Monday, May 20, 2024
Home » விதவிதமாய் விநாயகர்

விதவிதமாய் விநாயகர்

by Kalaivani Saravanan
Published: Last Updated on

* காஞ்சிபுரத்தை அடுத்த தேனம்பாக்கம் சிவாலயத்தில் அம்மையப்பனுடன் அருள்புரியும் சோமகணபதியை தரிசிக்கலாம்.

* திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் உக்ரம் தணிக்க தேவியின் காதுகளில் ஸ்ரீசக்ரம், சிவசக்ரம் பொறித்த தாடகங்கள் அணிவித்த பிறகும், உக்ரம் தொடர்ந்தது. உடனே ஆதிசங்கரர் அன்னையின் முன் விநாயகரைப் பிரதிஷ்டை செய்ய, உடனே தேவி குளிர்ந்தாள். அந்த விநாயகரை இன்றும் தரிசிக்கலாம்.

* சென்னை கிழக்கு தாம்பரம் ஸ்கந்தாஸ்ரமத்தில் புவனேஸ்வரி அன்னையின் எதிரே சுவாமிநாதன் எனும் பெயரில் முருகப் பெருமான் அருள, விநாயகர், கமல விநாயகர் எனும் திருநாமத்துடன் தேவியின் கருவறையருகே சந்நதி கொண்டுள்ளார்.

* திருப்பாதிரிப் புலியூர் எனும் கடலூரில் அன்னை பெரிய நாயகியின் தவத்திற்கு உதவிய விநாயகர் கையில் பாதிரி மலர்களை ஏந்தி தரிசனமளிக்கிறார்.

* ஆந்திர மாநில ஸ்ரீசைலம், மல்லிகார்ஜுனர் ஆலயத்தில் கைகளில் எழுத்தாணி, ஏடு வைத்துக் கொண்டு சாட்சி கணபதி அருள்புரிகிறார். கோயிலுக்கு வருவோரை சாட்சியாக குறித்து வைத்துக் கொள்ளவே இவை இரண்டுமாம். இவரை வணங்கியபின்தான் பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனரை தரிசிக்க வேண்டும் என்பது நியதி.

* காஞ்சிபுரம் வேலூர் பாதையில் உள்ள திருவலம் எனும் திருத்தலத்தில் மாங்கனிக்காக அம்மையப்பனை வலம் வந்த விநாயகரையும் அந்த விநாயகருக்கு மாங்கனியை அளித்த தனுமத்யாம்பாளையும் தரிசித்து மகிழலாம்.

* சென்னையில், நங்கநல்லூர் செல்லும் வழியில் உள்ளகரம் எனும் இடத்தில் விஜய கணபதி கோயில் கொண்டருள்கிறார். இங்கு விஜயகுமாரசுவாமி, விஜயதுர்க்கை, விஜய மணிகண்டன், விஜயமாருதி என எல்லோருமே விஜய எனும் அடைமொழியுடன் வணங்கப்படுகின்றனர். இந்த ஆலயத்தில் தினந்தோறும் கணபதி ஹோமம் நடைபெறுவது சிறப்பு.

* பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது வந்த அமிர்தத்தை, தன்னை வணங்காததால் விநாயகர் மறைத்தார். தவறை உணர்ந்த தேவாசுரர்கள் அவரை வணங்க, அமிர்தத்தை காட்டியருளிய விநாயகரை திருக்கடவூரில் கள்ளவாரணப் பிள்ளையார் எனும் பெயரில் தரிசிக்கலாம்.

* லிங்கம் போன்ற பாண உருவமும், அதில் கணபதி உருவமும் கொண்ட வித்தியாசமான விநாயகரை தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் காணலாம். விழுது விடாத மூன்று ஆலமரங்கள் இத்தலத்தில் மும்மூர்த்திகளாக வணங்கப்படுகின்றன.

* திருப்பூவனம் திருத்தலத்தில் மந்திர விநாயகர், கற்பக விநாயகர், ஒட்டுக்கல் வெள்ளை விநாயகர் என மூன்று விநாயகப் பெருமான்கள் திருவருள் புரிகின்றனர்.

* சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலை சென்றபோது, ஔவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஔவையார் கணபதி பூஜையை முடித்துவிட்டுத் தான் வருவேன் எனக் கூறிவிட, அவர்கள் முனே சென்றார்கள். ஆனால், கணபதி பெரிய விஸ்வரூபம் எடுத்து ஔவையை அவர்களுக்கு முன்பே கயிலையில் சேர்த்தார். அந்த திருவடிவத்தை, திருக்கோவிலூரில் பெரியானை கணபதி எனும் பெயரில் தரிசிக்கலாம்.

* கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் 15 ஆண்டுகள் திருப்பணி நடைபெற்றது. அப்போது திடீரென மன்னன் கணக்குப்பிள்ளையிடம் சந்தேகப்பட்டு கணக்கு கேட்க, கணக்கெழுதாத அவர் கணபதியிடம் புலம்ப, கணபதி கணக்கு விவரங்களை துல்லியமாக அவனுக்கு அறிவித்தார். அந்த விநாயகர் கணக்கு விநாயகராக இன்றும் அருள் புரிகிறார்.

* காஞ்சிபுரம் காமாட்சி ஆலயத்தில், சிந்தூர கணபதி, விக்ன நிவாரண கணபதி, பிரசன்ன கணபதி, இஷ்டசித்தி கணபதி, துண்டீர மகாராஜ கணபதி, சக்தி கணபதி, சௌபாக்ய கணபதி, சந்தான கணபதி, வரசித்தி கணபதி, திருமஞ்சன கணபதி, மற்றும் சந்நதி வீதியில் ஏலேல விநாயகர் என ஏகப்பட்ட கணபதிகள் அருள்கின்றனர்.

* தன் தந்தையான ஈசனை இஷ்ட தெய்வமாக வழிபட்ட நீலகண்ட விநாயகரை சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் தனி சந்நதியிலும், தன் தாயைப் போல் வடிவெடுத்த விக்னேஸ்வரி எனும் விநாயக வடிவை ஆலய தூணிலும் தரிசிக்கலாம்.

* நாவல், பவளமல்லி, வில்வம், அரசு, நெல்லி, அத்தி, மந்தாரை, வேம்பு, வன்னி ஆகிய ஒன்பது தலவிருட்சங்கள் சூழ வீற்றருளும் விநாயகரை மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தரிசிக்கலாம். இவரை வழிபட நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன.

* நாட்டரசன்கோட்டை அருகே உள்ள வாணியங்குடி எனும் ஊரில் அடைக்கலம் காத்த அம்மன் ஆலயத்தில் விநாயகப் பெருமான் அம்பிகை வடிவில் வழிபடப்படுகிறார்.

* காஞ்சிபுரம் திருவோணகாந்தன் தளி கருவறை மண்டபத்து முகப்பில் விநாயகர் சந்நதி ஒன்று உண்டு. அவரது அருகில் நமது காதுகளை ஒட்டி வைத்துக் கேட்டால் ஓம் எனும் சத்தம் ஒலிக்கிறது. அதனால் அந்த விநாயகரை ஓங்காரஒலி விநாயகர் என்றழைக்கிறார்கள்.

* ஓர் அங்குலம் முதல் ஓரடி வரை உள்ள வித விதமான விநாயகர்களை தரிசிக்க கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லவேண்டும். சோழர்கால மன்னர்களின் அற்புதப் படைப்பு அவை.

* தன் இரு அன்னையரான கங்கையும், பார்வதியும் இருபுறங்களிலும் வீற்றிருக்க திருவருள் புரியும் விநாயகரை திருநெல்வேலி காரையாரில் உள்ள அருவிக்கரையில் தரிசிக்கலாம்.

* விடியல் முதல் இரவு வரை சுடச்சுட நெய் அப்பம் ஊற்றி அதை கணபதிக்கு அபிஷேகம் செய்யும் ஆலயம், கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் உள்ளது. பின் அந்த அப்பம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi