திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டெலகிராம், மெசஞ்சர் உள்பட சமூக வலைத்தளங்கள் மூலம் உல்லாசத்திற்காக மனைவிகளை ஒருவருக்கொருவர் கைமாற்றம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோட்டயம் அருகே உள்ள மணர்க்காடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் (28) போலீசில் அளித்த புகார் மூலம் இந்த அதிர்ச்சித் தகவல் வெளி உலகத்திற்கு தெரியவந்தது.
தன்னுடைய கணவர் ஷினோ மேத்யூ மனைவிகளை கைமாற்றம் செய்யும் சமூக வலைதள குரூப்புகளில் உறுப்பினராக இருப்பதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி இதில் ஈடுபடுத்தியதாகவும் புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். தன்னை 9 பேர் மிகவும் கொடூரமாக பலாத்காரம் செய்ததாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளம்பெண் தனது புகாரில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஷினோ மேத்யூ உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு இளம்பெண் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் கடந்த 19ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டது கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இளம்பெண்ணை அவரது கணவன் ஷினோ மேத்யூ தான் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஷினோ மேத்யூ தன்னுடைய வீட்டில் விஷம் குடித்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை ஷினோ மேத்யூ சிகிச்ைச பலனின்றி இறந்தார்.