
ஊட்டி: தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில், ஒரு மாதத்திற்கு பின் பளிச் ஆனது ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள். ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் தாவரவியல் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானங்களில் அமர்ந்தும், விளையாடியும் பொழுதை கழிப்பது வாடிக்கை. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்காத வகையில், எப்போதும் இந்த புல் மைதானங்களை பச்சை பசேல் எனவும், சுத்தமாகவும் தொழிலாளர்கள் வைத்திருப்பார்கள்.
ஆனால், பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 23ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர். இதனால், பூங்கா பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. எப்போதும் பச்சை பசேல் என காட்சியளிக்கும் பூங்கா பெரிய மற்றும் சிறிய புல்மைதானங்கள் பொலிவிழந்து காணப்பட்டது. மேலும், ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் வீசிச் சென்ற குப்பைகள் அள்ளாமல் மிகவும் மோசமாக புல் மைதானங்கள் காட்சியளித்தன. இதனால், இங்கு வந்த சுற்றுலா பயணிகள் அதிருப்தியடைந்தனர். பூங்கா ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இதனால், கடந்த இரு நாட்களாக பூங்கா ஊழியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் பூங்காவில் மலர் செடிகள் பராமரிப்பு பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களிலும் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றிவிட்டனர். புல் மைதானங்களில் தூய்மை பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால், பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது பளிச் என காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகளும் ஆங்காங்கே அமர்ந்தும், விளையாடியும் பொழுதை களிக்கின்றனர்.