டெல்லி : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜியை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று காலையில்கூடியது. ஒன்றிய பட்ஜெட்டில் எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா உட்பட 8 முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடத்தில் தனது பேச்சு நிறுத்தப்பட்டதை கண்டித்து அவர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதலமைச்சராக பங்கேற்ற எனக்கு முழுமையாக பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனக்கு முன்னால் பேசியவர்களுக்கு 10 -20 நிமிடங்கள் வரை பேச அனுமதி வழங்கப்பட்டது. மேற்கு வங்கத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என்று பேசும்போதே என்னுடைய மைக்கை ஆஃப் செய்து அவமதித்துவிட்டார்கள். மத்திய பட்ஜெட் ஒருதலைபட்சமாகவும் அரசியல் ரீதியாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது;
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. அதனை பொறுத்துக் கொள்ள முடியாது. என்னை பேசவிடாமல் தடுத்ததன் மூலம் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிய அரசு அவமதித்துள்ளது. என்னை பேச விடாமல் தடுத்தது நாட்டின் அனைத்து மாநில கட்சிகளையும் அவமதிப்பதாகும்,”இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜியை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எதிர்கட்சிகளை எதிரிகள் போல் ஒடுக்க நினைக்கக் கூடாது. எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து தரப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பதே கூட்டாட்சி தத்துவம் ஆகும். இதுதான் கூட்டாட்சி தத்துவமா?. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை நடத்தும் விதம் இது தானா?..”இவ்வாறு ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது.