Saturday, April 20, 2024
Home » நம்பிக்கையை மலரச் செய்து, வெற்றியை வசப்படுத்துங்கள்!

நம்பிக்கையை மலரச் செய்து, வெற்றியை வசப்படுத்துங்கள்!

by Porselvi

பிரான்ஸ் நாட்டிலே ஒரு சிறுவன் இருந்தான் அவனுக்கு 12 வயது நடந்தபோது, அவனுடைய பாட்டி அவனை அழைத்து நீ பெரியவனாய் ஆன பின் என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார். சிறுவனுடைய பார்வையிலே தெளிவு இருந்தது, தேடல் இருந்தது.ஆனால் அமைதியாக நின்றான். பாட்டி அவருடைய உள்ளங்கையில் ஒரு கல்லை வைத்து இது விலை உயர்ந்த மரகதக்கல், மந்திர சக்தி உடையது. இதை நீ வைத்துக் கொண்டால், இந்த நாட்டின் அரசனாவாய் என்று சொன்னார். அதை அப்படியே நம்பினான் சிறுவன். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அந்த கல்லை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு நான் இந்த நாட்டின் அரசன் என்று தனக்குள்ளே சொல்லிக்கொள்கிறான். அரசனாக தன்னை கற்பனை செய்து பார்த்து கொண்டான். கற்பனையிலே பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தினான். பல வருடங்கள் இந்த பழக்கம் தொடர்கிறது. அந்த சிறுவன் இளைஞன் ஆகிறான். பிரான்ஸ் நாட்டு தளபதியாகிறான். அதன் பின் அரசனானான். உலகமே இன்றும் அவனை மாவீரன் நெப்போலியன் என்று போற்றுகிறது. நெப்போலியன் இறந்தபோது, அவனை மாவீரனாக்கிய அந்தக் கல்லை தேடி எடுத்து சோதித்துப் பார்த்தார்கள். அது விலை உயர்ந்த மரகதக் கல் அல்ல, சாதாரண பச்சை நிறக் கண்ணாடிக் கல் என்பது தெரியவந்தது. நெப்போலியன் மாவீரனாக்கியது, மரகதக்கல் அல்ல,மந்திரக்கல் அல்ல, அவனிடத்திலே ஊறிப் போயிருந்த நம்பிக்கையும், ஊக்கமும், முயற்சியும்தான்.

நம்பிக்கை நம்மை மகத்தான மனநிலைக்கு அழைத்துச் சென்று விடுகின்றது. நம்பிக்கை ஒருவருக்கு இலக்கை அடைய வேண்டிய தெளிவையும் அதை அடைவதற்கான தேவையான துணிவையும் தருகிறது. நம்பிக்கை நமது உறவுகளை வலிமைப்படுத்தி தோள் கொடுக்கும் தோழனாக இருந்து இலக்கை நோக்கி மகிழ்ச்சியுடன் பயணிக்க செய்கிறது. நம்பிக்கை மனித வாழ்வின் உயிரோட்டமாக ஊடுருவி நிற்கிறது. இதைத்தான் தமிழ் முதுமொழி யானைக்கு பலம் தும்பிக்கையிலே, மனிதருக்கு பலம் நம்பிக்கையிலே என்று தொகுப்பாய்ச் சொல்கிறது. இதற்கு உதாரணமாய் நம்பிக்கையின் மூலமாக துயரத்தை தாண்டி வெற்றியை வசப்படுத்திய இந்த சாதனை தம்பதியரை சொல்லலாம்.இந்தியாவின் பிரபலமான பங்குச் சந்தை மற்றும் நிதிச் சேவை நிறுவனமான ஜீரோதா’-வின் நிறுவனர்களான நிதின் காமத் மற்றும் அவரது மனைவி சீமா பட்டீலின் வணிக வெற்றி, இன்றைய தலைமுறையினர் கற்றுத் கொள்ளவேண்டிய ஒன்றாக இருந்தாலும், அவர்களது மணவாழ்க்கையும் இன்றைய தம்பதியினர்களுக்கான பாடமாகும். ஏனெனில், மனைவி சீமா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட, அதனை தம்பதியினர் இருவரும் சேர்ந்து எதிர்த்து போராடி மீண்டு வந்துள்ளனர்.சீமாவும், நிதினும் பெங்களூரில் உள்ள டயல்-எம் என்ற கால் சென்டரில் பணிபுரிந்த போது தான் முதன் முதலில் சந்தித்தார்கள். பிறகு, அங்கிருந்து சீமா சிங்கப்பூருக்குச் சென்ற போதிலும், இருவரும் பழகி வந்தனர்.2008ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், 2011ம் ஆண்டில் அவர் தனது பங்குத் தரகு நிறுவனமான ‘ஜீரோதா’வில் இணைவதற்காக இந்தியா திரும்பினார்கள். 2015ம் ஆண்டு தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது,அவனுக்கு கியான் என்று பெயரிட்டு மகிழ்வுடன் வாழ்ந்தார்கள்.

இந்த நிலையில் நவம்பர் மாதம், 2021ம் ஆண்டில் ஒரு நாள்… நிதினும், சீமாவும் அவர்களின் விடுமுறையை எங்கு கழிப்பதென மும்மரமாக ஆராய்ந்து கொண்டிருந்தனர். அப்போது சீமாவின் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டதால், உடல்நிலை பரிசோதனை செய்யவும் முடிவு செய்தார்கள். அது சீமாவின் உடல்நல பரிசோதனையின் முடிவுகள் முந்தைய ஆண்டுகளின் முடிவுகள் போல் இல்லை. பரிசோதனையின் முடிவுகளில், அவரது வலது மார்பகத்தில் ஒரு சிறிய கட்டி இருப்பது தெரியவந்தது. அது மார்பக புற்றுநோய் என்று தெரிய வந்தது.தொடக்கத்தில், சீமா தைரியமாக எதிர்கொண்டாலும், நாட்கள் ஓட அவருள் குழப்பம் நிலவியது. சீமாவும் நிதினும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசத் தொடங்கியபோது, அவர்கள் மார்பகப் புற்றுநோயை பற்றிய பயத்தை மட்டுமே ஏற்படுத்தினார்கள்.இது போன்ற சங்கடங்கள் நிகழும் போது பாதிக்கப்பட்டோரின் முதல் எதிர்வினை எனக்கு ஏன்?’ என்பதாகவே இருக்கும். ஆனால், என் விஷயத்தில் நான் முதலில் கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன். ஏனெனில், என் அன்புக்குரியவர்கள் யாவரும் இந்நோயால் பாதிக்கப்படவில்லை என்று ஷ்ரத்தா ஷர்மாவிடம் சீமா கூறினார்.இந்தியப் பெண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோய், மார்பகப் புற்றுநோயாகும்.1,00,000 பெண்களில் 26 பேர் தங்கள் வாழ்நாளில் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்கிறார்கள் என்று தரவுகள் கூறுகின்றன.இருப்பினும்,சீமாவின் விஷயத்தில் அவரது சிகிச்சை காலம் 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இருக்கலாம் என்று மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது.எங்களது பிரச்னையை பெரிதாக்கி பார்த்து கவலையுறாமல், எங்களுக்குள்ளே கேலிச் செய்து ஏமாற்றிக் கொண்டு இக்கடினமான பயணத்தை கடந்தோம். நோயின் தாக்கத்தால் நாங்கள் பாதிக்கப்பட்டோம், அதில் சந்தேக மில்லை.

ஆனால், அதை நகைச்சுவையுடன் சமாளிக்க முடிவு செய்தோம் என்கிறார் சீமாவின் கணவர் நிதின்.புற்றுநோய் என்பதே பேசாபொருளாக உள்ள நிலையில், மார்பகப் புற்றுநோயோ தடைச் செய்யப்பட்ட தலைப்பாக உள்ளது. சமூகம் அதை மூடிமறைக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. சீமாவும் நிதினும் இதற்கு நேர் எதிர்மாறாகச் செயல்பட்டனர். தம்பதியினர் இதை நேரடியாக பேச ஆரம்பித்தார்கள். சீமா இதை பற்றிய உரையாடலை விவாதமாகவே மாற்றினார். நித்தினைப் பொறுத்தவரை மனைவியை ஊக்கப்படுத்திக் கொண்டே இதை குணப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.புற்றுநோய் சிகிச்சைகளுக்கு ஒன்றாகவே இருவரும் சென்றதும், ஒன்றாக பயணத்தை கடந்ததும் இருவருக்கிடையேயான உறவை வலுப்படுத்தியதாகவே அமைந்தது உதாரணமாக, தம்பதியர் சண்டையிட்டுக் கொள்ளும் சூழ்நிலைகளை அமைதியாக இருந்து கையாண்டு உள்ளார்கள்.எங்களிடம் விவாதங்கள் உள்ளன, வாதங்கள் இல்லை. எனது புற்றுநோய் பயணம் முழுவதும் நிதின் என்னுடன் இருந்தார். எனக்கு நம்பிக்கை ஊட்டினார். இந்த நோயிலிருந்து மீண்டு வருவதற்கு நித்தினின் ஊக்கம் தான் காரணம் என்கிறார் சீமா.புற்றுநோயை எதிர்த்து பல மாதங்களாக போராடியதில், மருத்துவமனைக்கு உள்ளும், வெளியும் நிலவிய சூழ்நிலைகளை கவனித்த தம்பதியினர், மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பரப்ப வேண்டியதன் அவசியத்தைஉணர்ந்துள்ளனர். நோயை பற்றி எழுதுவதற்கு சீமாவை அவர் ஊக்குவித்தது மட்டுமின்றி, அதைப் பற்றி சமூக ஊடகங்களிலும் பதிவிட்டுள்ளார். மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர், மேலும் அத்தடையை உடைத்தெறிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியதால் சமூக ஊடகத்தில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

ஒரு காலத்தில் இருவரது வாழ்க்கையின் இலக்குகளும் வெவ்வேறாக இருந்தன. உலகம் முழுவதும் சுற்றி வருவது,அனுபவத்தை சேகரிப்பதே அன்றைய இலக்காக இருந்துள்ளது. இன்றோ, சமூகத்துக்கு திருப்பி அளிப்பதே இலக்கு. அவர்கள் தொடங்கியுள்ள இலாப நோக்கற்ற அமைப்பான ‘ரெயின்மேட்டர் அறக்கட்டளை’ மூலம், தம்பதியினர் அவர்களது பங்களிப்பை சமூகத்திற்கு அளித்து வருகின்றனர். இப்போதெல்லாம் பணத்தை செலவழிப்பதால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை, தொழில்முனைவோருக்கு உதவுவதாலோ, சமூகத்திற்கான பங்களிப்பை அளிப்பதால் மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கிறது என்கிறார் நிதின். நம்பிக்கை நிறைவான வாழ்க்கையை கொடையாக தரும் அருமருந்து என்பது இவர்களுடைய வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்து விட்டால், உதிர்ந்த பூக்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் ஒட்டிக் கொள்ளும் என்கிறான் கவிஞன். ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் நம்பிக்கை நாரெடுத்து முயற்சி என்ற மலர் தொடுத்து வெற்றி மாலை சூடுவோம்.

You may also like

Leave a Comment

eight + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi