சென்னை: டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைச் சீர் செய்ய வேண்டும் என டிடிவி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: திருநெல்வேலி வன்னிகோனேந்தல் டாஸ்மாக் கடையில் இரவு மதுவாங்கும்போது தகராறில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள் சிலர் கும்பலாகச் சேர்ந்து, டாஸ்மாக் விற்பனையாளரும் கழக தொழிற்சங்க உறுப்பினருமான பால்துரை, உதவி விற்பனையாளரும் கழக தொழிற்சங்க உறுப்பினருமான பாலமுருகன் ஆகியோரை அரிவாளால் கொடூரமாக தாக்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
மது விற்பனையை மட்டும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கும் அரசு, அதில் பணியாற்றும் அரசு ஊழியர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும். இனியும் தாமதிக்காமல் டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைச் சீர் செய்ய தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.