Sunday, September 1, 2024
Home » முன்னோக்கிய ஓட்டமே வெற்றியை வசப்படுத்தும்!

முன்னோக்கிய ஓட்டமே வெற்றியை வசப்படுத்தும்!

by Porselvi

ஓட்டத்தின் சிறப்பை எப்போதாவது உணர்ந்தது உண்டா?அரை கிலோ மீட்டர் தொலைவு கூட தொடர்ந்து ஓட இயலாதவராக ஒருவர் இருக்கிறார். ஒரு வெறிநாய் அவரைத் துரத்துவதாக வைத்துக்கொள்வோம். அரை கிலோ மீட்டர் தூரத்தை கூட ஓட இயலாத அவர் உயிரை மீட்டுக்கொள்வதற்கு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருப்பார்.பல மைல்கற்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தாலும், அவர் ஓட்டத்தில் வேகம் குறையாமல் இருக்கும். அந்த நேரத்தில் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த வீரனால் கூட அவருடைய ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. ஏனெனில் உயிருக்காக ஓடும் போது பலவீனமான கால்கள் மட்டுமல்ல, உடலில் எல்லா உறுப்புகளுமே ஓடுகின்றன. இலட்சியத்திற்காகப் பயணிக்கும்போது இப்படி ஒரு ஓட்டத்தை முடக்கி விடுவது கட்டாயத் தேவையாகிறது, இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்,துயரத்தை தாண்டி இலட்சியத்தை அடைந்தவர்தான் ரெபேகா.

அமெரிக்காவில் நடைபெறும் பாஸ்டன் மாரத்தான் போட்டி மிகவும் பழமையான மிகவும் புகழ்பெற்ற ஒன்று. உலகம் முழுவதும் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். பல லட்சக்கணக்கான மக்கள் போட்டியைக் காண்பதற்கு 42 கி.மீ தூரத்துக்கு அணிவகுத்து நிற்பார்கள். 2013 ஆம் ஆண்டு பாஸ்டன், மாரத்தான் போட்டியைக் காண தன் ஐந்து வயது மகனுடன் வந்திருந்தார் ரெபேகா க்ரெகோரி.திடீரென்று 20 அடி தூரத்தில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. மக்கள் அலறிக்கொண்டு ஓடினார்கள். அந்த விபத்தில் கீழே விழுந்து கிடந்த ரெபேகாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன் பிறகு மயங்கிவிட்டார் ரெபேகா.மருத்துவமனையில் ஒரு வாரம் கோமாவில் இருந்து விழித்த போது தான் அவர் உடலில் 17 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது தெரிந்தது.அதில் இடது கால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. 56 நாட்களுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தார்.குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்ததில் எனக்கு மிகவும் சந்தோசம்தான், ஆனால் என் வாழ்க்கை முற்றிலும் திருப்பிப் போடப்பட்டு விட்டது. என்னால் பழைய மாதிரி இருக்க முடியாது. அமைதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் நடைபெற்ற ஒரு மாரத்தான் போட்டியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது எத்தனை துயரமான விஷயம் என்கிறார் ரெபேகா.

அம்மாவின் அரவணைப்பிலும், அன்பிலும் ரெபேகாவின் உடலும் உள்ளமும் வேகமாகத் தேறின. வாழ வேண்டும் என்கிற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டார். அதற்குள் அடுத்த மாரத்தான் போட்டி வந்துவிட்டது. அதில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு. சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு போட்டி நடைபெற்ற இடத்துக்குச் சென்றார் ரெபேகா. உலகம் முழுவதும் இருந்து வந்த போட்டியாளர்களைச் சந்தித்தார் உரையாடினார்.எத்தனையோ அறுவை சிகிச்சைகள் செய்த பிறகும் கால் பிரச்னைக்கு மேல் பிரச்னையை கொடுத்தது. 18 மாதப் போராட்டங்களுக்குப் பிறகு மருத்துவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். இடது காலை முட்டிவரை அகற்றிவிடுவது என்று தீர்மானித்தனர். வேறு வழியின்றி அந்த முடிவை ஏற்றுக்கொண்டார் ரெபேகா. கடைசியாக ஒருமுறை தன் கால் நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டார். முட்டி முதல் பாதம் வரை தடவிக் கொடுத்தார்.மீண்டும் மருத்துவமனைக்கு சென்று கால் அகற்றப்பட்டு பல அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. காயம் ஆறிய பிறகு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. காலுக்கும் செயற்கை காலுக்கும் கடுமையான போராட்டம் அடிக்கடி செயற்கைக் கால் மாற்றம் செய்யப்பட்ட பிறகு பொருத்தப்பட்டது.

செயற்கைக் காலால் முதலில் நடக்க கஷ்டமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி எடுத்து இயல்பாக நடக்கும் அளவுக்கு முன்னேறினார். தன்னம்பிக்கை அதிகரித்தது. மாரத்தானில் பங்கேற்பதற்கு பயிற்சி எடுத்துக்கொள்ள நினைத்தார். தன்னைப்போல கால் இழந்த பயிற்சியாளர்களிடம் சேர்ந்தார்.வாரத்துக்கு 5 நாளில் பயிற்சி, செயற்கைக் காலுடன் ஓடுவது எவ்வளவு கடினமானது என்பது அப்போதுதான் தெரிந்தது. ஆனாலும் முயற்சியை கைவிடவில்லை ரெபேகா.மாரத்தான் போட்டி நெருங்கிக் கொண்டிருந்தது. தன்னால் முழு மாரத்தான் தூரத்தையும் கடக்க முடியாது என்கிற உண்மையை உணர்ந்து கொண்டார்.ஆனால் குறிப்பிட்ட தூரமாவது ஓடி எல்லைக்கோட்டை தொட்டுவிட வேண்டும் என்று உறுதிகொண்டார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எந்த போட்டியில் அவர் காலை இழக்க நேரிட்டதோ, அதே போட்டியில் இரண்டு காலுடன் வந்து கம்பீரமாக நின்றார். எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தார்கள். 5 கி.மீ தூரத்தைக் கடப்பதுதான் ரெபேகாவின் இலக்கு. அவருடைய பயிற்சியாளரும் ஓடி வந்தார். நடுவே மழை பெய்து, ஓட்டத்தை இன்னும் கடினம் ஆக்கியது. ஓட முடியாத நிலை வரும்போதெல்லாம் பயிற்சியாளரின் கையைப் பிடித்துக்கொண்டு ஓடினார். எல்லைக்கோடு நெருங்க நெருங்க கால் வலி அவருக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. மக்களின் உற்சாகம் காதைப் பிளந்தது. எல்லைக்கோட்டை தொட்டவுடன் அப்படியே தரையில் உட்கார்ந்தார். வாய்விட்டுக் கதறி அழுதார். காலை இழந்தாலும் தன்னால் இவ்வளவு தூரம் ஓடி சாதனை செய்ய முடிந்திருக்கிறது என்கிற பெருமிதத்தில் ஏற்பட்ட அழுகை அது.

பார்வையாளர்கள் ரெபேகாவின் பெயரைச்சொல்லி வாழ்த்தியபடி, தொடர்ந்து கைதட்டினார்கள். வாழ்த்து மழையில் நனைந்தார். நாங்க என்ன செய்தோம் எங்களுக்கு ஏன் இந்த நிலை என்று குண்டு வெடிப்புக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரெபேகா கேட்காத நாளே இல்லை. ஆனால் இன்று முற்றிலும் வேறு மன நிலையில் இருக்கிறார். ஒரு காலை இழந்து, 30 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு இன்னும் பூமியில் உயிருடன் நடமாடுகிறேன். ஒரு வெடிகுண்டு என்னுடைய மன வலிமையை பன்மடங்கு கூட்டியிருக்கிறது. என்னுடைய திறமையை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறது. என்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை வகுப்பு எடுக்க வைத்திருக்கிறது. மிக முக்கியமாக இந்த மனித வாழ்க்கை எவ்வளவு உன்னதமானது என்பதை உணர வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளின் விடியலையும் கொண்டாடும் மனநிலையில் இருக்கிறேன். ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். எந்த சோதனையையும் ஒரு கை பார்க்கக் காத்திருக்கிறேன் என்கிறார் ரெபேகா. ஒரு மிகப்பெரிய குண்டுவெடிப்புக்கு பிறகு நம்பிக்கையுடன் மீண்டெழுந்து, மாரத்தான் போட்டியிலே வெற்றி பெற்று சாதித்த ரெபேகாவின் வாழ்க்கை சாதிக்க துடிக்கும் இன்றைய பெண்களுக்கு நம்பிக்கையை மலர செய்யும் உன்னத பாடமாகும்.

 

You may also like

Leave a Comment

twenty − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi