Saturday, July 27, 2024
Home » தைவான் உணவுகள்!

தைவான் உணவுகள்!

by Lavanya

சில ருசிகர தகவல்கள்

உணவு வரலாற்றில் சைனீஸ் உணவுகள் உலக அளவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. இந்நாட்டின் பாரம்பரிய மற்றும் நவீன உணவுகளுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஃபுட்டிகள் ரசிகர்களாகி இருக்கிறார்கள். இதனால் சீன உணவுகளில் பல அயிட்டங்கள் உலக அளவில் ஹிட் அடித்திருக்கிறது. தென் சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவுப்பகுதியான தைவானும் உணவு விசயத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. பழங்குடி இனங்கள் நிரம்பிய இந்தத் தீவில் டச்சு, ஸ்பானிஷ், போர்த்துக்கீசியர்கள் என பல்வேறு நாட்டினர் குடியேறி இருக்கிறார்கள். அவர்களது அனைத்து உணவுக் கலாச்சாரமும் இங்கு பிரதிபலிக்கிறது. அதேசமயம் சீனாவின் பாரம்பரிய உணவுக் கலாச்சாரம் பாதுகாக்கப்படும் பகுதியாகவும் தைவான் விளங்குகிறது.2 கே மில்லினியத்திற்குப் பிறகு உலகம் முழுதும் ஒரு வலைப்பின்னல் ஏற்பட்டிருக்கிறது. உலகமயம், தாராளமயம் என பல சொற்கள் புழங்க ஆரம்பித்து, உள்ளங்கையில் உலகம் என்ற சொற்றொடர் உண்மை வடிவம் பெற்றிருக்கிறது.

இதில் தைவான் மட்டும் விதிவிலக்கா என்ன? 2002ம் ஆண்டில் தைவான் உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததால் அந்நாட்டின் விவசாயிகள் சர்வதேச சந்தைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் தைவானில் பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. வெளிநாட்டு பயிர் இனங்கள் உற்பத்தி செய்யப்பட்டதால், அதுசார்ந்த உணவுக் கலாச்சாரமும் தைவானுக்குள் தவிர்க்க முடியாததாகி விட்டது.தைவான் நாட்டில் இறைச்சி வகைகளோடு கடல் உணவுகள், அரிசி மற்றும் சோயா சார்ந்த உணவுகள் அதிகமாக உண்ணப்படுகிறது. தைவானியர்களின் விருப்ப உணவுகள் பெரும்பாலும் அரிசியைச் சார்ந்தே இருக்கிறது. அந்நாட்டில் ஜப்பான் நாட்டினர் குடியேறுவதற்கு முன்பு நீளமான அரிசியான இண்டிகா அரிசிதான் புழக்கத்தில் இருந்திருக்கிறது. ஜப்பானியர்கள் அங்கு சென்ற பின்பு குறுகிய அரிசியான ஜபோனிகா அரிசியை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தினர்.

இதனால் தைவான் மக்களின் விவசாயம் மட்டுமின்றி உணவு முறையிலும் சில மாற்றங்கள் புகுந்தது. ஜப்பானியர்களின் அரிசியை தைவானியர்கள் ஏற்றுக்கொண்டபோதும், அதிலும் தங்கள் தனித்துவ உணவுகளைத் தயாரித்து உண்ண ஆரம்பித்தார்கள். தைவானில் உள்ள உயர்தர உணவகங்கள், மது விடுதிகள் உள்ளிட்ட கேளிக்கை நிலையங்களில் வாத்து இறைச்சி மற்றும் சுறா மீன் துடுப்புடன் பறவைக்கூடு சூப், ப்ரெஸ்டு ஆமை இறைச்சி போன்ற சீன உணவு வகைகள் பரிமாறப்பட்டன. வசதி குறைந்த சாமானிய மக்கள் அரிசிக்கஞ்சி, ஊறுகாய், காய்கறிகள், இனிப்பு உருளைக்கிழங்கு இலைகள் உள்ளிட்டவற்றை தங்கள் உணவாகக்கொண்டனர். அவர்களுக்கு சமையல் எண்ணெய்யின் பயன்பாடு கூட ஒரு பொருட்டாக தெரியவில்லை. தைவான் ஒரு குட்டித்தீவு. அதேசமயம் பல்வேறு இனங்களின் குடியேற்றம் நிகழ்ந்ததால் மக்கள் தொகை அதிகரித்து, இட நெருக்கடி ஏற்பட்டது.

இந்தச் சூழலில் தைவானியர்களுக்கு புரதச்சத்து அதிகமாக தேவைப்பட்டது. இதற்கு அவர்களுக்கு கடல் உணவுகளே கை கொடுத்தன. கடலில் கிடைக்கும் பெரிய மீன்களான டுனா, குரூப்பர், சிறிய மீன்களான மத்தி, நெத்திலி போன்றவை அவர்களின் உணவுகளில் முக்கிய இடத்தைப் பிடித்தன. தைவானில் பால் மீன் என்ற மீன் மிகவும் பிரபலம். சாப்பிடுவதற்கு நம்மூர் வாவல் போன்று மென்மையாக இருக்கும். அதேசமயம் விலையும் குறைவு. தைவான் வெப்ப மண்டலப் பிரதேசமாக விளங்குவதால் இங்கு பழங்களின் பயன்பாடும் அதிகம். பப்பாளி, ஸ்டார் ஃப்ரூட், முலாம்பழம் போன்ற நீர்த்தன்மை மிகுந்த பழங்களுக்கு இங்கு வரவேற்பு அதிகம். இத்தகைய பழ வகைகள் இங்கு பயிர் செய்யப்படுவதோடு, பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்யப்படுகின்றன. தைவானில் உயர்தர உணவகங்கள் பல இருக்கின்றன. அதேபோல நடுத்தரமான உணவகங்களும் மிகுந்திருக்கின்றன. இருந்தபோதும் தள்ளுவண்டிக்கடை உள்ளிட்ட சாலையோரக் கடைகள் தைவான் முழுக்க நிரம்பி இருக்கின்றன. நம்மூர் பானிபூரியைப் போல அங்கு பல உணவுகள் சாலையோரத்தில் சக்சஸ் ரேட்டிங் கண்டிருக்கின்றன. சைவம், அசைவம் என இரண்டிலும் தைவானின் சாலையோர உணவகங்கள் இன்றும் சக்கை போடு போடுகின்றன.

-அ.உ.வீரமணி

சில ஃபேவரைட்ஸ்

சிப்பி ஆம்லெட்டுகள்

நம்ம ஊர் ஆம்லெட்டும், தைவானின் சிப்பி ஆம்லெட்டும் டோட்டல் டிப்ரெண்ட். சிப்பி ஆம்லெட்டின் வெளிப்புறம் மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் இனிப்பு மற்றும் புளிப்பு சாஸ்சுடன் வெல்லம், சோள மாவு கலந்திருக்கும். அதற்குள் காய்கறி மற்றும் முட்டை வைக்கப்பட்டு இருக்கும். சாப்பிடும்போது முதலில் இனிப்பு, புளிப்புடன் மொறுமொறுப்பான காய்கறிச் சுவையை உணரலாம். இறுதியாக முட்டையின் சுவை நமக்கு வேறு ஒரு ஃபீல் தரும்.

தேநீர் முட்டைகள்

இது ஒரு புரதம் நிறைந்த டேஸ்ட்டி டிபன். முட்டைகள் தேநீரில் வேக வைக்கப்பட்டு, சோயா சாஸ், இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு மற்றும் கிராம்பு போன்ற சில மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பலர் இதை பளிங்கு முட்டை என்றும் அழைக்கிறார்கள். முட்டை ஓட்டில் உள்ள விரிசல்கள் முட்டையின் உள்ளே பளிங்கு போன்ற வடிவங்களை உருவாக்குவதால் இந்த பெயர். தைவானில் நடைபெறும் இரவுச்சந்தைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் தேநீர் முட்டைகளுக்கு நல்ல கிராக்கி.

வறுத்த பால்

வறுத்த பால் என்பது உறைந்த பால் க்யூப்ஸ் மாவில் தோய்த்து, ரொட்டி துண்டுகளால் பூசப்பட்டு, ஆழமாக வறுத்தெடுக்கப்படுகிறது. இது சூடாக பரிமாறப்படுகிறது, நீங்கள் அதை கடிக்கும்போது, ​​பால் போன்ற உட்புறத்தின் கிரீம் தன்மையை சுவைக்கலாம். வெளியில் உள்ள மொறுமொறுப்பும்உங்களை கவர்ந்திழுக்கும்.

டாரோ பால்ஸ்

தைவானின் ஜயுஃபென்னில் முன்பு தங்கம் தோண்டியெடுக்கப்பட்டது. இதனால் இந்த நகரம் நம் நாட்டின் கோலார் போல பிரபலமான நகரமாக விளங்குகிறது. இந்த நகரத்தில் டாரோ பால்ஸ்தான் பேமஸ். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் டாரோ பந்துகள்தான் இந்த உணவின் இன்கிரிடென்ட்ஸ். கோடைக்காலங்களில் இது ஒரு குளிர் பானமாக இருக்கும். குளிர்காலத்தில் சூடான மற்றும் இனிப்பு நிறைந்த சூப்பாக வழங்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

eleven + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi