Friday, May 3, 2024
Home » இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்

by Lavanya

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
23.3.2024 – சனி

காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயம் பிரசித்தி பெற்றது. மண் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பஞ்சபூத தலங்களில் ஒன்று. இங்கு பங்குனி உத்திரம் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
14 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தினமும் காலையும் மாலையும் இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் ஏலவார்க் குழலி உடன் உறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் எழுந்தருளி காஞ்சிபுரத்தின் திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

அப்பக்குடத்தான் திருக்கல்யாணம்
23.3.2024 – சனி

வைணவ 108 திருத்தலங்களில் ஒன்று திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள அப்பக்குடத்தான் என்னும் திருத்தலம். கோவிலடி என்று இந்த ஊரைச் சொல்லுவார்கள். உற்சவருக்கு அப்பால ரங்கநாதர் என்று பெயர். காவிரிக்கரை பஞ்சரங்க திருத்தலங்களில் இந்தத் தலம் அப்பாலரங்கம் என்று வழங்கப்படுகிறது. கரிகால் சோழனால் கட்டப்பட்டது. திருப்பேர் நகர் என்பது இத்தலத்தின் பழம் பெயராகும். இப்பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுவதால், அப்பக்குடத்தான் என்று அழைக்கப்படுகிறார்.

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன்என்று என்நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார்ஏழ் கடல்ஏழ் மலைஏழ் உலகு உண்டும்
ஆராவயிற்றானை அடங்கப்பிடித்தேனே’’.

– என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த இக்கோயிலில், இப்பொழுது பங்குனி உத்திரப் பெருவிழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அதில் இன்றைய தினம் ஏழாம் திருநாள் நடைபெறுகிறது. நெல் அளவை நடந்து, சூர்ணாபிஷேகம் நடைபெறுகிறது. பின் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.பங்குனி உத்திரம் சில இடங்களில் திதிப்படியும் (பௌர்ணமி) , சில இடங்களில் நட்சத்திரப் படியும் (உத்திரம்) 24.03.2024 – 25.03.2024 ஆகிய இரு தினங்களிலும் கொண்டாடப்படுகிறது. இன்று பங்குனி உத்திரத்திருநாள். சகல முருகன் ஆலயங்களிலும் சிவாலயங்களிலும் பெருமாள் ஆலயங்களிலும் பங்குனி உத்திர வைபவம் சிறப்பாக கொண்டாடப்படும். சில திருத்தலங்களில் தீர்த்த வாரியும் சில திருத்தலங்களில் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். இன்றைய தினம் திருமங்கலக்குடியில் தேர் உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கிறது. திருவாலங்காடு காவிரி ஆற்றின் தென்கரையில், மயிலாடுதுறை – கும்பகோணம் சாலை மார்க்கத்தில் அமைந்திருக்கிறது. இங்கு காவிரி ஆற்றின் கரையில்தான், அப்பைய தீக்ஷிதரின் அதிஷ்டானம் இருக்கிறது. திருவாவடுதுறை ஆதீனக் கோயிலான இத்தலத்தில் இன்று பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவாலியில் திருவேடுபறி பிரம்மோற்சவம்
24.3.2024 – ஞாயிறு

சீர்காழிக்கு அருகே திருவாலி திருநகரி என்று இரண்டு கோயில்கள் இருந்தாலும், ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ கல்யாண ரங்கநாதப் பெருமாள் பிரம்மோற்சவம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா நடக்கும். மூன்றாம் தேதி திங்கட்கிழமை சூர்ண உற்சவம் நடைபெறும். மாலை பெருமாளும் ஆழ்வாரும் மங்கலகிரியில் புறப்படுவார்கள். 24.3.2024 ஞாயிறு பிற்பகலில், திருவாலியில் (சீர்காழிக்கு அருகில் பூம்புகார் போகும் வழியில்) ஸ்ரீ கல்யாண ரங்கநாத பெருமாளுக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெறும். அதற்குப் பிறகு வேதராஜபுரம் என்னும் இடத்தில் இரவு 12 மணிக்கு திருவேடுபறி உற்சவம் நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் இந்த உற்சவத்துக்கு கூடுவார்கள். திருமங்கையாழ்வாருக்கு ஞானம் கிடைத்த உற்சவமாக இந்த உற்சவத்தைக் கருதுகிறார்கள். இதற்கு முன்னால் திருவாலி தேசத்தின் அரசராக இருந்தவர். திருவேடுபறி உற்சவத்தின் முடிவில் பெருமாளிடம் திருமந்திரம் உபதேசம் பெற்று ஆழ்வாராகி தம்முடைய பெரிய திருமொழியைத் தொடங்கிய நாள் இந்த நாள். 25.4.2024 தீர்த்தவாரி திருமஞ்சனம் சாற்றுமுறை நடந்து இந்த உற்சவம் பூர்த்தி ஆகிறது. இதே நாளில் ஸ்ரீ ரங்கத்தில் பங்குனி உத்திர வைபவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று பெரிய பிராட்டி ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருக்கும் நம்பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் எனும் சேர்த்தி உற்சவம் நடைபெறும். இந்த நாளில்தான் ஸ்ரீ ராமானுஜர் சரணாகதி கத்யம் பாடி உலக மக்கள் நன்மை அடைய வேண்டும் என்பதற்காக
பெருமாளிடம் சரண் புகுந்தார்.

ஹோலிப் பண்டிகை
25.3.2024 – திங்கள்

ஹோலிப் பண்டிகை பங்குனி (பிப்ரவரி / மார்ச்) (பங்குனிப் பெளர்ணமி) மாதத்தின் கடைசி முழுநிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது. மக்கள் ஒன்றாகக்கூடி, வண்ண வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழும் நாளாக இது உள்ளது. இந்த தினத்தில் இனிப்புகளைப்பரிமாறி சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மக்கள் அன்பையும், மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்ளும் ஒரு முக்கிய நாளாக கொண்டாடப்படுகிறது. அசுரனும் விஷ்ணு பக்தனான பிரகலாதனின் தந்தையுமான இரணிய கசிபுக்கு ஹோலிகா என்ற சகோதரி இருந்தாள். அவள் மாயப் போர்வை வரமாக பெற்றிருந்தாள். அதன்படி ஒரு பெரிய தீ மூட்டி, அதில் பிரகலாதனை நெருப்பில் கொல்ல பிரகலாதனுடன் அமர்ந்தாள். அப்போது பிரகலாதன் மகாவிஷ்ணுவை வேண்டினான். தன் வினை தன்னைச் சுடும் என்ற பழமொழிக்கேற்ப அந்த போர்வை பறந்து பிரகலாதனை மூடிக் கொண்டது. ஹோலிகா நெருப்பில் எரிந்து உயிர்விட்டாள். ஹோலி பண்டிகைக்கு முன்தினம் ஹோலிகா தகனம் என தீமூட்டி கொண்டாடப்படுகிறது. பக்தனுக்கு தீங்கிழைக்க நினைத்த ஹோலிகா தீயில் பலியானதை ஹோலி எனக்கொண்டாடப்படுகிறது. காமதகன நாளாகவும் இந்த நாள்
கொண்டாடப்படுகிறது.

பங்குனி உத்திரம் தீர்த்தவாரி
25.3.2024 – திங்கள்

பல சிவாலயங்களில் இன்று பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறுகிறது. மங்கள விமானம், மங்களவிநாயகர், மங்களாம்பிகை, மங்களதீர்த்தம், மங்கலக்குடி என்னும் ஐந்து மங்களங்கள் இணைந்துள்ள தொடர்பால் பஞ்ச மங்கள க்ஷேத்திரம் என்று புகழப்படும் சிறப்புடைய தலம் திருமங்கலக்குடி. ‘‘பிராணன் தந்த பிராணவரதேஸ்வரர், மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை’’ என்று இறைவனும் இறைவியும் போற்றப்படுகிறார்கள். கும்பகோணம் அருகே ஆடுதுறைக்கு அருகில் உள்ள தலம். திருமணத்தடை ஏற்படுகின்றவர்கள் இங்கு வந்து அம்பாளை அருச்சித்து வழிபடுகிறார்கள். இங்கு பங்குனி உத்திரப்பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று இன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம்

முருகப் பெருமான் தங்கமயில் வாகனத்தில்
புறப்பாடு 26.3.2024 – செவ்வாய்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்களை வீடாக கருதப்படும் திருப்பரங்குன்றத்தில், அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் பங்குனித் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும், தங்கப்பல்லக்கிலும், பல்வேறு வாகனத்திலும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பங்குனி உத்திரப்பெருவிழாவில், இன்று ஸ்ரீ முருகப் பெருமான் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.

திருவரங்கத்தமுதனார் உற்சவம்
26.3.2024 – செவ்வாய்

திருவரங்கத்து அமுதனார் திருவரங்கக் கோயிலின் புரோகிதராகவும், தர்ம கர்த்தாவாகவும் இருந்தவர். புரோகிதம் என்பது கோயிலில் பஞ்சாங்கம் புராணம் வாசித்தல் வேத விண்ணப்பம் செய்தல். திருவரங்கத்தின் கோயில் சாவி அவரிடம்தான் இருந்தது. அவர் ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சீடராகி ராமானுஜரின் மீது ராமானுஜ நூற்றந்தாதி எனும் மிகச் சிறந்த நூலை இயற்றினார். அது மேலோட்டமாகப்பார்த்தால், ராமானுஜரின் புகழ் பாடுவதாக இருந்தாலும், ஆழ்வார்களின் புகழையும், அவர்கள் அருளிய அருளிச் செயலின் புகழையும், வைணவ தத்துவங்களையும் உள்ளடக்கிய நூல் என்பதால், அதை ஆழ்வார்களின் நூலோடு சேர்ந்து வைணவர்கள் கோயில்களில் முறையாக ஓதுவார்கள். அப்படிப்பட்ட திருவரங்கத்து அமுதனாரின் அவதார நட்சத்திரம் பங்குனி மாதம் அஸ்த நட்சத்திரம். அதாவது இன்று. மன்னார்குடி

ஸ்ரீ ராஜகோபாலசுவாமி உற்சவ ஆரம்பம்
27.3.2024 – புதன்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் சிறப்பு பெற்ற வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராஜகோபாலசுவாமிக்கு ஸ்ரீ வித்யா ராஜாகோபாலன் என்று திருநாமம். இந்தக் கோயிலை தட்சிண துவாரகை (தெற்கு துவாரகா) எனக்கூறுகின்றனர். நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால், செண்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால், குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா18 நாட்களும், அதைத் தொடர்ந்து, 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவடையும். பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோயில் உற்சவம் இன்று தொடங்குகிறது.

காரைக்கால் அம்மையார் குருபூஜை
28.3.2024 – வியாழன்

எல்லோருக்கும் தாயும் தந்தையுமாக விளங்குகின்ற இறைவன், நம்மையே என்று அழைத்ததால் காரைக்கால் நகரில் பிறந்த இந்த சிவனடியாருக்கு காரைக்கால் அம்மையார் என்கின்ற திருநாமம் நிலைத்
தது. காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர். நாயன்மார்களில் மூத்தவர். கயிலை மலையின் மீது கால்கள் படக்கூடாது எனக் கருதி கைகளால் நடந்து சென்றவர். அந்தாதி நூல்களில் மிகப் பழமையான நூலாகக் கருதப்படும் அற்புதத் திருவந்தாதி என்னும் நூலை இயற்றியவர். இந்த நூல் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும். இது தவிர, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோயிலில் தனி சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோயில் காரைக்கால் அம்மையார் கோயில் என்று மக்களால் அழைக்கப் பெறுகிறது. இவருடைய சிறப்புக்கள் சில.

1. சிவபெருமானால் ‘‘அம்மையே’’ என்று அழைக்கப்பட்டவர்.
2. இசையில் வல்லவர். இறைவன் நடனமாடும் போது கீழே அமர்ந்து இசைத்தபடி இருப்பார்.
3. அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் இருப்பவர். மற்ற நாயன்மார்கள் நின்றபடியேபிரகாரத்தில் இருப்பர்.
4. தமிழில் அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்.
5. திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையார் தங்கியமையால், ஞான சம்பந்தர் அத்தலத்தில் கால்பதிக்க தயங்கினார்.
6. அம்மையாரின் பாடல்களை மட்டுமே மூத்த திருப்பதிகம் என்று சைவத்தில் சிறப்பிக்கப்படுகிறது. அவருடைய குருபூஜை தினம் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அதாவது இன்று எல்லா சிவாலயங்களிலும், சிவனடியார்கள் இல்லத்திலும் அனுஷ்டிக்கப்படும். அன்று அபிஷேக ஆராதனைகள் செய்து காரைக்கால் அம்மையார் இயற்றிய பாடல்களை ஓதுவார்கள்.

அழகிய நம்பிகள் கருட வாகனம்
29.3.2024 – வெள்ளி

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ விழாவில், இன்று ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெறும். இக்கோயிலில், பங்குனி பிரம்மோற்சவம் தினம் 5-ஆம் திருவிழாவில் காலையில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். பின்னர், அழகிய நம்பிராயர் மற்றும் தேவிமார்களுக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெறும். மாலையில் அழகிய நம்பிராயர், வீற்றிருந்த நம்பி, சயன நம்பி, திருப்பாற் கடல் நம்பி, திருமலை நம்பி ஆகிய 5 சந்நதிகளின் உற்சவர்களும், 5 கருட வாகனங்களில் எழுந்தருளுவர். அலங்காரமாகி, தீபாராதனை, தீர்த்த விநியோகம் நடைபெறும். இரவு 9 மணியளவில், ஒவ்வொரு எம்பெருமானும் ராயகோபுர வாசல் கடந்து படியேற்ற சேவை நடைபெறும். மாடவீதிகள், ரதவீதிகள் வழியாக ஐந்து பெருமாளும் வலம் வந்ததைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

விஷ்ணுபிரியா

You may also like

Leave a Comment

six + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi