சென்னை: போதை மாத்திரை விற்பனை செய்ததை கண்டித்ததால், மனைவியை பாதிரியார் கொலை செய்த வழக்கில், மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே குணாபா பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர், தனது மகள் வைஷாலி (33) என்பவரை, அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் விமல்ராஜ் (35) என்பவருக்கு, கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த தம்பதிக்கு, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், பாதிரியார் விமல்ராஜ், மனைவி, குழந்தையுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை கேளம்பாக்கம் அடுத்துள்ள பொன்மார், மலை தெருவில் குடியேறினார். பின்னர், அதே பகுதியில் உள்ள அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இதனிடையே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. விமல்ராஜின் பெற்றோர் மேடவாக்கத்தை அடுத்துள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி ஒட்டியம்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த விமல்ராஜ், தனது மனைவி வைஷாலி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு காரில் அழைத்து செல்லும்போது உயிரிழந்து விட்டதாகவும், அவரது சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுபற்றி வைஷாலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மும்பையில் இருந்து ஒட்டியம்பாக்கத்திற்கு வந்த வைஷாலியின் பெற்றோர் மற்றும் சகோதரர் விஷால்குமார் ஆகியோர் வைஷாலியின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தாழம்பூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தபோது, பாதிரியார், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
பாதிரியாருக்கும், அவரது மனைவிக்கும் தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பாதிரியார், மனைவியை அடித்து கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து நெரித்து கொலை செய்துவிட்டு, இதை மறைக்க உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வைஷாலியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பிரேத பரிசோதனைக்குபின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர், பாதிரியாரை கொலை வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சில நாட்களில் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதனிடையே, தனது மகள் கொலை வழக்கில் சந்தேகம் உள்ளதாகவும், அதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று வைஷாலியின் தாயார் மேரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில், கூடுதல் விசாரணை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிறப்பு விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மனைவியை கொலை செய்த பாதிரியார் விமல்ராஜ், பொன்மார் பகுதியில் வசித்து வந்த ஜெபஷீலா (30) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததும், இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்ததும் தெரியவந்தது.
மேலும், தனது மாமியார் வீடு அமைந்துள்ள மும்பை பகுதியில் தங்கி இருந்தபோது அங்கிருந்த மெடிக்கல் ஷாப் ஒன்றில் இருந்து போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து, இப்பகுதியில் விற்பனை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. கூரியர் சர்வீஸ் மூலம் மொத்தமாக மாத்திரைகளை வாங்கி, உள்ளூர் நபர்களுடன் இணைந்து இத்தொழிலில் ஈடுபட்டு வந்தபோது, வீட்டில் சுமார் 3000 மாத்திரைகளை இருப்பு வைத்துள்ளார். இதுபற்றி பாதிரியாரின் மனைவி வைஷாலி கேட்டபோது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் காய்ச்சல் மாத்திரைகள் என தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த வைஷாலி தனது சகோதரர் மூலம் மும்பையில் விசாரித்துள்ளார். அப்போது, அவை போதை மாத்திரைகள் என்று என்று தெரியவந்தது.
இதை போலீசில் சொல்லி விடுவேன் என்று வைஷாலி தனது கணவரிடம் கூறியதால், பயந்துபோன பாதிரியார் விமல்ராஜ், இத்தகவலை தனது கள்ளக்காதலி ஜெபஷீலாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்து போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தினேஷ் (23), சந்திரசேகர் (19), அரவிந்த் (23), அஜய் (24), நங்கநல்லூரை சேர்ந்த மைக்கேல் (33), பொன்மார் மலை தெருவை சேர்ந்த கிறிஸ்டோபர் (எ) சங்கர் (44) ஆகியோர் உதவியுடன் பாதிரியார் மனைவி வைஷாலியை கொலை செய்து நாடகம் ஆடியது தெரியவந்தது.
இதையடுத்து, தாழம்பூர் போலீசார் புதிய வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் பாதிரியாரின் கள்ளக்காதலி பொன்மார் மலை தெருவை சேர்ந்த ஜெபஷீலா (30) மற்றும் மேற்கண்ட 6 பேர் என 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் ஜெபஷீலாவின் வீட்டிலும், பாதிரியாரின் வீட்டிலும் இருந்து 3000 போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர். இவர்களில் கைது செய்யப்பட்ட தினேஷ் மீது 6 வழக்குகளும், அரவிந்த் மீது 6 வழக்குகளும், அஜய் மீது 20 வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.