Sunday, June 2, 2024
Home » காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணி இணையத்தளத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணி இணையத்தளத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

by Lavanya

சென்னை: காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணி இணையத்தளத்தினை அமைச்சர். அன்பில் மகேஸ் தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கல்வியையும் கற்றல் முறையையும் ஜனநாயகப்படுத்தும் செயல்திட்டத்தை நமது பள்ளிக் கல்வித் துறை இலக்காகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்குச் செல்லவேண்டும் என்கிற நோக்கத்துடனும், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதை எளிதாக்கி சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை சரிசெய்து சமூக நீதியை நிலைநாட்டவேண்டும் என்கிற இலக்குடனும் தமிழ்நாடு அரசு 2023ம் ஆண்டில் மணற்கேணி செயலியை அறிமுகப்படுத்தியது.

பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே காணொலிப் பாடங்கள் கிட்டும் என்கிற நிலையைப் போக்கி அவற்றை அனைவருக்குமானதாக மாற்றுவதே அரசின் நோக்கம்.மணற்கேணி ஆசிரியர்களுக்கு துணைக் கருவியாக பயன்படக்கூடிய ஒன்று. மணற்கேணி செயலியை தரவிறக்கம் செய்து அதில் உள்ள பாடங்களை மாணவர்களுக்கு வகுப்பறையில் உள்ள ஸ்மார்ட் போர்டில் திரையிட்டுக் காட்டி பாடங்களை நடத்தி வந்த ஆசிரியர்கள் இனி இணையதளம் வாயிலாக பாடங்களை நடத்தலாம். காட்சிரீதியாக பாடங்கள் இருப்பதால் மாணவர்களுக்கு கற்றல் மேலும் எளிதாகும். மணற்கேணி செயலி உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆசிரியர்கள் மாணவர்கள் என எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டது.

இப்போது இணையதளம் மூலமாகவும் பயன்படுத்தலாம் என்பதால் அலைபேசி வாயிலாகவும் கணினி வாயிலாகவும் இதனை பயன்படுத்தலாம். இதன் எளிமையான பயன்பாடு இதன் நோக்கத்தை பறைசாற்றும். மணற்கேணி இணையதளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை பல பாடப்பொருள்களாக, வகுப்புகள் தாண்டி வகைபிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கங்களை உருவாக்கி அளித்திருக்கிறது கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி) நிறுவனம். இதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள காணொலிகள் பாடப்பொருள்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

6, 7, 8, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் முதற்கட்டமாக பாடப்பொருள்கள் காணொலியாக தரப்பட்டுள்ளன.ஒவ்வொரு காணொலியின் முடிவிலும் வினாடி-வினா வாயிலாக மாணவர்களின் புரிதல் திறனை சரி பார்க்கும் வசதியும் உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நடத்திய பாடம் முறையாகப் புரிந்திருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ள முடியும். முதல் கேள்வி எளிமையாகத் தொடங்கி படிப்படியாக விடையளித்துக் கொண்டே வருகையில் கொஞ்சம் கொஞ்சமாக கேள்விகளின் கடினத் தன்மை கூடிக் கொண்டே வரும்.

ஒவ்வொரு கேள்விக்குமான விரிவான விடைகளும் காணக் கிடைக்கும். ஏதேனும் ஓரிடத்தில் மாணவர்களுக்கு புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது எனில் ஆங்காங்கே அவர்களுக்கான உதவிக் குறிப்புகளும் உண்டு. மணற்கேணியில் உள்ள காணொலிப் பாடங்கள் முறையான கற்றல் பயணத்திற்கு வழிவகுக்கின்றன. Laddered Learning approach எனப்படும் அணுகுமுறை இதில் கையாளப்பட்டுள்ளது. அதாவது எடுத்துக்காட்டாக, பன்னிரண்டாம் வகுப்பில் வரும் ஒரு பாடப்பொருளை முறையாகப் புரிந்து கொள்ள ஆறாம் வகுப்பில் அதற்கான அடிப்படைப் பாடம் இருக்கிறது என்றால் அதைப் படித்துப் புரிந்துகொண்டுவிட்டு பின் ஏழாம் வகுப்பில் அது குறித்துப் பாடமிருந்தால் அதையும் படித்துவிட்டு படிப்படியாக பன்னிரண்டாம் வகுப்புப் பாடப்பொருளுக்கு வரலாம்.

இதன்மூலம் பாடங்களை எளிதில் புரிந்துகொள்வதற்கும் எதையும் விட்டுவிடாமல் படிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. திரையில் தொழில்நுட்பக் கலைச் சொற்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் காணலாம். கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாட்டை மணற்கேணி மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றும். இப்படிப் பயிற்றுவிப்பதன் வாயிலாக பொதுத் தேர்வில் கேட்கப்படும் எந்த வகையான கேள்விகளுக்கும் மாணவர்கள் எளிதாக விடையளிக்க முடியும். அது மட்டுமல்லாமல் ஜே.ஈ.ஈ போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கும் எளிதில் தயாராக முடியும். கடந்த பல ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் அடங்கிய வினா-விடை வங்கி ஒன்றும் உண்டு.

போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகைக்கான தேர்வுகள் என அனைத்தையும், மணற்கேணியை துணைக்கருவியாகக் கொண்டு பாடங்களை கற்பிப்பதன் மூலம் மாணவர்களை மிக எளிதாக ஆசிரியர்கள் வெற்றிகொள்ள வைக்க முடியும். இந்தக் காணொலிகள் 2டி மற்றும் 3டி அனிமேஷன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன என்பதால் கற்போர் உடனடியாகப் புரிந்து கொள்வதற்கும் புரிந்து கொண்டவற்றை நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் உகந்தவை. சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்திக் கொள்ளும் விளக்கப்படங்கள் உள்ளதாலும் கற்றல் முற்றிலும் ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது எனலாம்.

அனைத்துக் காணொலிகளையும் கேள்விகளையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள கடவுச்சொல் எதுவும் தேவையில்லை. எந்தத் தடையும் இன்றி மிக எளிதாக அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மணற்கேணி இணையதள முகவரி : <https://manarkeni.tnschools.gov.in> அலைபேசியில் மணற்கேணி செயலியை ப்ளே ஸ்டோரில் தேடவேண்டுமெனில் TNSED Manarkeni என்று உள்ளீடு செய்து தேடவேண்டும். இதுவரையிலும் 2,00,000 முறை இச்செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது உருவாக்கப்பட்ட மணற்கேணி இணையதளம் வாயிலாக இன்னும் அதிகமானோரை இக்காணொலிகள் சென்று சேரும்.

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi