Saturday, May 11, 2024
Home » திருவாரூர் தியாகராஜர்

திருவாரூர் தியாகராஜர்

by Porselvi

*தேவேந்திரனிடமிருந்து பெற்று வரப்பட்ட ஏழு லிங்கத்தலங்களுள் (சப்தவிடங்கத் தலங்கள்) வீதிவிடங்கர் எனும் மரகதலிங்கம் உள்ள தலம்.
*திருக்கோயிலின் தீர்த்தமான கமலாலயம் சுமார் 19 ஏக்கர் பரப்பளவும் பல்வேறு ஸ்நானக் கட்டங்கள் கொண்டும் விளங்குகிறது. குளத்தின் நடுவே நாகநாதர் ஆலயம் உள்ளது.
*இத்தல ஈசன் சோமாஸ்கந்த வடிவில் தியாகராஜனாக அருள்கிறார். தியாகராஜப் பெருமானின் உற்சவ மூர்த்தத்தின் முகத்தை மட்டுமே பக்தர்கள் தினமும் தரிசனம் செய்யமுடியும். மார்கழி மாதம் திருவாதிரை அன்று அவரின் இடது பாத தரிசனமும், பங்குனி உத்திரத்தன்று அவரின் வலது பாத தரிசனமும் கிடைக்கும்.
*பங்குனி உத்திரத்தன்று இத்தல ஈசன் பக்தர்களுக்காக ஆடும் நடனம், ‘பக்தர் காட்சி’ என அழைக்கப்படுகிறது.
* பூஜையின்போது தியாகராஜர் சந்நதியில் பஞ்சமுக வாத்தியம் இசைக்கப்படுகிறது.
*அசைந்தாடிய பெருமான், அடிக்காயிரம் பொன்னளிப்பவர், இருந்தாடழகர், திருவந்திக்காப்பழகர் என பல பெயர்களில் தியாகராஜர் வணங்கப்படுகிறார். ஆண்டில் எட்டு நாட்கள் மட்டுமே இவருக்கு அபிஷேகம்.
*தியாகராஜரை பூஜிக்கும் சிவாச்சாரியார்கள் நயினார் எனவும், பூஜைக்கு உதவுபவர்கள் அணுக்கத் தொண்டர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
*இந்த தியாகராஜருக்கு முசுகுந்த சக்ரவர்த்தி செய்த முசுகுந்தார்ச்சனை, முகுந்தனான திருமால் செய்த முகுந்தார்ச்சனை போன்ற சிறப்பு அர்ச்சனைகள் நிகழ்த்தப்படுகின்றன.
*தினமும் இரவில் தியாகராஜருக்கு நெய்யில் பொரித்த முறுக்கு நிவேதிக்கப்படுகிறது.
*கேட்ட வரங்களையெல்லாம் தரும் தியாகராஜரால் ஒரே ஒரு வரம் மட்டும் தரமுடியாதாம். அது, மறுபிறவி! ஏனெனில் தன்னை வணங்கும் அடியாருக்கு முக்தியளித்து விடுபவர் இந்த தியாகராஜர்.
*ஈசன் இத்தலத்தில் ஆடிய நடனம் அஜபா நடனம் என அழைக்கப்படுகிறது. சிதம்பர ரகசியம் போல் இங்கும் புன்னத்தண்டு ரகசியம் நிலவுகிறது.
*சாயரட்சை பூஜையில் அர்ச்சகர் நீண்ட தலைப்பாகையையும், அங்கியையும் அணிந்து பூஜை செய்வார். பெருமானுக்கு திருவந்திக்காப்பு எனும் வாசனைத் திரவியங்கள் கொண்ட மருந்துப் பொருள் சாத்தப்படுகிறது. அந்த சமயத்தில்தேவேந்திரனே பூஜை செய்வதாக ஐதீகம்.
* பசுக் கன்றைக் கொன்ற தன் மகனை தேர்க்காலில் இட்டு நீதியை நிலைநாட்ட முனைந்த மனுநீதிச் சோழனுக்கு இந்த தியாகராஜர், கன்றையும் மகனையும் உயிர்ப்பித்து அருள் செய்தவர்.
*இத்தல இறைவி கமலாம்பிகை தனி சந்நதியில் தவக்கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்கிறாள்.
*ஐம்பத்தோரு எழுத்துகள் பொறிக்கப்பட்ட திருவாசியுடன் கூடிய அட்சரபீடம் தனிச் சிறப்பு கொண்டது.
*தன் தோழியின் இடுப்பில் அமர்ந்திருக்கும் முருகனுடைய இடது கை சுண்டு விரலைப் பிடித்தபடி காட்சிதரும் நீலோத்பல அம்பிகை, பிராகாரத்தில் அழகுற காட்சியளிக்கிறார்.
*இத்தல நவகிரகங்கள் ஒரே வரிசையில் நின்று அருள்கின்றன.
*சுந்தரருக்கும் பரவை நாச்சியாருக்கும் திருமணம் நடந்த தலம். அவர்கள் காதலுக்கு தியாகராஜர் தூது சென்றது வரலாறு. ஒரு கவி கூட நான்முகனும், திருமாலும் வராஹமாகவும், அன்னப்பறவையாகவும் மாறி ஈசனின் அடி முடி தேடியிருக்க வேண்டாம். அவர்கள் இருவரும் சுந்தரர் வீட்டு வாயிலில் நின்றிருந்தாலே சுலபமாக அதை தரிசித்திருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
*சங்கீத மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரிகள், தியாகையர் மூவரும் பிறந்த தலம்.
*கும்பகோணத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.

You may also like

Leave a Comment

fifteen − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi