சென்னை : தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக போர் தொடுப்பதை ஆளுநர் லட்சியமாக கொண்டுள்ளதாக முரசொலி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆளுநர் போன்றோரின் நரித்தனங்களை வாலறுத்த பூமி தமிழ்நாடு என்ற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள செய்தியில், “எப்படி நினைப்பது இந்த மனிதரை? வக்ரபுத்திக்காரர் என்பதா? குறுமதியாளர் என கணிப்பதா? சேடிஸ்ட் என எண்ணுவதா? திருந்தாத ஜென்மம் எனத் தீர்மானிப்பதா? – எந்த மனிதர் குறித்து இத்தனைப் பீடிகை என்பது சொல்லாமலே புரிந்திருக்கும். இத்தனை குணங்களுக்கும் ஒற்றை உதாரணமாக நட மாடிக் கொண்டிருக்கிறார் நமது ஆளுநர் ரவி! அவருடைய சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சில குரூர புத்திக் கொண்டவர்கள் திடீரென அம்பேத்கர் சிலையில் தார் பூசுவார்கள். இன்னும் சில சின்னப் புத்தியினர் தந்தை பெரியார் சிலைக்கு கருப்பு வண்ணம் அடிப்பார்கள். இன்னும் சில சிறுமதியாளர்களை அண்ணா, வள்ளுவர் சிலை களுக்கு காவித் துண்டு அணிவிப்பார்கள்! – இப்படி மூளை வளர்ச்சியற்றவர்கள் இரவோடு இரவாக செயல்படுவர்! பிடிபட்ட பின் அதில் சிலர் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பர் – இன்னும் பலர் அறிவு முதிர்ச்சி அற்றவர்களாக விளங்குவர்.
இப்படி செய்திகள் அவ்வப்போது ஏடுகளில் வரும்! அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை மிஞ்சிடும் வகையில் வள்ளுவருக்கு நமது ஆளுநர் காவி வண்ணம் பூசி, நெற்றி கை கால்களெல்லாம் விபூதிப் பட்டைகளை அணிவித்து, அந்தப் படத்தை வைத்து தனது மனைவி சகிதம் அதற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்! இதே ஆளுநர் அவரது மனைவி மற்றும், ஒன்றிய இணை அமைச்சர் முருகன் உடனிருக்க, ஓவிய மேதை திரு.கே.ஆர்.வேணுகோபால்சர்மா பல ஆண்டுகள் ஆராய்ந்து, சிந்தித்து, பெரும் தமிழறிஞர்கள் அங்கீகாரத் துடன் வரைந்து அளித்து, தமிழ்நாடு அரசால் ஏகமனதாக ஏற்கப்பட்ட வள்ளுவர் படத்துக்கு; முந்தைய வள்ளு வர் தினத்தன்று மரியாதை செலுத்தியுள்ள நிலையில், ஏன்; தற்போது திடீர் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைச் சிந்திக்கும் போது, ஆளுநர் மனநிலையில் இப்படி அடிக்கடி ஏற்படும் தடுமாற்றங்கள் குறித்து சராசரி மனிதன் சந்தேகம் கொள்வது இயற்கைதானே! வள்ளுவர் தினத்தன்று வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவர்கள், “திருக்குறளில் உள்ள வள்ளுவரின் ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையில் பல அம்சங்களில் நமக்கு வழி காட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது. நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது.
அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றிடுவோம்”. – எனச் சரியான புரிந்துணர் வோடு வள்ளுவருக்கு எந்தவித மதச்சாயமும் பூசாமல் வள்ளுவர் தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், நமது ஆளுநர் மட்டும் வள்ளுவர் குறித்து சரியான புரிதல் இன்றி அரைவேக்காட்டுத்தனத்தோடு வள்ளுவரை அணுகியுள்ளார் என்பதை அவரது வள்ளுவர் தின வாழ்த்துச் செய்தி எடுத்துக் காட்டுகிறது! “பாரதிய சனாதனப் பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி” – என வலிந்து ‘வள்ளுவர்’ எனும் பெருமலையை சனாதன ‘நூல்’ கட்டி தனது பக்கம் இழுக்க முயற்சி செய்துள்ளார்! வள்ளுவர் படத்துக்குக் காவி வண்ணம் மட்டும் பூசவில்லை கவர்னர் ரவி; அவரது வாழ்த்துச் செய்தியில் வர்ணாசிரமத்தையும் புகுத்தியுள்ளார்! ஆம்; மொழி, இனம், காலம், நாடு, மதம் கடந்து வாழ்வோடு, வாழ்வியலோடு பொருந்திக் கிடக்கும் குறள் படைத்த அய்யனை, கொச்சைப்படுத்தும் வகையில், அவருக்குக் காவிச் சாயம் பூசி, பட்டை தீட்டி, பாரதிய சனாதனத்தை பரப்பிவிட்ட தாகப் பரவசம் கொண்டுள்ளார் ஆளுநர்! எத்தனை சூடுபட்டாலும் திருந்தாது திரும்பத் திரும்பத் தனது வக்ரத்தனத்தைக் காட்டிக் கொண்டே இருக்கும் இவரை; இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள எந்தவகை மனிதராக எண்ணுவது? சொம்புக்குள் தலையை விட்டு, அந்தச் சொம்பு தலையில் மாட்டிக்கொண்டபின் அதிலிருந்து தலையை விடுவித்துக் கொள்ள வகையும் வழியும் தெரியாது தவித்திடும் பூனையைப் போல பல நேரங்களில் ஆளுநர் ரவி, தான் வகிக்கும் பதவியின் பெருமையைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தபின் அவர் நடத்திடும் அலப்பறைகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருப்பதைக் கண்டு கொண்டிருக்கிறோம்!
ஆளும் அரசியல் கட்சியோடு மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களின் உணர்வுக்கும், தமிழ்க் கலாச்சாரத்துக்கும் எதிராக அவர் ஏதாவது ஒரு வகையில் போர் தொடுப் பதைத் தனது இலட்சியமாகக் கொண்டு செயல்படு கிறார்! ‘தமிழ்நாடு’ என்ற பெய ருக்கு எதிராக மூக்கை நுழைத்துவிட்டு எல்லாத் திக்கிலிருந்தும் எதிர்பட்ட எதிர்ப்பால் மூக்குடை பட்டார்! ஆளுநருக்குத் தரப்பட்ட அதிகாரம், அங்கீகாரம் இவற்றைமீறி செயல்பட நினைத்து, தனது சாதுர்யத்தைக் காட்டுவதாக எண்ணி சட்டப்பேரவையில் அவருக்கு அரசு எழுதி அளித்த உரையில் இடைச்செருகல்கள் நடத்தியும், சிலவற்றை விடுத்தும் பேசி – அத்துமீறி நடந்தபோது முதலமைச்சர் தளபதி தந்த எதிர்தாக்குதலை எதிர்கொள்ள இயலாது சட்டமன்றத்தைவிட்டு ஓட்டமும்நடையுமாக வெளியேறினார். தனது பெயருக்குப் பின்னால் ‘ஐ.பி.எஸ்.’ என்ற பட்டத்தைப் பதித்திருப்பவராயிற்றே; விவரங்களைப் புரிந்து கொண்டு ‘தனது ஆட்டம் தமிழ்நாட்டில் செல்லாது’ என முடி வெடுத்து, தனது அதிகார வரம்புக்குள் அடங்கி செயல்படுவார் என எண்ணினோம். ஆனால் அவரது தொடர் நடவடிக்கைகள் அவரை திருந்தும் ஜென்மமாகக் காட்டிடவில்லை. ‘உச்சநீதிமன்றம் தொடர்ந்து குட்டிடும் குட்டுகளால் கூனிக் குறுகிப் போயிருப்பார்; இனி எல்லை மீறமாட்டார்’ என்ற பலரது நினைப்பினையும் நிராசையாக்கிக் கொண்டிருக்கிறார்! இப்போது அய்யன் திரு வள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசி, “பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்….” எனக் குறள் படைத்த அந்தக் கோமானை, வருணா சிரமத்துக்குள் வளைத்துப் போட முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆரியத்தின் ஆணவம், அகங்காரம், அத்துமீறல் அத்தனையையும் எதிர்கொண்டு; அந்த ஆரியத்தையே அடி பணிய வைத்து ஆட்சிபீடம் ஏறியது திராவிடக் கொள்கைகள்.
இதனை ஆளுநர் ரவியால் மட்டுமல்ல; அவருக்குத் துணைபோகும் ஆரிய அடிவருடிகளாகத் திகழும் கோடாரிக் காம்புகளாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது! வருணாசிரமக் கொள்கை களால் குட்டக்குட்டக் குனிந்து, புழுவாய், புன்மைத் தேரையாய் அடங்கி ஒடுங்கிப் புதைந்து கிடந்த தமிழினத்தை; அதன் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியாரின் பூமி இது!. மூடிக்கிடந்த தமிழ்ச் சமுதாயத்தின் விழிகளைத் திறந்து, அறிவாசான் அண்ணா வார்த்தெடுத்த அடலேறுகளைக் கொண்ட மண் இந்தத் தமிழ் மண்! தந்தை பெரியார் சுடரேற்றித் தந்த சுயமரியாதை தீபத்தை தமிழ்நாட்டின் மூலை முடுக் கெல்லாம் சுடர்விடச் செய்ய ஓய்வறியாது உழைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அறிவுச்சுடர் ஏற்றிய அறிவுசார் நிலம் இந்தத் தமிழ் நிலம்! இங்கே, ஆளுநர் ரவி மட்டுமல்ல; அவரது எஜமானர்கள் ஆட்டமெல்லாம் வேகாது! மேலும் தெளிவுபெற திராவிட இயக்க வரலாற்றைப் படித்துணர்ந்தால் இங்கே பலரின் நரித்தனங்களின் வாலறுக்கப்பட்ட விவரங்களை ஆளுநர் ரவி போன்றோரால் உணர முடியும்!”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.