Saturday, July 27, 2024
Home » தஞ்சை டூ மெக்சிகோ செண்டுமல்லிக்கு செம மவுசு!

தஞ்சை டூ மெக்சிகோ செண்டுமல்லிக்கு செம மவுசு!

by Porselvi
Published: Last Updated on

இன்றைய தேதியில் பூக்கள், காய்கறிகளை சாகுபடி செய்தால் தினசரி வருமானம் கிடைக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் பல விவசாயிகள் காய்கறிகளையும், பூக்களையும் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் மருங்குளம் அருகே உள்ள காராமணித்தோப்பில் செண்டிகைப்பூ என்கிற செண்டுமல்லிப்பூக்களை சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார் முருகேசன் என்ற விவசாயி. ஒரு மாலை வேளையில் தனது மனைவி பாகம்பிரியாளுடன் பூ அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முருகேசனைச் சந்தித்தோம். பணிகளுக்கு இடையே நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “நம்ம ஊரு காராமணிதோப்பில் அப்போல்லாம் கிணற்றுப் பாசனம்தான். இப்போ பம்ப்செட், மோட்டார் வைத்து பாசனம் செய்றோம். மண் ஊற்றுக் கிணறு. கொஞ்சம் அடியிலேயே தண்ணீர் கிடைக்கும். இளநீர் கணக்காக அப்படி ருசிக்கும். இங்க ஆற்றுப்பாசனம் கிடையாது. தண்ணீர் ஊறிக்கிட்டே இருக்கும். எங்க வயலுக்கு மண் கிணறுதான். சிலர் பட்டறைக்கிணறு போட்டு இருப்பாங்க. மண் கிணறுன்னா தண்ணீர் நல்லா ஊறி வரும். இந்தப் பகுதியில தண்ணீர் தட்டுப்பாடு இல்லாம கிடைக்கும். எங்க அப்பா கருப்பையா, முன்னெல்லாம் கொய்யா சாகுபடிதான் அதிகம் செஞ்சாங்க. அதுக்கு அப்புறமா சோளம், கம்பு, கேழ்வரகு, மிளகாய், நெல் சாகுபடி செஞ்சோம். கடந்த 2005-2006-ல தனியார் நிறுவனத்தை சேர்ந்தவங்க செண்டிகைப்பூ உற்பத்தி செஞ்சு தாங்க. நாங்க தொடர்ந்து கொள்முதல் செஞ்சுக்கிறோம்னு சொன்னாங்க.

அப்போ ஆரம்பிச்சேன். இதுல நிரந்தர வருமானம் கிடைக்குது. பூ பறிக்காம விட்டுட்டா அழுகிடும். விற்கலைன்னா குப்பையில கொட்டணும். ஆனா அவங்க பூ காய்ந்து போய் இருந்தாலும் சரி, அழுகினாலும் சரி விலைக்கு எடுத்துக்கிறாங்க. இதுல மருந்து தயாரிக்க மெக்சிகோ நாட்டுக்கு அனுப்புவாங்களாம். அன்னைக்கு காலக்கட்டத்துல கிலோ ரூ.2.50க்கு எடுத்துக்கிட்டாங்க. இப்போ கிலோ ரூ.8.50க்கு எடுக்கிறாங்க. இதற்கான பணத்தை வாரம் ஒருமுறை நேரடியாக வங்கிக் கணக்குக்கு அனுப்பிடுவாங்க. இதுல நஷ்டம் அப்படின்னு நினைக்க வேலையே இல்லை. காரணம் உள்ளூர் மார்க்கெட்டுல நல்ல விலை இருந்தா நாம பெரிய பூக்களை மார்க்கெட்டுல விற்கலாம். அப்படி பார்த்தா நமக்கு லாபம்தான். அதிக பனியில பூ கருகி போயிடுச்சுன்னா வெளியில விற்க முடியாது. ஆனா இவங்க அந்த பூக்களையும் கொள்முதல் செய்தாங்க. இதனால விவசாயிகளுக்கு நஷ்டம் இல்ல. சரியான முறையில செய்தா நல்ல லாபம்தான்.

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில்தான் அருமையான விளைச்சல் இருக்கும். செண்டிகைப் பூவுக்கும் தேவை அதிகமாக இருக்கும். நல்ல விலையும் கிடைக்கும். குளிர் சீசனில் பூக்கள் நன்றாக பூக்கும். அதிக அறுவடையும் செய்யலாம். இப்போதான் நான் லேட்டா விதை ஊன்றினேன். அடுத்த முறை முன்கூட்டியே செய்திடுவோம். இடையில் கொரோனா காலத்தில் சாகுபடி செய்யலை. இப்போ மீண்டும் ஆரம்பிச்சிட்டேன். செண்டிகைப்பூ சாகுபடியில் செலவுகள் குறைவு. சரியான முறையில் பராமரிப்பு செய்தால் நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம்’’ என செண்டிகைப்பூவின் லாபக்கணக்குடன் பேசத்தொடங்கிய முருகேசன், அதை சாகுபடி செய்யும் முறை குறித்து விளக்கினார்.
“ செண்டிகைப்பூ சாகுபடிக்காக முதலில் 2 முறை வயலை நன்கு உழ வேண்டும். அப்போதான் மண் நன்றாக பொலபொலவென்று மாறும். இந்த இரண்டு முறை உழவுக்கு பின்னாடி 2 டன் இயற்கை உரம் அதாவது தொழுஉரம் போட்டு நல்லா வயலை சமன்படுத்தணும். அதுக்கு மறுபடியும் மற்றொரு முறை வயலை உழ வேண்டும். அப்போதான் தொழு உரம் மண்ணோடு நன்றாக கலந்து உயிர்ச்சத்துக்களை உற்பத்தி செய்யும்.

மூன்றாவது உழவின்போது ஒரு டன் தொழு உரம் போட்டா போதும். பின்னர் நாலாவது முறையாக வயலை உழுது முடிச்சிட்டு பார் அமைக்கணும். வயலுக்கு எப்படி வரப்பு இருக்கோ அதுபோல சரியான அளவுக்கு அதாவது இரண்டரை அடிக்கு ஒரு பார் அமைக்கணும். இடையிலதான் தண்ணீர் பாய்ந்து ஓடும். நான் 200 குழி அதாவது இரண்டு மா அளவுல இப்போ செண்டிகைப்பூ சாகுபடி செய்து இருக்கேன். 300 குழி ஒரு ஏக்கர். அதுக்கு கொஞ்சம் குறைவு. விதைகளை தெளிச்சு நாற்று கன்று தயார் படுத்தணும். 20லிருந்து 22வது நாளில் அதை அங்கிருந்து எடுத்து நடவு செய்வோம். நாம அமைச்சு இருக்கிற நீளத்துக்கு தகுந்தாற் போல ஒரு பாருக்கு 40 முதல் 45 கன்றுகளை ஒரு அடி ஆழத்தில் நன்றாக ஊன்ற வேண்டும். சில இடத்துல பார் நீளம் குறைவாக இருந்தா செடிகள் எண்ணிக்கையும் குறையும். நான் இப்போ 10 ஆயிரம் கன்றுகள் ஊன்றி இருக்கேன். 40ல் இருந்து 45 நாட்களில் மொட்டு வந்து விடும். முதல் மொட்டை எடுத்து விடணும். அப்போதான் பக்கவாட்டில் அதிக கிளைகள் அடிக்கும். பூக்களும் அதிகமாக உற்பத்தியாகும். 60 நாளில் பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். வாரம் ஒருமுறை அறுவடை செய்வோம். செண்டிகைப்பூ சாகுபடியில் இலைநோய், சாம்பல் நோய் தாக்குதல் வரும். அதை சரியான முறையில் கண்காணிச்சு மருந்து தெளிப்போம். ஆர்கானிக் முறையில் தயாரான மருந்தாக இருந்தால் பூக்கள் நல்லா பெரியதாக பூக்கும். பூக்களில் புழுக்கள் தாக்குதல் இருக்கும். அசுவினி, வெள்ளை ஈ இரண்டும் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு மோனோகுரோட்டோபாஸ், செவின் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து அடிக்க வேண்டும். மழை அதிகமாக இருந்தால் செடிகள் கீழே சாய்ந்துவிடும். எல்லாவற்றையும் சமாளித்து முடித்தால் நல்ல அறுவடைதான். வாரத்தில் இரண்டு முறை தண்ணீர் விட வேண்டும். அதிகமாக தண்ணீர் நிற்கக் கூடாது. வயலும் காய்ந்து போய் விடக்கூடாது. அந்த பக்குவத்தில் தண்ணீர் விடுவோம். தொழு உரம் அதிகமாக போட்டா செடிகளின் வேர்கள் நன்கு பரவி செடி அருமையாக வளரும்.

செடி நட்ட 15வது நாளில் டிஏபி அல்லது காம்ப்ளக்ஸ் உரத்தைப் போட்டு, பார்களில் செடிகள் பக்கமாக மண்ணைச் சேர்த்து அணைப்போம். இதனால் செடிகள் ஆரோக்கியமா வளரும். அதோட பூக்கள் நல்ல எடையோட இருக்கும். முக்கியமா செடிகள் நன்றாக வேர் விட்டு வளரும். ஒரு செடியில 3 முதல் 4 கிலோ வரை பூக்கள் அறுவடை செய்யலாம். 15 நாளில் இருந்து 20 நாளில் ஒரு முறையும், அதற்கு ஒரு வாரம் விட்டு மற்றொரு முறையும் களை பறிக்கணும். பார் அமைத்து இருப்பதால் செடிகள் மத்தியில் களை வராது. தண்ணீர் பாயும் பகுதிகளில் மட்டும் களை இருக்கும். களை எடுத்தவுடன் மண் அணைவு செய்யணும். 200 குழி அளவுல செடிகள் நன்கு வளர்ந்து வந்தா 5 ஆயிரம் கிலோ வரை பூ அறுவடை செய்யலாம். சந்தையில் இருக்கும் பூக்களின் வரத்தைப் பொறுத்து கிலோ பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரை விலைபோகும். நல்ல விலை கிடைக்கும்போது நாங்க மார்க்கெட்டுல பூக்களை விற்பனை செய்வோம். ஆனா அங்க விலை ஏற்ற இறக்கமா இருக்கும். இதனால நாங்க தனியார் நிறுவனத்துக்கு பூக்களை விற்பனை செய்றோம். அழுகிப் போன பூக்களாக இருந்தாலும், அதைப் பறித்து நிழலில் காய வைத்து விடுவோம். அதையும் தனியார் கம்பெனி கொள்முதல் செய்து கொள்வாங்க. அப்படி பார்த்த இந்த செண்டிகைப்பூவில் எந்தவித நஷ்டமும் கிடையாது. தனியார் கம்பெனிக்காரங்க ஒரு கிலோ ரூ.8.50ன்னு விலை கொடுத்து எடுத்துக்கிறாங்க. குறைந்தபட்சம் 4 டன் பூக்கள் மகசூலா கிடைச்சாலும் ரூ.34 ஆயிரம் வருமானமா கிடைக்குது. செண்டிகைப்பூ சாகுபடியில அதிக பராமரிப்பு இருக்காது. களை எடுக்கிறது, தண்ணீர் பாய்ச்சிறது, உரம் தெளிக்கிறதுன்னு எல்லா வேலையையும் எங்க அம்மா, என் தம்பி, நான், என்னோட மனைவின்னு எல்லோரும் சேர்ந்து பார்த்துக்கிறோம். இதனால் கூலி ஆட்கள் சம்பளம் குறையுது. செலவுன்னு பாத்தா ரூ.12 ஆயிரம் வரைக்கும் ஆகும். மீதி 24 ஆயிரம் சுளையா லாபமா கிடைக்கும். மார்க்கெட்டில் கிலோ ரூ.50ன்னு போற நேரத்துல அங்க விற்பனை பண்ணுவோம். அது எங்களுக்கு கூடுதல் லாபத்தைக் கொடுக்கும்’’ என உறுதிபடக் கூறுகிறார் முருகேசன்.
தொடர்புக்கு:
முருகேசன்: 80989 45542.

செண்டுமல்லி பூவுக்கு ஊருக்கு ஒரு பெயர் இருக்கிறது. சில இடங்களில் சாமந்தி என்கிறார்கள். சில இடங்களில் கேந்தி என்கிறார்கள். தஞ்சை மாவட்டம் மருங்குளம் பகுதியில் செண்டிகை என அழைக்கிறார்கள். அந்த வட்டார வழக்கிலேயே நாம் செண்டிகை என இந்தக்கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறோம்.

தீவனத்திற்கு இயற்கை நிறமி

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் செண்டிகைப்பூ அதாவது செண்டு மல்லிப்பூக்களை சத்தியமங்கலத்தில் உள்ள எங்கள் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கிறோம். அங்கு பூக்களில் உள்ள நீரைப் பிரித்து எடுத்து குச்சி தீவனம் போன்று மாற்றி கொச்சினுக்கு அனுப்புவோம். அங்கு குச்சித் தீவனம் போல் உள்ளவற்றில் ஆரஞ்சு நிறத்தை மட்டும் தனியாக பிரித்து எடுப்பார்கள். இது மெக்சிகோ நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. முழுமையாக ஆர்கானிக் முறைப்படி இது நடக்கிறது. மெக்சிகோவில் இயற்கை நிறமியை கோழி, மீன் தீவனங்களின் நிறத்திற்கும், குச்சித் தீவனம் போல் உள்ளதை கண் சம்பந்தப்பட்ட நோய்க்கு மருந்தில் சேர்க்கவும் பயன்படுத்துகிறார்கள் என்கிறார், செண்டுமல்லிப்பூக்களை கொள்முதல் செய்யும் தனியார் நிறுவன மேலாளர் சந்திரன்.

 

You may also like

Leave a Comment

17 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi