Thursday, May 16, 2024
Home » தீராத நோய் தீர்க்கும் திருவள்ளூர் வீரராகவன்!

தீராத நோய் தீர்க்கும் திருவள்ளூர் வீரராகவன்!

by Porselvi
Published: Last Updated on

திருமங்கை ஆழ்வார் திருமலையப்பனை தரிசித்தார். ஏழுமலை மீது நின்ற வண்ணம் விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் வைப்பாக விளங்கும் நெடியோனை அடுக்கடுக்காக பதிகங்களால் பாடினார். இவர் தமிழிலே பாசுரங்களைப் பாடுவதைக் கேட்டுக் கொண்டே இருந்த பெருமாள் ஏதோ முகக்குறிப்பு காட்டியது போல் ஆழ்வாருக்குத் தோன்றியது. அர்ச்சாவதாரத்தில் எம்பெருமான் காட்டிய குறிப்பு ஆழ்வார்களுக்கே தெரியும்.

புரியும் “வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ணா, நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே” என்று எம்பெருமானின் முகக் குறிப்பை உணர்ந்து பாடியவர் அல்லவா திருமங்கையாழ்வார்.‘‘எத்தனை நேரம் நின்று கொண்டே உன் தமிழைக் கேட்பது. கொஞ்சம் படுத்துக்கொண்டு கேட்டால் நன்றாக இருக்குமே’’ பெருமாள் கேட்பது போல தோன்றியது.உடனே திருமங்கையாழ்வார், ‘‘தேவரீர் சாய்ந்து ஓய்வெடுக்கலாமே.’’இப்பொழுது பெருமாள் சொன்னார்.

‘‘அது இங்கே திருமலையில் முடியாது.வேறு திருத்தலம் தான் பார்க்க வேண்டும்.’’ ஆழ்வார் அடுத்து பெருமாள் என்ன சொல்லப் போகிறார் என்று நினைக்கும் போது, பெருமாளே
சொன்னார் ‘‘பக்கத்திலே திருவள்ளூர் என்ற திவ்ய தேசம் இருக்கிறது.அங்கே நாம் சயன நிலையிலே தரிசனம் தருகின்றோம்.உன் தமிழை ஆனந்தமாகக் கேட்கிறோம்’’ எம்பெருமான் காட்டிய குறிப்பு ஆழ்வாருக்கு புரிந்தது.

ஆழ்வார் சயன கோலத்தில் வீரராகவனாகக் காட்சியளிக்கும் திருவள்ளூர் விரைந்தார்.முதலில் இத்தலத்தின் பெயர்க் காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். கிரேதா யுகத்தில் புரு புண்ணியர் என்ற அந்தணர் வெகு நாட்கள் ஒரு யாகம் செய்தார். அந்த யாகம் நெல் மணிகளால் செய்யப்பட்டது. சாலி ஹோத்ரம் என்பார்கள். யாகத்தின் நோக்கம் குழந்தை பேறு. அந்த யாகத்தின் பலனாய்ப் பெற்ற பிள்ளைக்கு சாலிஹோத்ரன் என்று பெயர் வைத்தார்.

சாலிஹோத்ரன் எல்லா கலைகளையும் (கலை என்பது வேதம்) கற்றுத் தேர்ந்தார். தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அப்படி தீர்த்த யாத்திரை மேற்கொண்டு வருகின்ற பொழுது இந்தத் தலத்தின் அழகில் மயங்கி தங்கிவிட்டார். தனக்கென ஒரு சிறு குடில் அமைத்துக்கொண்டு எளிமையான ஒரு தவ வாழ்க்கையை மேற்கொண்டார் சாலி ஹோத்ரன்.தினசரி அரிசியை மாவாக்கி எம்பெருமானுக்கு தளிகை செய்து சமர்ப்பிப்பார்.

பின் யாராவது ஒரு அதிதிக்கு படைப்பார். அதற்குப் பிறகு மீதி இருக்கும் அரிசி மாவை உணவாகக் கொள்வார். அதுவும் ஒரு வேளை மட்டுமே. இப்படி ஒரு எளிமையான வாழ்வு. எப்பொழுதுமே எம்பெருமானைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்.ஒரு நாள் காலையில் எழுந்து நீராடி, அரிசியை மாவாக்கி, பெருமாளுக்குப் படைத்து விட்டு அதிதி வருகைக்காகக் காத்திருந்தார்.நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. சோதனையாக எந்த அதிதியும் அன்றைக்கு குடிலுக்கு வரவில்லை. அதிதிக்குக் கொடுத்து விட்டுத் தான் உண்ண வேண்டும் என்பதால் சாப்பிடாமலேயே இருந்தார்.

“சரி தனக்கு இன்று பட்டினி நாளாகப் போய்விட்டதே” என்ற வருத்தம் இல்லை அவருக்கு. இன்றைக்கு அதிதிக்கு படைக்க முடியாத விரத பங்கம் ஏற்பட்டு விட்டதே என்று கருதி பெருமாளை சரண் அடைந்தார்.தன்னையே சதா எண்ணிக் கொண்டிருக்கும் பக்தனுக்கு காட்சி தந்து ஆட்கொள்ள இந்தத் தருணத்தை பயன்படுத்திக் கொண்டான் எம்பெருமான்.தானே ஒரு கிழ வேதியர் வடிவம் தாங்கி அதிதியாக குடிலுக்கு எழுந்தருளினார். சாலி ஹோத்ரனுக்கு ஏக மகிழ்ச்சி. கைகூப்பி அதிதியை வரவேற்றார். அர்க்ய பாத்யாதிகளை தந்து பாத பூஜை செய்தார். ஒரு பெரிய இலையை போட்டு அரிசிமாவில் பாதியை வைத்தார்.

வயோதிகர் அமர்க்களமாகச்சாப்பிட்டார்.‘‘சரி இனி மீதி மாவை, தான் சாப்பிட்டு பசியாறலாம் என்று இருந்த பொழுது, வயோதிகர் வெறும் இலையில் உட்கார்ந்திருந்தார்.“ஓஹோ உணவு போதவில்லை போலிருக்கிறது” என்று சொல்லிவிட்டு மீதி இருந்த மாவில் ஒரு பகுதியை வைத்தார். அப்பொழுது அதிதி சொன்னார்.‘‘ஒன்றுமில்லை அப்பா…இன்று என்னமோ தெரியவில்லை. பசியும் அதிகமாக இருக்கிறது. நீ வைத்த மாவில் ருசியும் அதிகமாக இருக்கிறது’’. சாலி ஹோத்ரனுக்கு எளிய உணவை இப்படிப்பாராட்டுகிறாரே என்று மகிழ்ச்சி. பொதுவாக அதிதிகள் படைத்த உணவை குறை கூறக்கூடாது. நிறைவைத் தான் சொல்ல வேண்டும் என்று சாஸ்திரம் இருக்கிறது.

சாலி ஹோத்திரன் புன்னகைத்தார் ‘‘சுவாமி, கொடுத்ததில் திருப்தி அடையாவிட்டால் கொடுத்தவருக்கு பாவம். அதனால் தாங்கள் விரும்பியபடி கேளுங்கள்’’.‘‘அது சரி, என்ன ஒரு வயோதிகன் இவ்வளவு சாப்பிடுகிறானே என்று நீ நினைக்க கூடாது அல்லவா?’’ ‘‘சுவாமி அடியேன் நினைக்க மாட்டேன். நீர் வயிறார உண்பதைக் கண்டு அடியேனுக்கு மகிழ்ச்சி’’.‘‘அப்படியா மகிழ்ச்சி. உன் விருந்தும் பேச்சும் ஒரு சேர மகிழ்ச்சி அளிக் கிறது ஆனால் நான் பொய் சொல்ல விரும்பவில்லை நான் போதும் என்று நினைத்தாலும் என் வயிறு திருப்தி அடையவில்லை’’.சாலி ஹோத்ரன் மீதி மாவையும் வைத்தார்.

வயோதிகர் சாப்பிட்டுக் கொண்டே இருந்ததைப் பார்க்க பார்க்க ஆனந்தமாக இருந்தது.இனி கொடுப்பதற்கு மாவு இல்லை என்று முதியவருக்குத் தெரிந்ததோ என்னவோ ‘‘ரொம்பவும் திருப்தியப்பா. சாலி ஹோத்ரா. அருமையான உணவு. நிறைய சாப்பிட்டு விட்டேன். உண்டதனால் வரும் மயக்கம் தீர சற்று ஓய்வெடுக்கலாம் என்று இருக்கிறேன். எந்த இடத்தில் (எவ் உள்?) நான் சயனிப்பது?சாலி ஹோத்ரன் “இதோ” என்று அந்த சின்ன பர்ண சாலையில் அழகான ஒரு மேடையை அமைத்தார். தேவரீர் இந்த இடத்தில் (இவ் உள்) சயனிக்கலாம் என்றார்.

முதியவர் படுத்துக்கொண்டே, ‘‘சாலி ஹோத்ரா இங்கே வா’’ என்றார். அருகே சென்ற உடனே சாலி ஹோத்ரன் தலையில் கை வைத்து தடவி ஆசிர்வாதம் செய்தார்.இவருக்கு மெய் சிலிர்த்தது.அடுத்த நிமிடம் அங்கே முதியவர் மறைந்தார். ஆயிரம் கோடி சூரியப் பிரகாச ஒளியுடன் எம்பெருமான் காட்சி தந்தார். தன்னை பார்க்கின்ற சக்தியையும் கொடுத்தான்.‘‘சாலி ஹோத்ரா, பிரளய காலத்தில் உலகங்களை எல்லாம் உண்ட என் வயிற்றுக்கு உணவை நீ படைத்தாய். உன் பக்தியும் அன்பும் நமக்கு பரம மகிழ்ச்சியைத் தந்தது என்ன வரம் வேண்டும் கேள்?’’

சாலி ஹோத்ரன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். இரு கைகளையும் கூப்பிக் கொண்டு, கண்ணீர் பெருக பகவானை பலப்பல ஸ்தோத்திரங்களால் துதித்தார். ‘‘முனிவர்களும் தேவர்களும் எந்த எம்பெருமானைக் காண யுகம் யுகமாக தவம் இருக்கிறார்களோ, அந்த எம்பெருமானே அடியேன் குடிசைக்கு வந்து காட்சி அளிக்கும் பேற்றினை விட வேறு என்ன வரம் அடியேன் கேட்கப் போகிறேன். இந்தக் காட்சியை, பின்னாலும் பலர் தரிசிக்கும் படியான வரத்தை அருள வேண்டும்.’’

சாலி ஹோத்திரனின் வரபலம் தான் இன்றைக்கும் நாம் எம்பெருமானின் அழகான கோலத்தைக் காணும் பேற்றினைத் பெற்றிருக்கிறோம். வாருங்கள் அவனைக் கண்குளிர தரிசிக்கலாம்.என்ன அழகான தோற்றம்! எம்பெருமான் கிடந்த கோலத்தில் பல்வேறு திவ்ய தேசங்களிலும் காட்சி தருகின்றான் என்றாலும் ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு அழகோடு தானே காட்சி தருகிறான்.கையிலே சுரி சங்கம். கனலாழி துளப மாலை. உந்தியில் நான்முகன். உயர் வெள்ளையணை. (ஆதிசேஷன்) பொங்கும்
புன்னகை. பூவிழித் தாமரைக் கண்கள்.

இனி என்ன வேண்டும் காண்பதற்கு. ஐயனின் அருட்கோலம் கண்டார் சாலி ஹோத்ரன். தந்தை அன்று தவம் இருந்ததன் பலன் இன்று தனயனுக்குக் கிடைத்தது.அகிலமெல்லாம் வயிற்றில் அடக்கி ஆலிலைத் துயின்ற மாயக் கண்ணன் இன்று ஓர் எளிய பக்தனுக்கு இனியன் ஆனான். தாய், தந்தை, குரு, அதிதி என்று நால்வரையும் போற்ற வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.தாயாகவும் தந்தையாகவும் குருவாகவும் அதிதியாகவும் வந்து சாலி ஹோத்திரனுக்குக் காட்சி தந்த திருத்தலமல்லவா திருவள்ளூர்.

திருமங்கை ஆழ்வார் இந்தக் காட்சியை அப்படியே உணர்ச்சிமயமாக ஓர் பாசுரத்தில் பாடுகின்றார். முனிவன் மூர்த்தி மூவர் ஆகி வேதம் விரித்து உரைத்த புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன் தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே. கதையையும் பாசுரத்தையும் இணைத்துப் பாருங்கள்.

மூலவர் வீரராகவப் பெருமாள். 15 அடி நீளத்தில் ஐந்து அடி உயரத்தில் புஜங்க சயனம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். அவரது வலது கை சாலிஹோத்ர முனிவரை ஆசீர்வதிக்கிறது மற்றும் இடது கை ஞான முத்திரையில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்கிறது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். விமானத்திற்கு விஜய கோடி விமானம் என்ற பெயர். தாயார் கனகவல்லி. (வசுமதி தேவி)5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலின் சந்நதிகளை வலம் வருவோம். திருத்தலத்தின் உள்சுற்றில் லட்சுமி நரசிம்மர், சுதர்சனர் காட்சி தருகிறார்கள். மண்டபத்தின் எதிரே கருடாழ்வார் காட்சி தருகிறார். வெளிச்சுற்றில் கனகவல்லி தாயார் சந்நதி இருக்கிறது.

இது தவிர சீதாராமன் சந்நதி, ருக்மணி பாமா சமேத வேணுகோபாலன், ஆழ்வார், ஆண்டாள், திருக்கச்சி நம்பிகள், எம்பெருமானார் சந்நதிகள் இருக்கின்றன. எம்பெருமானை மணாளனாக அடைய எண்ணிய பெரிய பிராட்டியார் வசுமதி என்கின்ற பெயரோடு தர்மசீலன் என்னும் நாட்டை ஆண்ட திலீப ராஜாவுக்கு மகளாக அவதரித்தார். எம்பெருமான் வீர நாராயணன் என்கிற திருநாமத்தோடு வேட்டைக்குச் சென்றார். வசுமதியை சந்தித்து மணம் புரிந்து கொண்டார்.

திருக்கோயிலுக்கு வெளியே வரம் அருளும் ஆஞ்சநேயர் சந்நதி. உள்ளே அருமையான கோசாலை. வெளியே அழகாக நீராழி மண்டபத்துடன் கூடிய புஷ்கரணி. இதில் தீர்த்தம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக உள் குளம் கட்டி கிணற்றில் இருந்து நீர் நிறைத்து பராமரித்து வருகிறார்கள். சகல பாவங்களையும் போக்கும் இந்த தீர்த்தத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஏராளமான பக்தர்கள் நீராடி வைத்ய நாராயணனை தரிசிக்கிறார்கள்.

உடலில் உள்ள மரு கட்டி போன்ற நோய்கள் தீர குளத்தில் பால் வெல்லம் சேர்ப்பது வழக்கம். கோயில் மண்டபத்தில் உப்பு மிளகு சமர்ப்பிப்பது வழக்கம். பாவங்களை எல்லாம் நாசம் செய்யும் இத்திருக்குளத்திற்கு ஹ்ருத்தாபநாசினி என்று பெயர். பெருமானை பரிபூரண அன்போடு வழிபடுகின்றவர்களுக்கு எல்லா நலன்களும் கைகூடும். இதய சுத்தி உண்டாகும். நோய்கள் அனைத்தும் நீங்கி ஆயுள் ஆரோக்கிய சௌக்கியம் பெருகும். விரும்பிய பதவிகள் கிடைக்கும். வாருங்கள் வரம் தரும் வைத்தியநாத சுவாமியைப் பாருங்கள். வந்த துன்பங்கள் எல்லாம் தூர ஓடுவதைக் காணுங்கள்.

வருடம் முழுதும் உற்சவங்கள்

1. சித்திரை பிரம்மோற்சவம்
2. வைகாசி கோடை உற்சவம், வசந்த உற்சவம்
3. ஆனி அமாவாசையில் தெப்பம்
4. ஆடி பௌர்ணமி கருட சேவை
5. ஆடி பூரம் ஆண்டாள் திருக்கல்யாணம்
6. ஆவணி ஸ்ரீ ஜெயந்தி
7. புரட்டாசி நவராத்திரி விஜயதசமி
8. மார்கழி இராப்பத்து பகல் பத்து வைகுண்ட ஏகாதசி
9. தை பிரம்மோற்சவம்
10. மாசி அமாவாசை தெப்ப உற்சவம்

தரிசன பலன்கள்

1. புத்திரப் பேறு அளிக்கும்
2. திருமணத் தடைகளை நீக்கும்
3. நோய் தீர்க்கும் மருந்தாகவும் மருத்துவ
ராகவும் இப் பெருமான் அருள் செய்கிறார்
(வைத்யோ நாராயண ஹரி:)
4. ஒவ்வொரு அமாவாசையும் இத்தலத்தில் முன்னோர்கள் வழிபாட்டினை பக்தர்கள் செய்கிறார்கள்
5. திருத்தலத்தை அகோபிலம் மடத்தார் நிர்வகிக்கிறார்கள்.

முனைவர் ராம்

You may also like

Leave a Comment

16 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi