Saturday, May 18, 2024
Home » தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உரை

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உரை

by Suresh

சென்னை : தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு 2023 நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, விழாப் பேருரையாற்றினார்.

திருச்சிராப்பள்ளி கோர்ட்யார்ட் ஹோட்டலில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு – 2023 நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, உற்பத்தியாளர் கூட்டமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை இன்று (19.06.2023) துவங்கி வைத்து உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு, விழாப் பேருரையாற்றினார்கள்.

வாழ்ந்து காட்டுவோம் திட்டம், உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு 2023 நிகழ்ச்சியை நடத்துகிறது. இது தமிழ்நாட்டு வேளாண் துறை வெற்றிக்கு ஒரு புரட்சிகரமான சந்திப்பாகும். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (VKP) அதன் திட்டப் பயனாளர்களான உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் (PCs) மற்றும் பொருட்களை வாங்கும் சந்தையாளர்கள் இடையேயான நட்புறவை வளர்ப்பதற்கும், உற்பத்தியாளர் – சந்தையாளர் இடையே உள்ள இடைத்தரகர்களைத் தவிர்ப்பதற்கும், தமிழ்நாட்டின் வேளாண் சமூகம் மற்றும் அவர்களின் முனைவுகளை மேம்படுத்தவும் இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த ஒருங்கிணைப்பு தமிழ்நாட்டின் ஊரகப் புத்தாக்கத்திற்கு ஓர் உறுதியான முன் முயற்சியாகும். இதன் மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், திட்டப் பயனாளர்களுக்கு உள்ள சவால்களை நீக்கி, ஊரக அளவில் வேரிலிருந்து ஆதரவை வழங்கிட முன்னோடியான திட்டங்களை தயார் நிலையில் வைத்துள்ளது. அதில் ஒன்றாக தற்போது உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பை நடத்தி, உற்பத்தியாளர் (VKP) ஆதரவு பெற்ற உற்பத்தியாளர் கூட்டமைப்புகள்) மற்றும் பொருட்களை வாங்கும் சந்தையாளர்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தவுள்ளது.

இதன் மூலம் இருதரப்பினரும் கலந்தாலோசிக்கவும், விலைகளை நிர்ணயிக்கவும் மற்றும் வளமான வணிகத்தை நடத்துவதற்குமான பலமானப் பாதையை அமைக்கிறது. இந்த உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு, உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் (PCs) அவற்றின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தவும், பொருட்களை வாங்கவுள்ள சந்தையாளர்களிடம் நேரடி இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் மற்றும் சந்தை வாய்ப்புகளை முழுமையாகப் பெற்றிடவும் வழி வகுக்கும்.

மேலும் வணிகத்தில் உள்ள இடைத்தரகர்களைத் தவிர்ப்பதன் மூலம் இருதரப்பினருக்கும் இடையேயான விற்பனை பரிமாற்றத் தொகையளவு குறைவதுடன், குறைந்த விலையில் உயர்ந்த தரப் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்யவும் வழிவகைச் செய்யப்படுகிறது. இதுதவிர, உற்பத்தியாளர்-சந்தையாளர் இடையே வெளிப்படையான வணிகமும், நட்புறவும் உறுதிச் செய்யப்படுவதுடன் நீண்டகாலத்திற்கான பிணைப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்நிகழ்ச்சியில், திட்ட ஆதரவில் புதிதாக உருவாக்கப்பட்ட 34 உற்பத்தியாளர் கூட்டமைப்புகளையும், ஏற்கனவே இயங்கிவரும் 19 உற்பத்தியாளர்களையும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 250 சந்தையாளர்களிடம் அறிமுகபடுத்தப்பட்டனர். இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு உறுதியான சந்தை இணைப்பை உருவாக்கப்படுவதுடன் வணிக வெற்றிக்கான நீடித்த பிணைப்பு உருவாக்கப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் VKP திட்டப் பயனாளர்கள் சங்கராபரணி FPCL, செம்மயில் FPCL> சக்தி பவானி மகளிர் FPCL, TNRTP பூர்வக்குடி FPCL, விருதரசி FPCL, முகவை பாரம்பரிய பயிர் PCL, TNRTP திருவண்ணாமலை நிலக்கடலை FPCL, தொண்டைமண்டலம் FPCL, கோடை ஹில் கிராப் FPCL மற்றும் நைனாமலை FPCL ஆகியவை கையெழுத்திட்டுள்ளனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒற்றுமைக்கான உறுதிப்பாட்டை உறுதிச்செய்வதுடன் இருதரப்பு வளர்ச்சிக்குமான நற்சூழலை உருவாக்கும்.

இந்த நிகழ்ச்சியில் மற்றொரு முக்கிய அம்சமாக ஓரிட சேவை மையத்தின் (One Stop Facility – OSF) ‘மதி சிறகுகள்’ இலச்சினையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இயங்கும் இந்த மையமானது ஊரகத் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் சார்ந்த அனைத்து சேவைகளையும் வழங்குவதுடன் அவர்களின் தொழில் வெற்றிக்குத் துணை நிற்கும்.

இந்த OSF மையங்கள் ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் சார்ந்த அனைத்து வகையான சேவைகளையும் வழங்குவதுடன் ஊரகப் பகுதிகளில் ஏற்கனவே இயங்கி வருகின்ற தொழில் நிறுவனங்களின் வெற்றிக்கு ஊக்கமிகு வழிகாட்டுதல்களை வழங்கிடும். இம்மையங்கள் 2-3 கிராமங்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் வட்டார அளவில் 42 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர்களின் தொழில் திட்டங்களை வளர்ப்பதிலும் வெற்றியைத் தேடித் தருவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிகழ்ச்சியில் மற்றுமொரு முக்கிய நிகழ்வாக, VKP திட்டப் பயனாளர்களின் ஊக்கமிகு வெற்றிக்கதைகள் அடங்கிய வெற்றிக்கதைப் புத்தகத்தினை (Coffee Table Book) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்தப் புத்தகம் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் VKP திட்டம் ஏற்படுத்திய தொழில் வள மாற்றத்தை பதிவு செய்துள்ளதுடன், பயனாளர்களின் அரப்பணிப்பு, தொழில் வெற்றிகள், நிலையான முயற்சிகள் மற்றும் அவர்களின் மேம்பாடுகள் குறித்த அனைத்துப் பதிவுகளையும் கொண்டுள்ளது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் இந்த உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு, தமிழ்நாட்டு ஊரகப் பகுதி உழவர்களின் வளர்ச்சிக்கு வேரிலிருந்து குறிப்பிட்ட மேம்பாட்டு உயர்வை அடைய வழிவகுக்கும். மேலும் இருதரப்பினருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தி வணிக செயல்பாட்டை வளர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வேளாண் துறையில் உயர்வான ஓர் வெற்றிப் பாதையை உருவாக்கும். அதுமட்டுமின்றி பிற மாநில சந்தையாளர்களின் வழியாக தமிழ்நாட்டின் வேளாண் துறையில் நிலையான மற்றும் உயர்வான வளர்ச்சியை கட்டமைக்கும்.

இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பா.செந்தில் குமார், தலைமையுரையாற்றினார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் எஸ்.திவ்யதர்ஷினி, துவக்க உரையாற்றினார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை செயலாக்க அலுவலர் பத்மஜா,வரவேற்புரையாற்றினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்மா.பிரதீப் குமார், அறிமுக உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, எஸ்.இனிகோ இருதயராஜ், சீ.கதிரவன், மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா, மாவட்ட ஊராட்சித் தலைவர் த.இராஜேந்திரன், விவசாயம், உணவு பதப்படுத்தல், வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மண்டலத் தலைவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

4 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi