உலகில் 6 பேரில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதர்களின் வாழ்வியல், காலநிலை மற்றும் உணவு பழக்க வழக்கத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களால் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே, உத்தரபிரதேசம் மாநிலத்தில் தான் 2 லட்சத்து 10 ஆயிரத்து 958 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை 93 ஆயிரத்து 536 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. புற்றுநோய் முற்றி இறந்தவர்கள் லிஸ்டில் உத்தரபிரதேசத்தில் மட்டும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 818 பேர் உயிர் இழந்துள்ளனர். அதுவே தமிழ்நாட்டில் 50 ஆயிரத்து 841 பேர் இறந்துள்ளனர். அந்தவகையில், தமிழகத்தில் புற்றுநோயை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சையில் சென்னையில் தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவிற்கு ஓமந்தூரார் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புற்றுநோய்க்கு கீமோதெரபி உள்பட மூன்று வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு மார்ச் மாதத்தில் ரூ.34 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தை (Advanced Robotic Surgery Centre) திறந்து வைத்தார். இதன் மூலம், கருப்பை வாய் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருக்கும் மக்களும் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். இது தொடர்பாக புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ் குமார் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தில் இதுவரை 62 பேருக்கு பல்வேறு நிலையில் உள்ளவர்களுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் நலமுடன் உள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் இதற்கு 5 லட்சம் செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் இலவசம். ரோபோடிக் மூலம் நடக்கும் ஆபரேஷன் துல்லியமாகவும், விரைவாகவும் செய்யலாம். ரோபேடிக் இயந்திரத்தை கையாள 6 டாக்டர்களுக்கு பயிற்சி பெற்றுள்ளனர். வழக்கமான ஆபரேஷன் என்றால் ஒருவாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டும். ஆனால், ரோபாட்டிக் மூலம் ஆபரேஷன் செய்யப்படும் ஆபரேஷனுக்கு 3 நாள் மருத்துவ கண்கணிப்பில் இருந்தால் போதும். புற்றுநோயை பொறுத்தவரை 1 நிலை, 2ம் நிலையில் இருந்தால் சிகிச்சை அளித்து காப்பாற்றலாம். சில சமயங்களில் 3ம் நிலையில் உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம். எனவே, ஒருவருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதை தவிர சிறப்பு கதிர்வீச்சு சிகிச்சை மையம் ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ளது.
இந்த மையத்தில் சுமார் 25 கோடி ரூபாயில் உள்ள கதிர்வீச்சு கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கருவியை இயக்குவதற்காக 8 தகுதி வாய்ந்த மருத்துவர்கள் உள்ளனர். இந்த மையத்தில் மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 2000 நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இலக்கு சிகிச்சை மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சை ஓமந்தூரார் மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு வெளியில் 3 லட்சம் வரை செலவாகும். ஆனால் ஓமந்தூரார் மருத்துவமனையில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது.