாலான வீடுகள் குறைந்தபட்சம் இரண்டு படுக்கையறை வசதி கொண்டது. சிறு குழந்தைகளுக்கு கூட தனி அறைகள் தனி செல்போன் டிவி இத்யாதி வசதிகள். தனி அறைகளில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க நேரமோ, மனதோ இல்லாது வேலைக்கு செல்லும் களைப்படைந்த பெற்றோர்கள். அல்லது அவர்களும் மொபைலை நோண்டிக்கொண்டிருக்கும் சமூகவலைத்தள பார்வையாளர்கள். பிள்ளைகளிடம் நீங்கள் தந்திருப்பது உலக நிகழ்வினை உள்ளங்கையினில் தரும் என்கிற உண்மை உறைக்குமா? இன்றும் வன்முறை நிறைந்த வீடியோக்களின் பார்வையாளர்கள் சிறுவயதினர்தான் என்கிற கசப்பான உண்மை உங்களுக்கு தெரியுமா? அவர்கள் கூகுளில் தேடுவது எது என்கிற நிஜம் புரியுமா? இன்று தற்கொலையில், வன்முறையில் இறங்கும் சிறுவயது பிள்ளைகள் பலரும் நாடுவது கூகுளைதான்.

இன்று அனைவருக்கும் கேரியர் தேவைப்படுகிறது. அனைவருக்கும் ப்ரைவஸி தேவைப் படுகிறது. அனைவருக்குமே ‘‘ஸ்பேஸ்” தேவைப்படுகிறது என்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்பேஸ் தேவைப்படுவதில் தவறில்லை. குடும்பத்தில் ஒவ்வொருவரும் வேறு வேறு ஸ்பேஸில் பயணிப்பது ஆபத்தானதல்லவா? அன்றைய குழந்தைகள் பெற்றோர் வெளியே சென்றால் அழும் அடம்பிடிக்கும். தற்போதைய பிள்ளைகள் சந்தோஷமாக போய்வா என பெற்றவரை துரத்துவதை கண்கூடாக காண்கிறோம்.ஏனெனில் அவர்களுக்கு ஸ்பேஸ் தேவைப்படுகிறது. முற்காலத்தில் உணவுக்கும், சிறுதீனிகளுக்கும் பெற்றவரை சார்ந்தேயிருந்தோம். இன்று அதற்கும் பெற்றவர்கள் தேவையில்லை. அவர்களின் பணம் மற்றும் கிரெடிட் டெபிட் கார்டுகளே போதுமானதாக இருக்கிறது. இன்று நான்கு நாட்கள் பெற்றவர் இல்லையென்றாலும் கவலையில்லை. பாதுகாப்பான வசதியான வீட்டில் மொபைல் மற்றும் டிவி வகையறாக்களுடன் ஸ்விக்கி மற்றும் சொமோட்டாவில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வாழ தயாராகி விடுகிறார்கள்.

சிறு வயது முதலே உறவினர்கள் வீடுகளுக்கு அழைத்து செல்வது கிடையாது. ஏனெனில் அது நமது குழந்தைகளுக்கு வசதிப்படாது. உறவினர்கள் நம் வீட்டிற்கு வந்தால் நமக்கு வசதிப்படாது. அதனால் தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, மாமா, மாமி என அனைவருமே இன்று வெளியாட்கள் தான். யாரிடமும் குழந்தைகளுக்கு நெருக்கமோ, பாசமோ கிடையாது. அப்படியே இருந்தாலும் நாம் ஒட்ட விடுவதில்லை. தொந்தரவாய் இருக்குமென வெட்டி விடுகிறோம். யாரும் அவர்களை ஒரு வார்த்தை சொல்லிவிடக்கூடாது. அவர்கள் பொத்தினாற் போலதான் வளரவேண்டும். திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகளுக்கும் பிள்ளைகள் அழைத்துவரப்படுவதில்லை. காரணம் அங்கே அவ்வளவாக யாரையும் தெரியாது. துக்க நிகழ்வுகளுக்கு நிச்சயமாக வாய்ப்பேயில்லை. பிள்ளைகள் பயந்து விடுவார்கள் மற்றும் சுகாதார பிரச்னைகள். பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தாலும் அங்கேயும் ஆசிரியர்கள் அடிக்கவோ திட்டவோ கண்டிக்கவோ கூடாது. அன்பாக கனிவாக நடந்துகொள்ள ஆசிரியர்களுக்கு தான் அறிவுறுத்தல்கள் செய்யப்படுகிறது. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தகைய கோழிகுஞ்சு வளர்ப்புகள் அவர்களுக்கு எதைதான் கற்றுத் தரப்போகிறது. சக உயிரின் எந்த உணர்வுகள் தான் அவர்களுக்கு புரிந்துவிடப் போகிறது. போகட்டும்… அவர்கள் பார்க்கும் டிவி மற்றும் சினிமாக்கள் ஏதேனும் நல்ல செய்திகளை கற்றுத் தருகிறதா? பாலியல் மற்றும் வன்முறை சம்பந்தமான விஷயங்களை மட்டும் பலமாக அவர்களின் மூளைக்குள் திணித்துவிடுகிறது. அவர்கள் விளையாடும் கேம்களோ மிகவும் ஆபத்துக்கள் நிறைந்தவை. மூளை சலவை செய்து அவர்களை அடிமைகளாக்கும் அல்காரிதங்கள் நிறைந்தவை. போகிற போக்கில் கொடூரமான வன்முறைகளை மனதினில் ஆழமாய் பதியவைப்பவை. அவர்கள் புழங்கும் சமூகவலைத்தளங்களோ வரைமுறையற்றவை. கிண்டல், கேலி, நையாண்டி மற்றும் சாதி, மத, தனிமனித துவேஷங்கள் நிரம்பிய மாய உலகம். போலி புரட்சி வசனங்கள் போலி தத்துவங்கள், திடீர் பிரபலத்திற்கு ஆசைப்படும் தத்துபித்துவத்துவங்கள் நிறைந்த மந்திர உலகம். சமூகவலைத்தளங்களில் நல்லதே இல்லையா என்போருக்கு. இருக்கிறது பெரியவர்களான நாமே நல்லதை மட்டுமே கண்டுபிடிக்க திணரும் போது… அறியாத பருவத்தில் காண்பவை யாவும் அவர்களுக்கு நல்லதாகி போவதில் பெரும் ஆச்சர்யங்களென்ன?
இதே சூழலில் பதின்ம வயது வரை வளரும் பிள்ளைகள் வளர்ந்ததும் யாரேனும் ஏதாவது சொன்னால் வன்முறையில் இறங்குவதோ தற்கொலை செய்வதோ தவறென்று புரியுமா? தேர்வினில் தோற்பது எல்லாம் அவமானங்களா என்பதை மனது யோசிக்குமா? இதுவரை கேட்டது அனைத்தும் குறைவில்லாமல் கிடைத்த பிள்ளைகளுக்கு காதலிக்க மறுத்தவர்கள் மீது ஆசிட் ஊற்றுவதோ கத்தியால் குத்துவதோ தவறென்று புரியுமா? சமூகத்தில் எந்த பொதுப்பிரச்னை நிகழ்ந்தாலும் வன்முறையை கையிலெடுப்பது தானே அவர்களுக்கு தெரிந்தது. சினிமாக்களில் ஹீரோக்களும், சமூகவலைதள புரட்சியாளர்களும் அதைத் தானே தினந்தோறும் விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி செய்வதுதானே ஹீரோயிசம் என அவர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறோம்.

பொதுவாகவே தற்போதைய குழந்தைகளுக்கு ரசனை என்ற ஒன்று இல்லவே இல்லை என ஒரு ஆசிரியர் கூறியது எனக்கு நிச்சயமாக சாதாரணமான விஷயமாக படவில்லை. இன்றைய பிள்ளைகளுக்கு ஸ்கூலில், காலேஜில், ஹாஸ்டலில் பெரும்பாலும் யாருடனும் ஒத்துப்போகமுடிவதில்லை. இப்படியே வளர்ந்தபின் திருமண பந்தத்தில். இன்றைய பல திருமணங்கள் தோல்வியில் முடிவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதன் விகிதம் நிச்சயமாக கூடுமே தவிர குறையப் போவதில்லை நம் வளர்ப்பு முறைகள் மாறாதவரை… இதெல்லாவற்றையும் நாம் தானே முன்மொழிந்தோம். தற்போது நமது பிள்ளைகள் வழிமொழிகிறார்கள். இப்படியாக அவர்களை உணர்வற்றவர்களாகவே வளர்த்தெடுத்து விட்டு.. சும்மாவே தற்கொலை செய்துகொள்கிறார்கள்? வன்முறையை கையிலெடுக்கிறார்கள்? மோசமாய் வளர்கிறார்கள் என அவர்களை குறைசொல்வதில் ஏதேனும் உங்கள் தரப்பு நியாயங்களை வைத்திருக்கிறீர்களா ?? இப்போதும் ஏதும் கெட்டுவிடவில்லை தற்கால குழந்தைகளிடம் அறிவும், புத்திசாலித்தனமும், கற்பூர புத்தியும் ஏகமாய் கொட்டிக்கிடக்கிறது. அவர்களை சரியான முறையில் மடைமாற்றினால் நிச்சயம் சிறப்பானவர்களாக வலம் வருவார்கள். நாம் முதலில் சற்று மாறுவோம்! பின்னர் அவர்களை மாற்றுவோம்!!!
– தனுஜா ஜெயராமன்

You may also like

Leave a Comment

two + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi