சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 29ம் தேதி வரை தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 29ம் தேதி வடதமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இன்று இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.