Tuesday, May 7, 2024
Home » கரும்பு விவசாயம் செய்து தினமும் ₹3 ஆயிரம் வருமானம்!

கரும்பு விவசாயம் செய்து தினமும் ₹3 ஆயிரம் வருமானம்!

by Porselvi

₹10க்கு கரும்புச் சாறு விற்பனை

விவசாயத்தில் வெறும் உழைப்பு மட்டும் இருந்தால் போதாது. சற்று புத்திசாலித்தனமும் தேவைப்படுகிறது. தனக்கு ஏற்பட இருந்த பெரிய இழப்பில் இருந்து மீண்டதுடன், தனக்கென ஒரு நிரந்தரத் தொழிலையும் அமைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு தனது தரமான விளைபொருளை குறைந்த விலையில் கொடுத்து வரும் விவசாயி மணியை சந்திப்பதற்காக திருச்சி கே.கே. நகர் அடுத்த முள்ளிப்பட்டியில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்றோம்…. நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரின் வெற்றி குறித்து கேட்டதும், வாருங்கள் தோட்டத்துக்கு சென்றுகொண்டே பேசுவோம் என்றவர், வீட்டுக்கு சென்று கரும்பு வெட்டி, கட்டுவதற்கு தேவையான அரிவாள், கயிறு உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்த தன் கரும்புத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அவருடன் பேசிக்கொண்டே நடந்தோம். அப்போது அவர் கூறுகையில்,‘‘ எனக்கு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. எனக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 1990ம் ஆண்டு 5 ஏக்கர் முழுவதும் கரும்புச் சாகுபடி செய்து, திருச்சி பெட்டவாய்த்தலையில் இருந்த தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தேன். அப்போது டன் ஒன்றுக்கு ₹700 முதல் ₹750 வரை கொடுத்தனர். வெட்டுக்கூலி டன் ஒன்றுக்கு ₹100. எவ்வளவு பாடுபட்டாலும் பெரிய அளவில் லாபம் இல்லை. இருந்தாலும் வண்டி ஏதோ ஓடிக்கொண்டிருந்தது.கரும்பை சாகுபடி செய்துவிட்டு, கட்டிங் ஆர்டருக்காக காத்திருக்க வேண்டும். அப்படியே கட்டிங் ஆர்டர் கிடைத்து கரும்பை வெட்டி ஆலைக்கு அனுப்பினாலும், பில்லாகி பணம் கைக்கு வந்து சேர்வதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளின் காரணமாக திருச்சி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி வெகுவாக குறைந்தது. இதனால் ஆலைக்கு கரும்பு வரத்து குறைந்தது. இந்நிலையில் பேரிடியாக ஒரு செய்தி வந்து சேர்ந்தது. வரத்து குறைந்ததால் சர்க்கரை ஆலையை இழுத்து மூடிவிட்டனர் என்ற தகவல்தான் அது. 5 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த கரும்பை என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி தவித்தேன். வேறு வழி இல்லை. மொத்தமாய் கரும்பை அழிக்க வேண்டியதுதான் என நினைத்திருந்த போது, நண்பர் ஒருவர் ஒரு யோசனை கூறினார். பக்கத்தில் கேகே நகரில் கரும்புச்சாறு விற்கும் கடை ஏதும் இல்லை. ஒரு மெசினை வாங்கிப்போட்டு கரும்பை சாறாக பிழிந்து சிறுக சிறுக விற்றுவிடு. கரும்பை அழிக்க தேவையும் இல்லை. உனக்கும் நிரந்தத் தொழிலாகும் என்றார். ஐடியா கொடுத்ததோடு நிற்காமல், மெசின் வாங்குவதற்கு பெரும் தொகையும் கொடுத்து உதவினார். அன்று ஆரம்பித்ததுதான் இந்த கரும்புச் சாறு விற்பனைத் தொழில். 15 வருடமாகிறது.

துவக்கத்தில் பத்து, இருபது கிளாஸ் விற்கவே தடுமாற்றமாக இருந்தது. கொஞ்சம், கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் வரத் துவங்கினர். கடை ஆரம்பித்தது முதல் இன்று வரை விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதே பத்து ரூபாய்க்குதான் விற்கிறேன். நகரின் பல பகுதிகளிலும் ₹20 முதல் ₹30 வரை கரும்புச்சாறு விற்கும் நிலையில் நான் மட்டும்தான் ₹10க்கு விற்பனை செய்கிறேன். எனவே என்னிடம் தேடி வந்து கரும்புச்சாறு குடிக்கும் வாடிக்கையாளர்கள அதிகம். தற்போது நுாறு முதல் 200 கிலோவுக்கு மேல் ஒரு நாளைக்கு விற்பனை செய்கிறேன்.ஒரு நாளைக்கு ₹2 ஆயிரம் முதல் ₹3 ஆயிரம் வரை விற்பனையாகும். இதற்கு எனக்கு பெரிய செலவு என்றால் மெசினுக்கு தேவைப்படும் டீசல் மட்டும்தான். மற்றபடி என் சொந்தக் கரும்பு என்பதால் ₹10க்கு விற்பனை செய்வது கட்டுப்படியாகிறது.கரும்பு சாகுபடிக்கு என பெரிதாக எந்த செலவும் கிடையாது. ஒரு பக்கம் வெட்டிக் கொண்டே செல்லும் போது மறுபுறம் கரும்பு கிளை வெடித்து துளிர்த்து அறுவடைக்கு தயாராகிவிடும். கரும்புச் சாறு எடுத்தபின் கிடைக்கும் சக்கைதான் அந்த கரும்புக்கு உரம். எனவே உரச்செலவு கிடையாது. வேலையாட்கள் வைத்துக் கொள்வதில்லை. நானும். என் குடும்பத்தினரும் சேர்ந்தே அனைத்து வேலைகளையும் செய்துவிடுவோம். என்னிடம் மாடு உள்ளது. மாட்டுச் சாண எருவை உரத்துக்கு பயன்படுத்திக் கொள்வேன்.

ராசாயன உரங்கள் எதுவும் பயன்படுத்துவதில்லை. இதனால் என் கரும்புச்சாறு சுவை மிகுந்ததாக இருக்கும். தற்போது 2 ஏக்கரில் தான் கரும்பு சாகுபடி செய்துள்ளேன். மீதமுள்ள நிலத்தில் நெல், உளுந்து, பயறு வகைகளை சாகுபடி செய்துவருகிறேன். காலை 6.30 மணிக்கு கரும்புத் தோட்டத்துக்கு நானும், என் மகனும் வந்துவிடுவோம். கரும்பை வெட்டி டூவீலரில் ஏற்றிக் ெகாண்டு கேகே நகர் பஸ்ஸ்டாண்டு அருகில் இருக்கும் சாலையோரக் கடையில் விற்பனையை காலை 10 மணிக்கு துவங்கிவிடுவேன். கொண்டு செல்லும் கரும்பு, தீரும் வரை விற்பனை செய்வோம். கரும்பு தீர்ந்துவிட்டால் கடையை மூடிவிடுவோம்.வெயில் காலத்தில் வியாபாரம் சற்று கூடுதலாக இருக்கும். மீதமுள்ள 3 ஏக்கர் நிலத்தில் நடவு உள்ளிட்ட வேலைகள் இருக்கும் போது கடைக்கு விடுப்பு விட்டுவிடுவோம். மற்ற நிலத்தில் விவசாயம் செய்வதற்கு தேவையான தரிசு கூலிக்கு கரும்புச் சாறு விற்பனை வாயிலாக கிடைக்கும் பணம் உதவிகரமாக இருக்கும். அவசரத்துக்குக்கூட யாரிடமும் சென்று கைநீட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் பெரியளவில் உதவிகரமாக இருப்பது இந்த கரும்புச் சாறு விற்பனை தான் எனக்கூறி முடித்தார். அப்போது கரும்புத் தோட்டம் வந்து சேர்ந்துவிட, அவரும் எங்களுடன் வந்த அவர் மகனும் விறுவிறுவென தோட்டத்தில் இறங்கி கரும்புகளை வெட்டி கட்டத் துவங்கினர். நாம் விடை பெற்றுக்கொண்டு திரும்பும் போது நம் மனதில் தோன்றியது இதுதான். விவசாயத்தில் நேரடி விற்பனையில் ஈடுபடும் போது ஒன்று, இரண்டல்ல, மூன்று மடங்கு லாபம் ஈட்டலாம். அதற்கு தேவை கொஞ்சம் உழைப்பு, கொஞ்சம் புத்திசாலித்தனம்.

தொடர்புக்கு:
மணி – 97865 73073.

You may also like

Leave a Comment

fifteen + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi