Sunday, April 14, 2024
Home » மீன்களில் இருக்கு இத்தனை வகை!

மீன்களில் இருக்கு இத்தனை வகை!

by Lavanya

பழங்காலம் தொட்டே தமிழ் மக்கள் மீன் வகைகளை ரசித்து, ருசித்துச் சாப்பிட்டு வருகிறார்கள். கடல் பகுதியில் உள்ளவர்கள் இன்றளவும் தங்கள் உணவில் மீன்களை ஒரு பிரதான இடத்தில் வைத்திருக்கிறார்கள். மற்றப் பகுதிகளில் இருப்பவர்களும் குளம், குட்டை, ஏரி, ஆறு, வாய்க்கால் போன்ற நீர்நிலைகளில் உள்ள மீனைப் பிடித்துக் குழம்பு வைத்தும், வறுவல் செய்தும் சாப்பிடுகிறார்கள். கடல் மீனாக இருந்தாலும், ஏரி, குளத்தில் கிடைக்கும் மற்ற மீன்களாக இருந்தாலும் ஒவ்வொரு மீன் வகையையும் பார்க்கும்போதே சரியாக சொல்லி விடுவார்கள் அன்றைக்கு இருந்த மக்கள். ஆனால் இப்போது நாம் தினமும் சாப்பிட்டுப் பார்க்கும் மீன்களின் பெயர்களைக்கூட சரியாக தெரிந்து வைத்திருக்கவில்லை இன்றைய தலைமுறை. இவர்களுக்கு ஒரு கைட்லைன் கொடுக்கும் வகையில் சில மீன் வகைகளையும், அவற்றின் பண்பு நலன்கள் பற்றியும் விளக்குகிறார் நாட்டுப்புற ஆய்வாளர் இரத்தின. புகழேந்தி.

அசட மீன்

நடுமுள் மட்டுமே உள்ள சிறு மீன் வகைதான் இந்த அசட மீன். இது சிறுவர்களின் சுண்டு விரல் அளவே இருக்கும். இது ஏரிகளிலும், வாய்க்கால்களிலும் காணப்படும். முருங்கைப் பிஞ்சோடு அசட மீனைக் கலந்து வறுத்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும் என்பது மக்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.

அயிறை மீன்

இது ஆற்றில் கிடைக்கும் ஒரு வகை மீன். அயிறை மீனின் தன்மைப் பற்றிப் பதார்த்த குணபாடத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அயிறை மீனை உண்பவர்க்கு உயிருக்கு ஆதாரமாகிய உடம்பும், முடியும் ஆரோக்கியமாக வளரும். பசியின்மை நீங்கும்.

ஆரா மீன்

ஆரா மீன்களில் பேராரால், சிற்றாரால் என இரண்டு வகை உண்டு. பேராரால் மீன் மருந்துக்குச் சமமானது. இது உடம்பிலுள்ள பலவகை நோய்களை நீக்கி, மலக்கட்டையும் நீக்கி உடம்புக்குச் சுகத்தை உண்டாக்கும். இதனைப் பேயன் ஆரா என்றும் கூறுகிறார்கள். சிற்றாரால் மீனை உண்டால் பசி நீங்கும். கபம் கரப்பான், அக்கினி மாந்தம், வாயில் நீர் ஊறல் ஆகியவை உண்டாகும். இதனைச் சேத்து (சேற்று) ஆரா என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இறால்

இறாலிலும் பெரிய இறால், சிறிய இறால் என இரண்டு வகை உண்டு. ஆற்றிலும் கிடைக்கிறது. இவற்றை வறுத்தும் குழம்பு வைத்தும் உண்ணுகிறார்கள். சிறிய இறாலை உலர்த்தி இறால் பொடி என்ற பெயரில் சந்தையில் விற்கிறார்கள். இறால் உண்டால் வாயு, அக்கினி மாந்தம், வயிற்று உப்புசம், நமைச்சல் ஆகியவை குணமாகும்.

உளுவை

செதில்கள் சற்றுப் பெரிதாகவும், சொறசொறப்பாகவும் அமைந்திருக்கும் இந்த மீன்கள் ஏரி குளங்களில் நிறைந்திருக்கும். சுவை குறைவாகவே இருக்கும். இதனை உண்டால் உடம்பிலுள்ள பலவித நோய்கள் நீங்கும். ஆனால் கரப்பான் உண்டாகும்.

உல்ல மீன்

கை அளவு நீளமும், ஊசி போன்ற முகமும் உடையது இந்த உல்ல மீன். உண்பதற்குச் சுவையானது. இதன் சுவைக்காகவே பலர் இதனை விரும்பி உண்ணுகிறார்கள். “ உள்ளத உரியத வித்துட்டு உல்லமீன் வாங்கித் தின்னு’’ “உடும்புக் கறியும் உல்லமீனும் உடம்புக்கு நல்லது’’ போன்ற வழக்காறுகள் மக்களிடம் காணப்படுகிறது. ஆனால் இதனை உண்டால் பேதியும், காணாக் கடி விஷமும் அதிகரிக்கும்
என்கிறது பதார்த்த குணபாடம்.

கடல் கெளிறு

கடல் கெளிறு நெய்ப்பசையும், மிருதுவும் கொண்டது. இம்மீனை உண்டால் மாருவீரியமும், படைநோயும், சளியும் பெருகும். குளத்தில் இருக்கும் கெளிறு மீனைக் கெளுத்தி என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். பெருங்கெளுத்தி, கட்ட கெளுத்தி என இருவகை உண்டு. இது அதிக முள்ளின்றி சுவையாக இருக்கும்.

கிழங்கா மீன்

இதுவும் கடல் மீன் வகையைச் சார்ந்ததுதான். இதனை உண்டால் சகல நோய்களும், மலச்சிக்கலும் போகும். பசியும், உடல் செழுமையும் உண்டாகும்.

குறவை

இது ஏரி குளம் வாய்க்கால்களில் வளரும். இம்மீனை கொறத்தகுட்டி என்று பேச்சுவழக்கில் குறிப்பிடுகிறார்கள். வயிற்றுப் பகுதி வெண்மையாகவும், மஞ்சள் நிற சப்பட்டையையும் கொண்டிருக்கும். இதனை உண்டால் குடல் நோய் தீரும், காசநோயும் குணமாகும்.

கெண்டை

கெண்டை மீனில் ஏழு வகைகள் இருப்பதாக கூறப்படுவதுண்டு. இதில் கதம்பக் கெண்டை ஏரிகளில் இருக்கும். நன்கு வளர்ந்த இந்தக் கெண்டை மிகவும் பெரிய அளவில் இருக்கும். ஏழெட்டு பேர் சேர்ந்து பிடித்துக் கோடாலியால் பிளந்து பங்கிட்டுக் கொள்வதுண்டு. கோழிக்கெண்டை சிறு மீன் ரகம். நல்ல ருசியுடையது. ஏரி, குளத்தில் கிடைக்கும் நன்னக் கெண்டையை சன்ன மீகை உண்டால் சளி குணமாகும் என நம்புவதுண்டு. உடம்பின் தளர்ச்சி நீங்குவதோடு கரப்பான், ரணம், சளி ஆகியவை விலகும். சாணக்கெண்டை குட்டையாகவும், கட்டையாகவும் உடலமைப்பைப் பெற்றிருக்கும். ஏரி, குளம், வாய்க்கால் பகுதிகளில் இருக்கும். வறுத்த சோளத்தை அரைத்து மாவாக்கி சாணியில் தெளித்து உருட்டி, நீர்நிலைகளில் வைத்து அடையாளத்திற்கு ஆடுதொடா குச்சியைக் குத்தி வைத்து விடுவார்கள். சோளமாவு வாசனைக்கு கெண்டைகள் சாணியை மொய்க்கும். ஊத்தாலின் உதவியோடு மீன்களைப் பிடித்து வந்து சமைத்து உண்பர். கெண்டைகளில் சிலேப்பிக் கெண்டைக்கு முக்கிய இடமுண்டு. இதன் சுவையைக் கொண்டே இப்பெயர் வழங்கப்படுவதாகக் குறிப்பிடுகிறார்கள். இதைக் குழம்பு வைத்து உண்ணுகிறார்கள். சேல் கெண்டை என்று ஒரு ரகம் இருக்கிறது. குட்டையான வடிவமுடைய இம்மீன் குளம், வாய்க்கால்களில் வளர்கிறது. மிகுந்த சுவையுடையது. ஒழுமுட்டி கெண்டை உருண்டையாகவும், கெட்டியாகவும் உடலமைப்பைக் கொண்டிருக்கும். இதையும் குழம்பு வைத்து உண்ணுகிறார்கள். குழம்பில் கரையாது.

சீவாள மீன்

மீசையுடைய செந்நிறமான மீன் இது. வலையில்தான் அகப்படும். பெரிய ஏரிகளிலும், வாய்க்கால்களிலும் காணப்படும்.

சுரும்பு மீன்

இது கடல் மீன் வகையைச் சார்ந்தது. இதனை உண்டால் வயிற்றுப் பிணிகள் நீங்கும். வீரியத்தையும், பசியையும்
உண்டாக்கி பைத்தியத்தைத் தணிக்கும்.

திருக்கை மீன்

இதுவும் கடல்வாழ் மீன் வகையாகும். மீனவர்கள் திருக்கையின் வாலை ஆயுதமாகப் பயன்படுத்துவர். திருக்கை மீன் தின்பவர்க்கு வாத் தாதுவும், சுக்கில தாதுவும் அதிகரிக்கும். பயித்தியமும் வீக்கமும் நீங்கும். பாலூட்டும் தாய் இதனை உண்டால் பால் சுரப்பு அதிகரித்து, குழந்தைக்குப் போதிய பால் கிட்டும்.

தேளி

பெரிய தலையுடன் கருகருவென்றிருக்கும் இந்த மீனின் நெற்றிப் பகுதியில் கொடுக்கும் இருக்கும். கொடுக்கினால் கொட்டினால் விஷம் ஏறும். எனவே இந்த மீனைப் பிடித்ததும் கொடுக்கை நீக்கி விடுவார்கள்.

தொழுமான்

ஏரி, குளம், வாய்க்கால்களில் கிடைக்கும் இந்த மீன் ஒழுங்கற்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். இந்த மீனை குழம்பு வைத்து உண்ணுவார்கள். நல்ல ருசியில் குழம்பு மணக்கும்.

நெய்த்தோலி

இது ஒரு சிலருக்கே தெரிந்த மீன் வகை. இதனை யாரும் அதிகமாக விரும்பி உண்பதில்லை. இதனை உண்டால் பசியின்மை, வாதம், வயிறு உப்பல் உண்டாகும். பசியைக் கெடுக்கும். இதனால் இந்த மீன் ஒரு விரும்பத்தகாத மீனாக இருக்கிறது.

பண்ணி சள்ள

பன்னீர் சள்ள என்பதே இந்த மீனின் உண்மையான பெயர். மக்களால் பண்ணி சள்ள என்று குறிப்பிடப் பெறுகிறது.

பப்பை

இது கூர்மையான முள்ளைக் கொண்ட மீன் வகை ஆகும். உருவத்திலும் சிறிய அளவில் இருக்கும். ஒவ்வொன்றாக ஆய்ந்து குழம்பு வைப்பதற்கு நேரம் ஆகும் என்பதால் பலர் இதனை வாங்குவதில்லை. ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் வாங்கி உண்பர்.

பறந்தா மீன்

முரட்டு மீசை, பெரிய கண்களுடன் கூடிய பருத்த உடலமைப்பைக் கொண்ட மீன் இது. ஆளரவம் கேட்டால் துள்ளிப் பாயும். இதை தூண்டில் மூலம் பிடித்து சமைத்து உண்கிறார்கள்.

மடவை

பழங்காலம் முதல் மிகவும் விரும்பிச் சாப்பிடும் மீன்களில் மடவையும் ஒன்று. கடல் வாழ் மீன் இனத்தைச் சேர்ந்த இந்த மீன் ருசி மிகுந்தது. இதனால் மாட்ட வித்து மடவமீன் வாங்கு என்ற வழக்கும் இருக்கிறது.

You may also like

Leave a Comment

20 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi