Thursday, May 9, 2024
Home » ங போல் வளை… யோகம் அறிவோம்!

ங போல் வளை… யோகம் அறிவோம்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

பொன்னார் மேனியனே

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

பசுவின் உடல் முழுவதும் பால் இருந்தாலும், அதன் முலைக்காம்புகள் வழியாகவே சுரக்கிறது, என்கிற வேதாந்த தத்துவம் போல இந்த உடல் முழுவதும் உயிராற்றல் எனும் பிராணன் நிறைந்திருந்தாலும் நமது உயிர் தரித்திருக்க உதவுவது இதயமும், சுவாச மண்டலமும் தான். ஆகவே இதயம் நின்றுபோனவரையும், மூச்சு நின்றுபோனவரையும் நாம் பிணம் என்கிறோம் அல்லது ‘பிராணன் போயிடுச்சு’ என்கிறோம். அப்படி பிராணனுக்கு நிகராக நம் உடல் முழுவதும் பரவியிருப்பதும், இதயத்தில் தங்கியிருந்து உடலை காப்பதும் ஒரு தாது அது ஆயுர்வேதத்திலும் , யோக மரபிலும் ‘ஓஜஸ் ‘ எனப்படுகிறது.

ஓஜஸ் என்பதற்கு ஒளிர்வு, வீரியம், ஆற்றல் என பல பொருள்கள் இருக்கிறது சரக சம்ஹிதை போன்ற ஆயுர்வேத நூல்கள் இரண்டுவகை ஓஜஸை குறிப்பிடுகின்றன. முதலில் ‘பரா ஓஜஸ்’ எனப்படும் நாம் கருவில் இருந்த காலம் முதல் மரணம் வரை நம்மை உள்ளிருந்து காக்கும் ஒளி, எட்டு சொட்டுகள் அளவில் நம் இதயத்தில் தங்கி இருப்பது, இதை நாம் அன்றாடத்திற்கு பயன்படுத்த முடியாது, இந்த பரா ஓஜஸ் தான் நம் உயிர். இது அழிந்தால் நம் உடல் அழியும், ஆக, நாம் பிறக்கும் பொழுதே மரணத்திற்கு தேவையான கச்சாப்பொருளையும் இணைத்தே நம் உடல் உயிர் பெறுகிறது. இதற்கு அதிகரிக்கும் தன்மையும், குறையும் தன்மையும் கிடையாது.

அடுத்தது, ‘அபரா ஓஜஸ்’ எனப்படுகிறது, இது நம் உடல் முழுவதும் பரவியிப்பது, நம் உயிரின் கட்டுமானம் ஏழு தாதுப்பொருள்களால் ஆனது என்பதை முன்னரே பார்த்தோம், அந்த எழுவகை தாதுக்களில் ‘உன்னதமான ‘சாராம்சமான ‘ ஒன்றாக இந்த ‘அபரா ஓஜஸ்’ உருவாகிறது.ரசதாது முதல் சுக்ர தாது வரையுள்ள தாதுக்களில் உயர்ந்த சாரமாக இருப்பது ஓஜஸ் எனவும் நெய்ப்புத்தன்மையும், சீதவீர்யம் எனப்படும் குளுமையான இது, சிறிது சிவந்த பொன்னிறமானது என்றும் மாசற்றது என்றும் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த தேக ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக இருப்பதும், ஓஜஸிலிருந்தே உடலில் எல்லாவித காரியங்களும் உண்டாகின்றன என்றும் அஷ்டாங்க ஹிருதயம் சொல்கிறது. மேலும் கோபம் பசி அதீத சிந்தனை, வருத்தம், சிரமம், முதலியவற்றால் உடலில் ஓஜஸ் குறைகிறது, அப்படி குறைந்தால், பலம் குறையும், பயம் உண்டாகும், முகத்தில் பொலிவு நீங்கும் , உடல் இளைப்பும் , வறட்சியும் ஏற்படும் என்கிறது.

புஷ்டியான தேகம், மனமகிழ்ச்சி, பலம் இவை மூன்றும் நிறைவான ஓஜஸ் இருப்பதற்கான அறிகுறிகள், நமது உணவும், மூன்று தோஷங்களும் சமநிலையில் இருக்கும் பொழுதே தேக ஆரோக்யம் சிறப்பாக நிகழ்கிறது, மூன்று தோஷங்களும் விருத்தி அடையாமலும், க்ஷயமடையாமலும் அதாவது குறைந்தோ அழிந்தோ போகாமலும் காப்பாற்ற வேண்டும்.

ஆயுர்வேதமரபில் உள்ளது போலவே, நவீன மருத்துவதில், நோய் எதிர்ப்புச் சக்தியும், ஆல்புமின், வைட்டமின், ஆண்விந்து, பெண் உயிர்த்திரவம், க்ளைகோஜென், போன்ற உயிர் காக்கும் திரவங்களும், ஒஜஸ்க்கு குறிப்பிடப்படும் பண்புகளையும், பயன்களையும் கொண்டிருக்கிறது என இரண்டு தரப்பு மருத்துவமும் கற்ற மருத்துவ வல்லுநர்கள் கவனப்படுத்துகின்றனர், எனினும் ஓஜஸ் மீது இன்னும் ஆய்வுகள் செய்வதற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

யோகியருக்கும், துறவிகளுக்கும், தவசிகளுக்கும் இருந்த யோக மார்க்கத்தின் பயிற்சிகள் அனைவருக்குமானதாக வடிவமைக்கப்பட்ட காலகட்டம் கடந்த ஆயிரம் வருடங்களில் என யூகிக்க முடிகிறது. பதஞ்சலி யோக சூத்ரம் போன்ற இரண்டாம் நூற்றாண்டின் நூல்களில் கூட இன்றைய வடிவில் நாம் காணும் எந்த பயிற்சிகளையும் காண முடியவில்லை, பின்னர் வந்த குருமார்கள்தான் முழுமையாக அதை வடிவமைக்கிறார்கள், அப்படி வடிவமைக்கையில் ஆயுர்வேதமும், தாந்த்ரீகமும், நவீன மருத்துவமும் கொண்டிருக்கும் மனிதன் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கியே பயிற்சிகள் உருவாகின்றன.

உதாரணமாக 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஹத யோக பிரதீபிகா எனும் நூல் இன்றைய யோக வடிவத்தின் தொடக்கம் எனலாம், அதிலிருக்கும் பயிற்சிகள் ஓஜஸ் தேஜஸ், வாத, பித்த, கபம், போன்ற ஆயுர்வேத கொள்கைகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டவை. பிராணன் என்கிற கருதுகோளே ஆயுர்வேதத்திற்கும் முன்னர் இருந்த கருத்தின் தொடர்ச்சியே, அப்படியான அடிப்படைகளை வைத்தே பிரயாணயம் எனும் தனிப் பாடத்திட்டமே உருவாகியுள்ளது, அப்படித்தான், ஓஜஸ் எனும் கருத்தை மையமாக வைத்து யோகமரபு பல்வேறு பயிற்சிகளை கட்டமைத்துள்ளது, உதாரணமாக முத்திரைகள், பந்தம் எனும் உள்ளுறுப்புகளின் துணையுடன் செய்யவேண்டிய பயிற்சிகள், நாடிகளின் உதவியுடன் செய்யவேண்டிய பயிற்சிகள் என ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.

‘வஜ்ரோளி’ எனும் பயிற்சி இரண்டு அடிப்படைகளைக் கொண்டது, வஜ்ர என்பதற்கு இந்திரனின் மின்படை எனப்பொருள், வெல்லமுடியாததும், ஆற்றல் மிக்கதும், ஒளிர்விடக்கூடியதுமான இந்த மின்படை நம் ஒவ்வொருவரிலும் திகழும் வஜ்ர நாடி எனும் மைய முதுகுத்தண்டில் ஓடிப்பாயும் ஒரு நரம்புத்தொகுதி, இது பிறப்புறுப்பு ஆண் மற்றும் பெண்ணில் காமத்தை தூண்டவும், அதில் திளைக்கவும், இயற்கையில் கொடுக்கப்பட்ட ஒரு அமைப்பு, யோகியர் மேலே சொன்ன ‘வஜ்ரோளி’ எனும் பயிற்சியின் மூலம் உயிர்த்திரவங்களை வேறு பகுதிகளுக்கு, வேறு தேவைக்கு மடை மாற்றிவிடுகின்றனர், அது சிலருக்கு ஆன்மீகமான செயலுக்கானதாக இருக்கலாம், சிலருக்கு தீவிர சாதனைக்கு பயன்படலாம் இப்படி திசை திருப்பி விடப்படும் காமம் மற்றும் அது சார்ந்த ஆற்றலை , ‘ஓஜஸ்’ என்கிறது.

வஜ்ராசனம் எனும் பயிற்சியை பற்றி முன்னரே பார்த்தோம் அந்த ஆசனம் ஜீரண மண்டலத்துடன் நேரடியாக தொடர்புள்ளது. அதில் சொல்லப்படுவது, அந்த நிலையில் அமரும் ஒருவர் வஜ்ரடியை தூண்டுவதன் மூலம் செரிமான மண்டலத்தின் அக்னியை தூண்டுகிறார், அவருடைய உணவின் போஷாக்கு முழுவதுமாக உடலால் உறிஞ்சப்படுகிறது, அப்படி போஷாக்கு நிறைந்த தேகம் நோய் எதிர்ப்புச் சக்தியுடனும், சற்று மிளிரக்கூடியதாகவும் இருக்கும், குழந்தைகளின் கன்னத்தில், உடலில் ஒளிவிடுவது உணவிலிருந்து பெறப்பட்ட போஷாக்கின் ஓஜஸ் எனலாம். இப்படி செரிமான மண்டலத்தில் தொடங்கி, தோலின் நிறம்வரை ஓஜஸ் நிரம்பியிருக்கிறது.

ஷட் கர்ம சங்கிரஹம் எனும் யோக நூல் எழுவகை ‘வஜ்ரோளி’ பயிற்சியை முன்வைக்கிறது. இதன்படி இளமை, பலம், முழுமையான ஆரோக்யம், தீவிரத்தன்மை என நேர்மறை மாற்றங்களை பெற யோகமரபும் பிரத்யேகமான சில திட்டங்களைக் கொண்டுள்ளது. தாந்த்ரீக மரபில் காமம் அனுமதிக்கப்பட்ட ஒன்று,அது தீவிர சாதனையாளர்களுக்கு. எனினும் மற்ற மரபுகளில் ‘பிரம்மச்சரியம்’ மிக உயர்ந்த ஒன்றாகவும் காமத்தை ஒறுக்குவதால் தேஜஸ்விகளாக ஒளிமிக்கவர்களாக இருப்பதாக சொல்லப்படுகிறது, இவை இரண்டுமே அனைவருக்குமான பாதையன்று.

ஆகவே யோகமரபு காமத்தை அதன் ஆற்றலை வேறு பக்கம் திருப்புவதற்கும் அதன்மூலம் ஒளிமிக்கவர்களாக மாறுவதற்கும் பாடங்களை அமைத்திருக்கிறது. அன்றாடம் யோக பயிற்சி செய்வபர்கள், சில வருடங்களுக்குப் பின்னர் இதுபோன்ற ஆழ்நிலைப் பயிற்சிகளைத் தகுந்த ஆசிரியரிடம் கற்று தேர்ந்து மரணம் வரை உடலாலும் உள்ளதாலும் ஓஜஸ் தரக்கூடிய பலன்களை அடையலாம். அவ்வகை பயிற்சிகள் ஓஜஸை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்டவை.

உபவிஷ்ட கோணாசனம்

இந்த பகுதியில் நாம் உபவிஷ்ட கோணாசனம் எனும் பயிற்சியை காணலாம். கால்கள் இரண்டையும் நீட்டிய நிலையில் அமர்ந்து ஒரு மீட்டர் வரை விலக்கி வைத்து நிமிர்ந்து அமரவும், கைகளை தலைக்கு மேல் தூக்கி மூச்சை உள்ளிழுத்து மூச்சு வெளியே செல்லும் பொழுது படிப்படியாக முன்புறம் குனிந்து தரையை நெற்றியில் தொட முயலவும். முதுகு மற்றும் வயிற்றுப்பகுதிகளின் ஆரோக்கியத்திற்கான முக்கியமான ஆசனம். இதை பத்து முறை செய்யலாம்.

You may also like

Leave a Comment

4 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi