பூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், ஜானகி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (36). சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (33). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று கணவன், மனைவிக்கு இடையே வீட்டை சுத்தம் செய்வது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா தனி அறைக்குள் சென்றார். சீனிவாசன் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். பின்னர், சிறிது நேரம் கழித்து சீனிவாசன் சென்று பார்த்தார்.
அப்போது அறைக்குள் சென்ற சங்கீதா வெளியே வராததால் சந்தேகம் அடைந்து கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த சீனிவாசன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சங்கீதா தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கணவன், மனைவி இருவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதா வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று விஜயதசமியை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்யுமாறு சீனிவாசன் கூறியதாகவும், இதனால் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கீதா தற்கொலை செய்து கொண்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சங்கீதாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.