சென்னை: கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் சிலையை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். டாக்டர் ப.சுப்பராயன் திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். இவர் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சி துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்திய தூதுவர், இந்திய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர், மேலவை உறுப்பினர், மத்திய போக்குவரத்து துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற எண்ணற்ற பதவிகளை வகித்து, நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கினார்.
மேலும், சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் ப.சுப்பராயன் பதவி வகித்தார். இவரது ஆட்சி காலத்தில் முதல்முறையாக அரசாங்க பணிகளில் தலித்துக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயன் திருவுருவ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.