சென்னை: உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்காக வைகை அணை நீரைத் திறந்து விடவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் போதிய மழை இல்லாததால், அந்தப் பகுதி மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். வைகை அணையிலிருந்து திறக்கப்படும் திருமங்கலம் பிரதான கால்வாய் மற்றும் 58 கிராமக் கால்வாய் தண்ணீரால் நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், 160 குளங்கள், 200க்கும் மேற்பட்ட ஊரணிகள் நிரம்பும்.
இதன் மூலம் 28 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான குடிதண்ணீர் கிடைக்கும். தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையாலும், முல்லைப் பெரியாறு அணை நீராலும் வைகை அணை நிரம்பி உள்ளது. எனவே, திருமங்கலம், உசிலம்பட்டி பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வைகை அணையிலிருந்து 58 கிராமக் கால்வாய் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய்களில் தண்ணீரை திறந்துவிடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.