Saturday, July 27, 2024
Home » விதைத்தது அவர்கள், அனுபவிப்பது நாம்!

விதைத்தது அவர்கள், அனுபவிப்பது நாம்!

by Lavanya

சுவாசத்துக்கும் சிந்தனைக்கும் தொடர்பு உண்டு. உண்மைதான். சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் அந்த ஓரிரு விநாடிகளில் நம் சிந்தனையும் கட்டுப் படுகிறது என்பது அனுபவ பூர்வமான உண்மை. ஆமாம், அந்த நேரத்தில் நாம் முற்றிலும் ‘ப்ளாங்க்’ ஆகிவிடுகிறோம். ஆனால், அந்த நிலை நீடித்திருக்க முடியாது என்பதால், நுரையீரல் காற்றுக்காக ஏங்கித் திணறும் என்பதால், நம் இயல்பான சுவாசத்துக்குத் திரும்புகிறோம். ஆனால், அந்த சூன்யம், ப்ளாங்க்னஸ், ஒரு நல்ல அனுபவம். ஒரு பயிற்சியாக இதனை மேற்கொண்டோமானால், அந்தப் பயிற்சி விநாடிகளிலாவது நாம் சிந்தனை வசப்படாமல் இருக்க முடியும், அதன் மூலம் புலன்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இயலும்.

கிருஷ்ணன், புல்லாங்குழல் வாசிப்பதன் தத்துவமும் இதுதானோ? மூச்சை உள்ளிழுத்து, பிறகு அதையே புல்லாங்குழல் வழியாக ஓர் இனிய இசையாக வெளியிடும்போது, அது கேட்போரையெல்லாம் கிறங்க வைக்கும். அதாவது, மூச்சை நம் ஆளுமைக்குள் கொண்டுவந்தால், நமக்கு மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் சந்தோஷம் விளையும் என்பதை கிருஷ்ணன் மறைமுகமாக உணர்த்துகிறாரோ என்றும் தோன்றுகிறது.

ஏனென்றால் பிராணாயாமப் பயிற்சியால் ஒருவருடைய மனம் மென்மையாகிறது, அவரால் தீயவற்றை சிந்திக்க இயலாது, அதனால் அவரது சொல்லும், செயலும் ஆக்கபூர்வமானதாகவே இருக்கும் என்று விளக்குகிறார் கிருஷ்ணன். இதற்குத் தன் புல்லாங்குழல் மோகன இசையை எடுத்துக் காட்டாகத் தெரிவிக்கிறார்!
“அபரே நியதாஹாரா ப்ராணான்ப்ராணேஷு ஜுஹ்வதி
ஸர்வேப்யேதே யக்ஞவிதோ ய்க்ஞக்ஷபிதகல்மஷா (4:30)’’

‘‘இன்னும் ஒருவகை யோகியர் நியமமான ஆகாரம் உட்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பிராணனை, பிராணனிலேயே ஹோமம் செய்யக் கூடியவர்கள். இத்தகைய யாகங்களால் அவர்களுடைய பாவங்கள் தீய்ந்துபோய் பரிசுத்தவான்களாக, ஞானிகளாக, ஆகிறார்கள்.’’ஆகாரம் என்பது உட்கொள்ளப்படுவது. வாயால் உட்கொள்ளப்படுவதை உணவு என்கிறோம். வாயைப் பொறுத்தவரை இது ஆகாரம். இந்தவகையில், பானங்களும் ஆகாரம்தான். இதேபோல பிற புலன்கள் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் எல்லாமும் அவ்வவற்றுக்கான ஆகாரமே! கண்களுக்குக் காட்சிகள், நாசிக்கு வாசம், காதுக்கு ஒலி, மேனிக்கு ஸ்பரிச உணர்வு – எல்லாமே ஆகாரம்தான். ஏற்கெனவே சொல்லியிருந்ததுபோல அந்தந்த ‘ஆகாரங்களே’ அந்தந்தப் புலன்களுக்கு ஆஹுதியாகின்றன. அதாவது, யாகம் தொடர்கிறது.

உடலைப் பொறுத்தவரை வாயால் உட்கொள்ளப்படும் ஆகாரம், உடல்நலத்தைச் சீராக வைக்க உதவுகிறது. இதில் ஒரு வேடிக்கையைக் கவனிக்கலாம். உணவாக மாறுமுன், அப்படி ஆகாரமாகும் பொருட்கள் உயிர்கொண்டவையாக இருந்திருக்கின்றன! சைவ உணவோ, அசைவ உணவோ எதுவுமே அதற்குமுன் உணர்வுள்ளவையாக இருந்திருக்கின்றன. தாவர இனங்கள் வாடுதல், அழுகுதல் போன்ற தம் இறுதி நிலைக்கு முன்னால் மனிதருக்கு ஆகாரமாகிவிடுகின்றன; ஆனால், அசைவ உயிரினங்கள் தாம் உயிர்நீத்த பின்னரே ஆகாரமாகின்றன என்பதுதான் வித்தியாசம்.

(சுவாமி சின்மயானந்தா அவர்கள், அசைவ உணவை உண்பவர்களைப் பார்த்து, ‘உங்கள் இரைப்பையை ஏன் சவக்குழிகளாக மாற்றிக் கொள்கிறீர்கள்?’ என்று கேட்பார்!) வாயைப் போல தத்தமது ஆகாரங்களை உட்கொள்ளும் பிற இந்திரியங்கள் அந்த ஆகாரங்களைத் தங்களுக்கே ஆஹுதியாக்கிக் கொள்கின்றன. இந்த ஆகாரங்கள் சாத்வீகமானவையாக இருத்தல் வேண்டும். வாய்க்கு வஞ்சமில்லை, எந்த உணவையும், அதன் சுவையைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளும்.

ஆனால், உடலுக்குள் செல்லும் அந்த உணவு, உடல் நலத்துக்கு ஏற்புடையதுதானா என்பதை வாய் அறியவேண்டும். நாக்குச் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக் கொள்ளப்படும் உணவுகள் பெரும்பாலும் உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பவையாகவே இருக்கின்றன. தனக்கு ஒவ்வாததை விலக்கும் முயற்சியில் உடல் நோய்வாய்ப்படுகிறது. (‘வயிற்றைக் கேட்டுக்கொண்டுதான் வாய் சாப்பிடவேண்டும்’ என்று ஜப்பானிய பழமொழி ஒன்று உண்டு!)

காரம் மிகுந்த மசாலாப் பொருட்கள், போதை தரும் லாகிரி வஸ்துகள், எளிதில் செரிக்காத கொழுப்பு வகைகள் என்று உடல்நலத்தை பாதிப்பதோடு, மனதையும் நல்வழியினின்று திசை திருப்பும் ஆகாரங்களைத் தவிர்ப்பது மேலே குறிப்பிட்ட யோகியரின் வழக்கமாக இருக்கிறது. ஏனென்றால் இந்தப் பொருட்களை அவர்களால் ஆஹுதியாக்க முடிவதில்லை.

ஆகவே தன் பிராணனையே பிராணனுக்கு ஆஹுதியாக்கும் வல்லமை படைத்த இத்தகைய யோகியர் எல்லாம் வல்லவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்களுக்கு எதைத் தவிர்க்க வேண்டும், எதை ஏற்கவேண்டும் என்று நன்கு தெரிந்திருக்கிறது. அதனாலேயே அவர்கள் பாபங்கள் தொலைந்தவர்களாகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ‘தான்’ என்று கருதாமல் எல்லாம் ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்ற உறுதியை அவர்கள் மேற்கொண்டிருப்பதால்தான்.

“யக்ஞசிஷ்டாம்ருதபுஜோ யாந்தி பிரஹ்ம ஸநாதனம்
நாயம் லோகோஸ்த்யயக்ஞஸ்ய குதோன்ய குருஸத்தம’’ (4:31)

‘‘குருகுல முதல்வனே, அர்ஜுனா, யக்ஞம் இயற்றும் யோகிகள் அதன் விளைவான ஞான அமிர்தத்தை அனுபவிக்கிறார்கள். இந்த அனுபவத்தால் அவர்களால் பரப் பிரம்மமான பரமாத்மாவை அடைய முடிகிறது. ஆனால், யக்ஞம் இயற்றாதிருக்கும் மக்களால், இவ்வுலகத்தின் சுகத்தையே அனுபவிக்க இயலாது என்னும்போது இவர்களால் பரலோக சுகத்தை எப்படி அனுபவிக்க முடியும்?’’

யக்ஞம் என்பது என்ன? கடமை, அப்பழுக்கற்றதாக நிறைவேற்றப்படும் கடமை. இத்தகைய யக்ஞத்தில் சுயலாபம் இல்லை, பொதுநல விழைவுதான் உண்டு. பரந்தாமனில் போய் முடிவதுதான் இவ்வாறு கடமையாற்றுவதன் நோக்கம். பரம்பொருளில் முடியும் இந்தக் கடமைகளால் விளைவது பொது நன்மைகளே. இத்தகைய யக்ஞத்தின் மூலமாக மிகவும் அரிதான பிரம்மத்தையே அடைய முடியும் என்னும்போது, பிற எல்லா நன்மைகளும் அந்த பிரம்மத்துக்கு அடுத்தவைதான் என்றாலும், அவையும் அடையப்பெறும் என்பதும் குறிப்பாக உணர்த்தப்படுகிறது.

கோயிலுக்குச் செல்வதாகிய ஒரு கடமையை எடுத்துக்கொள்வோம். கோயிலினுள் ஒவ்வொரு சந்நதியையும் வலம் வருகிறோம். அங்கே நம்மால் பக்தி அதிர்வலையை உணர முடிகிறதா, அப்படியானால் அங்கே நம் முன்னோர்கள் யக்ஞம் இயற்றியிருக்கிறார்கள் என்று அர்த்தம். வெறுமனே சுற்றி வராமல், ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், இதே பாதையில் நம் முன்னோர்கள் சென்றிருக்கிறார்கள், அவர்களுடைய ஆன்மிக அடிச்சுவட்டில் நாம் பயணிக்கிறோம் என்ற உண்மை நம் மனம் மற்றும் உடலெங்கும் வியாபிப்பதால், நம்மால் அந்த அதிர்வை உணர முடிகிறது.

ஆனால், அந்த முன்னோர்கள் எதை எதிர்பார்த்து அல்லது என்ன நோக்கம் கொண்டு இப்படி கோயிலை வலம் வருவதாகிய யக்ஞத்தை மேற்கொண்டிருந்திருப்பார்கள்? பின்னாளில் தங்களுடைய வாரிசுகள் இதே கோயிலுக்கு வருவார்கள், தம் பாணியிலேயே இறைப்பணி மேற்கொள்வார்கள், அப்போது தாம் ஜபித்த மந்திரங்களாலும், மேற்கொண்ட பக்தியுணர்வாலும் ஏற்படக்கூடிய அதிர்வலைகளை அனுபவிக்கட்டும் என்று நினைத்திருப்பார்களா? இருக்காது. அவர்கள் தம் கடமையாக, யக்ஞமாக இறைவழிபாட்டைக் கோயிலில் மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். அதன் பலாபலன்களைப் பற்றிச் சிந்தித்திருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் விதைத்ததை, இன்று நாம் சுவைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்களைப் போலவே நாமும் தன்னலம் கருதாமல் கடமை ஆற்றினோமென்றால், நம் சந்ததியும் நலமடையும்.

நகைச்சுவையாகச் சொல்வார்கள்: ஒரு ஓட்டலில், ‘நீங்கள் வயிறாரச் சாப்பிடுங்கள், உங்களுக்காகும் செலவை உங்கள் பேரப்பிள்ளையிடமிருந்து நாங்கள் வசூலித்துக்கொள்கிறோம்!’ என்று அறிவிப்புச் செய்திருந்தார்கள். இதைப் பார்த்த ஒருவர் அந்த ஓட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டார். அப்பாடா! பணம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டார். ஆனால், பணியாளர் பெரிய ஒரு தொகைக்கு பில் கொண்டுவந்து கொடுத்தார். ‘இதை நான் கட்டவேண்டியதில்லையே, என் பேரப்பிள்ளையிடமிருந்து வசூலித்துக் கொள்வீர்கள்தானே?’ என்று கேட்டார் சாப்பிட்டவர்.

‘இல்லை, சார், இது உங்கள் தாத்தா சாப்பிட்டதற்கான பில்’ என்று அமைதியாகச் சொன்னார் பணியாளர். இந்த நகைச்சுவை ஒருபக்கம் இருக்கட்டும், முன்னோர் செய்த எந்த காரியத்துக்கும், கடமைக்கும் விளைந்த பலன்களை அவர்களுடைய எச்சமாகப் பிறந்திருக்கும் நாம் அனுபவிக்கிறோம் என்பது உண்மை. குறைந்தபட்சம் இன்னாரது பேரன் என்று பெயர் விளங்கும்
வகையிலாவது!

ஒரு விதை, விதையாகவே தன் கடமையை ஆற்றுகிறது. அது உடனே மரமாகி விடுவதில்லை. ஒரு தளிராகக்கூட வளர முடியாமல் அது பட்டுப் போனாலும் அதற்காக அது வருத்தப்படுவதில்லை. எந்த நிலையிலும் அது சலனப்படுவதில்லை. விதையா, செடியா, மரமா, தான் எதுவாக வளர்ந்தாலும், தன் பலனை, மக்களுக்கு அனுபவிக்கத் தருவதாகிய தன் கடமையிலிருந்து அது வழுவுவதில்லை. ஞானியரும் அப்படித்தான். அவர்கள் தம் யக்ஞத்தை எந்த சலனத்துக்கும் ஆட்படாமல் செவ்வனே மேற்கொள்கிறார்கள். உயர் பதவி அடைகிறார்கள், அவர்கள் எதிர்பார்க்காமலேயே!

ஏவம் பஹுவிதா யக்ஞா விததா ப்ரஹ்மணோமுகே
கர்மஜான்வித்தி தான்ஸர்வானேவம் ஞாத்வா விமோக்ஷ்யஸே (4:32)

‘‘இப்படியாகப் பலவித யக்ஞங்கள், வேதத்தில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த யக்ஞங்கள் எல்லாமே மனம் மற்றும் புலன்களின் இயக்கங்கள் வழியாகவே இயற்றப்படுகின்றன. இதை அர்ஜுனா, நீ உணர்ந்துகொள். இதை உணர்ந்துகொண்டு, நிஷ்காம கர்ம யோகத்தின் மூலம் நீ சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவாயாக.’’ எந்த ஒரு செயலை நாம் மேற்கொண்டோமானாலும் அது அந்தந்த செயலுக்கேற்ற புலன் நுகர்ச்சியினைக் கொண்டதாகவே இருக்கிறது. அந்த நுகர்ச்சியில் நாம் ஆர்வம் காட்டும்போதும், அதிக அளவில் ஈடுபடும்போதும், செயலின் தன்மை மாறுகிறது, அதன் பின்விளைவுகள் அதற்கேற்ப அமைகின்றன. புலன் நுகர்ச்சியுடன் செயலாற்றும்போது மிகவும் உவப்பாக இருக்கிறது, ஆனால் செயல் முடிந்தபின் அந்த உவப்பு, துக்கமாக மாறுகிறது.

ஆனால், அந்த கர்மாக்களை, செயல்களை, யாகமாக மாற்றிக் கொண்டோமானால், பின்விளைவுகளின் தாக்கத்திலிருந்து நாம் தப்பிக்கலாம். இச்சைக்கு அடிமையாகும்போதுதான் கர்மாக்கள் பின்னமடைகின்றன. பாலைவனத்தில் சப்பாத்திக் கள்ளியைச் சுவைக்கும் ஒரு ஒட்டகம், சுவையில் மட்டுமே நாட்டம் கொள்வதால், கள்ளி யுடன் இருக்கும் முட்களை அது பொருட்
படுத்துவதில்லை. அது மட்டுமல்லாமல், அந்த முட்களால் வாய் கிழிந்து அதிலிருந்து வடியும் ரத்தத்தையும் அது சுவைத்து மகிழ்கிறது. பிறகு ஒரு சமயம், அவ்வாறு கிழிந்த பகுதி வலிக்கும்போதும், அந்த வலிக்கான காரணம் அதற்குப் புரியாது. ஆகவே, அடுத்த பசிக்கு மீண்டும் சப்பாத்திக் கள்ளியையே நாடிச் செல்லும். மறுபடி கள்ளியோடு ரத்தத்தையும் சுவைக்கும், சிறிது நேரத்தில் ரணத்தால் வேதனையுறும்!

இயல்பாக, பிறருக்கு வணக்கம் தெரிவிக்கும் மிகச் சிறிய கர்மாவையும் நம்மால் நிஷ்காமமாகச் செய்ய முடிவதில்லை. நாம் வணக்கம் தெரிவிக்கும் நபர், அந்த வணக்கத்துக்குத் தகுதியுடையவர்தானா என்று மனசுக்குள் மதிப்பீடு செய்கிறோம். நம்மைவிட வயது குறைந்தவராக அவர் இருப்பாரானால், அந்த ஈகோ, வணக்கம் தெரிவிக்கவிடாமல் தடுக்கும். அல்லது நம் தகுதியை மிகவும் உயர்ந்ததாக நாம் கற்பனை செய்து கொண்டிருப்போமானால், அந்த நபர் ஆட்டோமெட்டிக்காக நம்மைவிட தகுதி ‘இழந்து’ விடுவார். அல்லது அவர் நம்மைவிட பலசாலியாக இருப்பாரேயானால் பயத்தின் காரணமாக நம் கரங்கள் தாமாக அவர் முன் கூம்பும்.

நமக்கு முதலாளியாக, நம் ஜீவாதாரத்துக்கு வழிசெய்பவராக இருந்தாரானால், விருப்பம் இல்லா விட்டாலும், ஏதோ காரணத்துக்காகவாவது ‘கடனே’ என்று கரங்கள் குவியும் அல்லது முதலில் அவர் வணக்கம் தெரிவித்துவிட்டால், அதற்குப் பதிலாக வணக்கம் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு நாம் உட்படுகிறோம்.வெறும் வணக்கம் தெரிவிப்பதிலேயே இத்தனை இடையூறு இருக்குமானால், நாம் மேற்கொள்ளும் பிற எந்த செயல்களையும் எந்தப் பற்றில்லாமலும் நம்மால் ஈடேற்ற முடியுமா?

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi