Wednesday, May 15, 2024
Home » ?வாஸ்து எந்திரம் என்றால் என்ன? அதை எதற்காக பயன்படுத்துகிறார்கள்?

?வாஸ்து எந்திரம் என்றால் என்ன? அதை எதற்காக பயன்படுத்துகிறார்கள்?

by Lavanya

– ஜி.எஸ்.கிருஷ்ணன்.

அது எந்திரம் அல்ல. “யந்த்ரம்’’ என்று அழைக்கப்படும் செப்புத்தகடு. ஒரு செப்புத்தகட்டில் வாஸ்து தேவதைக்கான லட்சணங்களோடு ஒரு வரைபடத்தினை பொறித்திருப்பார்கள். அந்த செப்புத்தகட்டை 48 நாட்கள் வாஸ்துவின் மூல மந்த்ரம் ஜபித்து நன்றாக உருவேற்றி இருப்பார்கள். அதனை வியாபாரத் தலங்களிலோ அல்லது வீட்டிலோ வைத்து பூஜிக்கும்போது வாஸ்து தோஷம் என்பது அந்த இடத்தில் இருக்காது என்பது நம்பிக்கையாக உள்ளது. கடுமையான தோஷம் இருப்பதாகக் கருதினால் இந்த யந்த்ரத்தை அந்த இடத்தில் பூமிக்குள் புதைத்து வைக்கும் பழக்கமும் உள்ளது. வாஸ்து தோஷம் நீங்குவதற்காக இந்த யந்த்ரத்தை பயன்படுத்துகிறார்கள்.

? நிலத்தடி நீர் உயர ஏதாவது வாஸ்து இருக்கிறதா?
– செஞ்சி.வரதராஜ்.

மழைநீர் சேகரிப்பு என்கிற உயர்ந்த வழி இருக்கிறது. எல்லாவற்றையும்விட நீரை அமிர்தத்திற்கு இணையாக மதிக்க வேண்டும் என்கிறது வேதம். “அமிர்தம் வா ஆப:’’ என்பது வேதவாக்கு. “ஆப:’’ என்றால் தண்ணீர் என்று பொருள். தண்ணீர்தான் இந்த பூவுலகின் அமிர்தம் என்று வேதம் வலியுறுத்திச் சொல்கிறது. அமிர்தம் என்பது உயிரைக் காக்கும் என்பது நாம் அறிந்ததே. ஒரு மனிதன் மயக்கமடைந்து கீழே விழுகிறான் என்றால் முதலில் அவனுக்கு தண்ணீர்தான் கொடுப்பார்கள். பாலையோ தேனையோ அல்லது பழச்சாறினையோ தருவதில்லை. அந்த தண்ணீர்தான் அவனது உயிரைக் காக்கும் அமிர்தமாக செயல்படுகிறது. அத்தகைய நீரை வீணாக்காமலும் மழை நீரை சேமித்து வைத்தலுமே நிலத்தடி நீர் உயர்வதற்கான எளிதான வழி என்பதை உணர்ந்தாலே போதுமானது. நிலத்தடி நீர் உயர்வதற்கு என்று தனியாக வாஸ்து லட்சணம் எதுவும் கிடையாது.

?கஜ பிரிஷ்டா என்பது என்ன?
– வி.அனுஷா, வேளச்சேரி – சென்னை.

ஆலயக் கட்டிடக் கலையில் மிகவும் பிரபலமான ஒரு முறை இந்த கஜபிரிஷ்டா முறை ஆகும். கஜபிரிஷ்டா என்ற வார்த்தைக்கு யானையின் பின்புறம் என்று பொருள். திராவிட தேசத்தில் கட்டப் பட்டுள்ள பழங்கால ஆலயங்களில் பெரும்பாலானவை இந்த முறையில் கட்டப்பட்டதே ஆகும்.

?முன் ஜென்ம புண்ணியத்தின் அடிப்படையில்தான் இந்த ஜென்ம வாழ்க்கை அமைகிறது என்கிறார்களே உண்மையா?
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

நிச்சயமாக. பதவி பூர்வ புண்யானாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது, முன் ஜென்மத்தில் நாம் செய்யும் புண்ணியம்தான். இந்த ஜென்மாவில் நாம் அனுபவிக்கின்ற வாழ்வியல் வசதிகளைத் தருகிறது என்பதை உறுதியாக அடித்துச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

?காகம் தலையில் அடித்துவிட்டுச் சென்றால் அபசகுனமா?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

அபசகுனம் என்று எண்ணுவதைவிட, அதனை தோஷமாகக் கருத வேண்டும். காகம் தலையில் அடித்துவிட்டுச் சென்றால், உடனடியாக தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
ஸ்நானம் செய்த பின்னர், இரும்பு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் முகம் பார்த்துவிட்டு, இயன்றளவில் தட்சணை வைத்து தானம் செய்துவிட வேண்டும்.

?தாயோ தந்தையோ இறந்துவிட்டால், ஒரு வருடம் பூர்த்தியாவதற்கு முன்பே மகன், மகளுக்கு திருமணம் செய்யலாமா?
– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

அவர்கள் உயிருடன் இருக்கும்போதே நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால், காலதாமதம் செய்யாது கருமகாரியம் முடிந்த கையோடு உடனடியாக நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணத்தை நடத்திவிடலாம். அவர்கள் உயிருடன் இருக்கும்போது நிச்சயம் செய்யாமல் இருந்தால், திருமணம் செய்வதற்கு என்று ஒரு சில விதிகள் உண்டு. திருமண வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள் எனும்போது, ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தந்தை இறந்திருந்தால் மூன்று மாதத்திற்கு பின்னரும், இறந்தவர் தாயாராக இருந்தால் ஆறுமாதம் கழித்தும் மகன் அல்லது மகளின் திருமணத்தை நடத்திவிடலாம். அதே நேரத்தில், ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் எனில் காலம் தாழ்த்தாது கரும காரியம் முடிந்தவுடன் உடனடியாக நடத்திவிட வேண்டும் என்பதை சாஸ்திரம் வலியுறுத்திச் சொல்கிறது.

?ஒருவர் மறைந்துவிட்டால் அடிக்கடி கனவில் வருவதன் காரணம்?
– கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

இறந்தவர்கள் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் எனும்போது, இதுபோன்று கனவில் வருவது என்பது சகஜம்தான். அதே நேரத்தில் அவர் இறந்து ஆறுமாத காலம் கழித்தும் தொடர்ந்து கனவில் வந்து கொண்டிருந்தால், அவரது ஆன்மா எதையோ எதிர்பார்க்கிறது என்பதே பொருள். ஏதோ ஒரு ஆசை நிறைவேறுவதற்கு முன்னதாக உயிர் துறந்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்வதோடு, கனவு கண்டவர் அது என்ன என்பதைக் கண்டறிந்து அதனை உடனடியாக நிறைவேற்றி வைக்க வேண்டும்.

?பூஜை அறையில் அதிக ஸ்வாமி படங்கள் இருக்கலாமா?
– த.நேரு,வெண்கரும்பூர்.

இருக்கலாம். அதே நேரத்தில், அவை அனைத்தும் சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு இருக்க வேண்டும். சந்தனம், குங்குமம் பொட்டுக்கள் தவிர்த்து வேறு எந்தவிதமான அழுக்கும் இருக்கக் கூடாது. தினசரி புதிதாக பூக்களை வைக்க வேண்டும். நல்லபடியாக பராமரித்து வந்தால், எத்தனை சுவாமி படங்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

?அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள் எத்தனை காலம் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும்?
– பி.கனகராஜ், மதுரை.

ஆயுட்காலம் என்பது முடிவடைவதற்கு முன்னதாக ஒரு விபத்தின் மூலமாகவோ கொலை அல்லது தற்கொலையின் மூலமாகவோ உயிர் இழந்தவர்களை அகால மரணம் அடைந்தவர்கள் என்று குறிப்பிடுகிறோம். இவர்களுடைய ஆன்மா சாந்தி அடைவதற்கும், பித்ருலோகம் சென்றடைவதற்கும் நம்முடைய சாஸ்திரத்தின்படி “நாராயண பலி’’ முதலான கர்மாக்கள் உண்டு. இந்த நாராயணபலி முதலான கர்மாவினை இறந்த உடன் செய்ய இயலாது. இறந்தவரின் அஸ்தியை தனியாக எடுத்து வைத்து ஆறுமாத காலம் கழித்து தர்ப்பசம்ஸ்காரம் செய்து அதன்பின் நாராயணபலி உள்ளிட்ட கர்மாவினைச் செய்து கர்மகாரியத்தைச் செய்து முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மாவானது பித்ருலோகத்தைச் சென்றடையும். ஆக அகால மரணம் அடைந்தோரின் ஆவி ஆனது குறைந்த பட்சமாக ஆறுமாத காலத்திற்கு இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும். ஆறுமாதம் ஆன பின்பு மேலே குறிப்பிட்ட நாராயணபலி உள்ளிட்ட கர்மாக்களை செய்யாவிடில் தொடர்ந்து அந்த ஆன்மாவானது போக்கிடம் இன்றி இங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும். இதனால் அவரது பரம்பரை என்பது பாதிப்பிற்கு உள்ளாகிறது.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

You may also like

Leave a Comment

1 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi