Sunday, September 1, 2024
Home » நம்பிக்கை வைத்து பொறுப்பை வழங்கிய உங்களின் நலனுக்காக என் சக்திக்கு மீறி உழைக்கும் வலிமை என்னிடம் உள்ளது

நம்பிக்கை வைத்து பொறுப்பை வழங்கிய உங்களின் நலனுக்காக என் சக்திக்கு மீறி உழைக்கும் வலிமை என்னிடம் உள்ளது

by Ranjith
Published: Last Updated on

* வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல் மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள்

* திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நம்பிக்கை வைத்து பொறுப்பினை வழங்கிய உங்களின் நலனுக்காக, என் சக்திக்கு மீறி உழைக்கின்ற வலிமை என்னிடம் உள்ளது. தலைவர் என்ற உரிமையோடும் அன்போடும் கட்டளையிடுவது, திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். இதுவே நாடு தழுவிய அளவில் முதன்மைச் செய்தியாகட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எத்தனை நெருக்கடிகள் சூழ்ந்தாலும், நம் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கும் அரசாக திமுக அரசு தன் பணியை தொடர்ந்து மேற்கொள்ளும். ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீட்டினைத் தமிழ்நாடு பெறக்கூடிய வாய்ப்பும், அதன் வாயிலாக 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு அமையக்கூடிய சூழலும் உருவாகியுள்ளது.

சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இந்த முதலீடுகள் மூலமாக தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் அமைக்கப்படவிருப்பதால் பரந்துபட்ட வளர்ச்சியை நோக்கிய பாய்ச்சலைக் காணவிருக்கிறது நமது மாநிலம். பொருளாதாரப் பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்த தமிழ்நாட்டை இரண்டரை ஆண்டுகளில் மிகுந்த பாடுபட்டுச் சமதளத்திற்குக் கொண்டு வந்து, சிகரத்தை நோக்கிப் பயணிக்கச் செய்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி.

நமது அரசின் இந்த முயற்சிகளை சென்னையில் ஜனவரி 11, 12 தேதிகளில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கேற்ற உலகத் தமிழர்கள் பலரும் பாராட்டியதுடன், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் உறுதியளித்துள்ளனர். நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இன்று இந்தியாவுக்கான முன்னோடித் திட்டங்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கியிருப்பதைப் பார்க்கிறோம். மற்ற மாநிலங்களின் தேர்தல் களங்களில் திராவிட மாடல் அரசின் திட்டங்களே வாக்குறுதிகளாக அளிக்கப்படுகின்றன.

‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதே திராவிட மாடல் அரசின் அடிப்படைக் கோட்பாடு. ‘நான்தான் எல்லாம்’ என்கிற போக்கில் செயல்படுகிற ஆட்சியதிகாரம் ஜனநாயகத்திற்குச் சீர்கேடு. அத்தகைய சீர்கேட்டை அகற்றி, ஜனநாயகம் மலர்வதற்கு மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய – கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய ஒன்றிய அரசு 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைந்திட வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கக்கூடிய, மதநல்லிணக்கத்தைப் போற்றக்கூடிய, மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது.

அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.

எழுச்சிமிகுந்த இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வரத் தயாராகியுள்ள நிலையில், வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி வாழ்க்கைப் பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர். அயலகத் தமிழர் நாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற நான், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல் என்று கேட்டேன். நான் நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். உழைக்கிறேன்… உழைக்கிறேன்… உழைக்கிறேன்.

ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர். அதற்கு இளைஞரணிச் செயலாளர்-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியே, “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார். இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் திமுகவினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம்.

மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் இது போன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள். திமுக தலைவர் என்கிற பொறுப்பு உங்களில் ஒருவனாகிய எனக்கு உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒப்புதலுடன், பொதுக்குழுவின் ஒட்டுமொத்த ஆதரவுடன் வழங்கப்பட்டிருக்கிற பொறுப்பு. முதல்வர் என்கிற பொறுப்பு உடன்பிறப்புகளின் அயராத உழைப்பிலும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும் கிடைத்தது ஆகும்.

நம்பிக்கை வைத்து பொறுப்பினை வழங்கிய உங்களின் நலனுக்காக, என் சக்திக்கு மீறி உழைக்கின்ற வலிமை என்னிடம் உள்ளது. தலைவர் என்ற உரிமையோடும் அன்போடும் கட்டளையிடுவது, திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும்.

பொங்கல் கொண்டாட்டம் தரும் ஊக்கத்தோடு, நமக்குக் காத்திருக்கும் பணிகள் இரண்டு. தாய்த் தமிழ்நாட்டை மேம்படுத்துவது முதலாவது. இந்திய ஒன்றிய அரசில் சமூகநீதி சமதர்ம – மதச்சார்பற்ற நல்லரசை அமைப்பது இரண்டாவது. இவை இரண்டையும் அடைய எந்நாளும் பாடுபடுவோம். கலைஞரின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய பொங்கல் – தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* அவரவர் பகுதிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடுங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில், “எப்போதும் பொங்கல் அன்று திமுக தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் ‘சமத்துவப் பொங்கல்’ என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். திமுக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள்.

அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள்-மாடுபிடி வீரர்கள் என வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும். திமுகவினர் அனைவரது இல்லங்களிலும் ‘சமத்துவப் பொங்கல்’ எனக் கோலமிட்டு, அதனை சமூக வலைத்தளங்களில் பகிருங்கள், அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும் என கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

two × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi