Saturday, July 27, 2024
Home » வித்தியாசமான விக்ரகங்கள்

வித்தியாசமான விக்ரகங்கள்

by Porselvi

* சுருட்டப்பள்ளி தலத்தில் ஈசனின் கருவறைக்குப் பின் உள்ள திருமால், வலக்கையில் கபாலம் ஏந்தியிருக்கிறார்.
* பொதுவாக ஐந்து தலை ஆதிசேஷனின் மீது அனந்தசயனம் செய்யும் கோலம்தான் திருமாலுக்கு. ஆனால் சிதம்பரம் திருக்கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் ஏழு தலை ஆதிசேஷனின் மேல் சயனித்திருக்கிறார்.
* திருப்பதிக்கு அருகே உள்ள ரேணிகுண்டாவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகப் பெருமான்கள் திகழ்கிறார்கள்.
* குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மனும் ஞானமுத்தீஸ்வரனும் ஒரே பீடத்தில் வடதிசை நோக்கி எழுந்தருளியுள்ளனர். வேறு எந்த காளி கோயில்களிலும் இப்படி காண இயலாது.
*திருப்பூவனத்தில் பொன்னையாள் எனும் பக்தை சிவலிங்கத்தின் அழகில் மயங்கி அதைக் கிள்ளிய வடுவுடன் ஈசனை தரிசிக்கலாம்.
* தர்மபுரி கோட்டைக் கோயிலில் முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் மயில் மீது, ஐயப்பனைப் போல் குத்திட்டு அமர்ந்திருக்கிறார்.
* காவேரிப்பாக்கம் சிவாலயத்தில் தட்சிணாமூர்த்தி ஜடாமுடியுடனும் அட்சமாலை, அக்னி ஏந்தி காலடியில் உள்ள மானுக்கு உபதேசம் செய்யும் நிலையில் தரிசனம் தருகிறார்.
* வேலூர் – ஆற்காடு அருகே, திருவலம் ஈசன் ஆலயத்தில் ஈசனின் கருவறை முன் ஜனக முனிவரின் திருவோடு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
* சென்னை – பழவேற்காடு சின்னக்காவணம் சதுர்வேதீஸ்வரர் ஆலய அம்பிகை பாசம், அங்குசம் ஏந்தாமல் மேல் இருகரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, கீழிரு கரங்களில் அபய – வரதம் தரித்து மகாலட்சுமி அம்சமாய்விளங்குகிறாள்.
* சிங்கப்பெருமாள் கோயில் – ஸ்ரீபெரும்புதூர் பாதையில் உள்ள ஆப்பூர் மலையில் அருளும் பிரசன்ன வெங்கடாஜலபதி த்ரிபங்க நிலையில் மகாலட்சுமியை தன்னுள் ஏற்று அருள்கிறார். அதனால் இவருக்கு பட்டுப்புடவையே சாத்தப்படுகிறது.
* வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கலையழகு கொஞ்சும் திருமண மண்டபத்தில் குழந்தை வடிவில் தவழும் அற்புத விநாயகரை தரிசிக்கலாம்.
* கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாள், உத்தானசயனம் எனும் படுத்திருந்து சற்று எழுந்திருக்கும் பாவனையில் தரிசனம் அளிக்கிறார்.
* ஆனை மலையில் உள்ள மாசாணியம்மன் முப்பதடி நீளத்தில் சயனித்த திருக்கோலம் கொண்டிருக்கிறாள்.  இழந்த பொருளை திரும்பப் பெற மிளகாய் அரைத்துத் தடவும் பிரார்த்தனை இங்கு மேற்கொள்ளப்படுகிறது.
* வரகூரில் லட்சுமி ஹயக்ரீவர் தோற்றத்தில், திருமகளை மடியில் இருத்தி தழுவிய நிலையில் லட்சுமி நாராயணர் காட்சியளிக்கிறார்.
* திருச்சி, லால்குடி அருகில், அன்பிலில் உள்ள சிவதலத்தில் அப்பர், ஞானசம்பந்தர் பாடல்களை செவி சாய்த்துக் கேட்ட கோலத்தில் ‘செவிசாய்த்த விநாயகரா’கக் காணலாம்.
* பூம்புகார் அருகே, சாயாவனம் தலத்தில் வில்லேந்திய வேலவனைக் கண் குளிரக் கண்டு வணங்கலாம்.
* திருவாரூர் தியாகராஜர் ஆலய முதல் பிராகாரத்தில் ஐந்து தலை நாகம் படுத்திருக்க அதன் நடுவில் விரிந்த தாமரை மலரில் நடனமாடும் விநாயகரை தரிசிக்கலாம். யோக சாஸ்திரப்படி குண்டலினி விநாயகராக இவர் போற்றப்படுகிறார்.
* திருநெல்வேலி, தென்காசி அருகில், இலத்தூர் ஆதீனம் காத்த ஐயனார் ஆலயத்தில் எமனையும் அவன் மனைவி எமியையும் சிலை வடிவில் காணலாம்.
* மதுரைக்கு அருகே திருவாதவூர் ஆலய ஏரி, விஷ்ணு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த ஏரியின் அளவைக் காட்டும் கம்பத்தின் மேல் உள்ள புருஷாமிருகத்தை (மனிதன் பாதி மிருகம் பாதி) காவல் தெய்வமாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.
* திருச்சி, திருப்பாச்சிலாசிரமம் தலத்தில் முயலகனுக்குப் பதிலாக பாம்பின் மேல் நடனமாடும் நடராஜப் பெருமானை தரிசிக்கலாம்.

You may also like

Leave a Comment

20 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi