Tuesday, April 23, 2024
Home » மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்

மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்

by Nithya

நன்றி குங்குமம் தோழி

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங்கூர் கிராமத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர். ‘நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!’ என்று அவன் அருளாலே அவன் தாள் வணங்கி வரும் அடியார்களுக்கு வாழ்வில் ராஜயோகத்தினையும், பதினாறு செல்வங்களையும் அளித்து மகத்தான வாழ்வளிப்பவர்.

இத்தலத்தின் இறைவனாக மதங்கீஸ்வர சுவாமியும், இறைவியாக ஸ்ரீராஜமாதங்கீஸ்வரி அஞ்சனாட்சி அம்பிகையும் அருள்பாலிக்கிறார்கள். சகல கலைகளுக்கும் அதிபதியாக திகழ்கின்ற அம்பிகையாக ஸ்ரீராஜமாதங்கீஸ்வரி அஞ்சனாட்சி காட்சி தருகின்றாள். அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில் சொன்ன பதினாறு பேறுகளை பெற இத்தல இறைவியை மனம், மொழி, மெய் ஒன்றுபட ஆத்மார்த்தமாக பூஜித்தால் எல்லா நலன்களையும் பெறலாம்.

மகாசரஸ்வதி தேவிக்கே இத்தல ஈஸ்வரி வித்யாப்யாசம் செய்ததால் இத்தல இறைவியை வழிபடுவோர் கல்வி, உயர்பதவி, தொழில் மேன்மை பெறுவர் என்பது ஐதீகம். திருமணத் தடைகள் நீங்கி இனிய இல்லறம் நல்லறமாக அம்பிகை அருளால் அமையும். இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை.வடக்கு திசை நோக்கி ஆனந்த கோலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆனந்த மகாகாளி தாயை வழிபட்டால் ஆனந்த வாழ்வை பெறலாம்.

இத்தலத்தில் இரு நந்திகள் வீற்றிருக்கின்றன. கிழக்கு நோக்கி உள்ள நந்தியின் பெயர் சுவேத நந்தி. மேற்கு நோக்கி வீற்றிருக்கும் நந்தி பெயர் மதங்க நந்தி. ‘ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய’ என்று இவ்விரு நந்தியம் பெருமான்களை பிரதோஷ தினங்களில் மனமுருக தரிசித்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பராசவனம் என்பது திருநாங்கூரின் புராண கால பெயராகும். இங்குள்ள மதங்காசிரம் என்ற இடத்தில் கடுந்தவம் புரிந்த மதங்க மாமுனிவரின் வேண்டுதல்படி திருமால் பன்னிரு மூர்த்திகளாகி பராசவனத்தில் வெவ்வேறு பகுதிகளில் எழுந்தருளி சர்வேஸ்வரனை வழிபட்டதாகவும் அவருக்கு அம்பிகையே மகளாகத் தோன்றி திருவெண்காட்டில் உள்ள அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரரை மணம் புரிந்தார் என்று பராசவனப் புராணம் கூறுகிறது. சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் தம் திருமுறையில் இத்தலத்தைப் பற்றி போற்றியுள்ளார்.

கோயில் அமைந்த விதமும் மகா அற்புதம். கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப்பிராகாரம், திருச்சுற்று மதில் கொண்டு கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் கிழக்கு புறத்தில் இடது பக்கத்தில் மாதங்கீஸ்வரி சந்நதியும், சண்டிகேஸ்வரர் சந்நதியும் உள்ளது. திருச்சுற்றின் வடக்குப் புறத்தில் தெற்கு திசை நோக்கி காளி சந்நதியும், அடுத்து மதங்கமுனி சந்நதியும் உள்ளது. தென்மேற்கு மூலையில் ஸ்ரீவிநாயகர் சந்நதி அமைந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீமுருகப் பெருமான் ஸ்ரீவள்ளி-தெய்வானை சந்நதிகளும், வடமேற்கு மூலையில் மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி சந்நதிகளும் திகழ்ந்து அருள்பாலிக்கின்றனர். தலவிருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது.

இத்தல சிற்பங்கள் முற்கால சோழர்காலத்தை சார்ந்தவையாகும். திருச்சுற்று சந்நதிகளிலுள்ள நாராயணி சிற்பம், நவக்கிரக சிற்பங்கள் அருள் ததும்பும் விதமாக வீற்றிருக்கின்றன.அர்த்த மண்டபத்தில் கி.பி. 12, 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகப் பெருமான், பைரவர், சூரியன், தெய்வச் சிற்பங்கள் தனிச்சிற்பங்களாக உள்ளது. ‘‘நாங்கூர் ஈசனை நாடி தொழுவோர்க்கு நாளும் கோளும் நன்மை நல்குமே’’என்ற ஆன்றோர் அருளமுத வாக்கிற்கேற்ப இத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது.

மணம் மல்கு நாங்கூர், நின்றருளுமிடம் நாங்கை எனவும் திருமங்கையாழ்வார் திருநாங்கூர் பற்றி அற்புதமாக போற்றியுள்ளார். 108 வைணவ திவ்ய திருப்பதிகளில் பதினொன்றாவதாக திருநாங்கூரில் அமைந்துள்ளது மிகவும் விசேஷம். ஒவ்வொரு ஆண்டும் 11 கருட சேவை உற்சவம் நடைபெறும். இந்த 11 கருட சேவை உற்சவம் தை அமாவாசைக்கு மறுதினம் திருநாங்கூரில் ஸ்ரீநாராயண பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும். இதேபோன்று 12 சிவபெருமானின் ரிஷப சேவை திருக்கல்யாண அருள்மழை பொழியும் திருக்காட்சி வைபவம் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2016ம் ஆண்டு முதல் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது பெருஞ் சிறப்பாகும்.

திருநாங்கூர் சைவமும் வைணவமும் சங்கமிக்கும் தண்வயல் சூழ் தெய்வத் திருத்தலம். பதினொரு வைணவ திருப்பதிகளையும் 11 (ஏகாதசி) ருத்ரர்களையும் தரிசிப்போர்க்கு ஸ்ரீவைகுண்டம் திருக்கயிலாய் மகா தரிசனம் செய்த பெரும் புண்ணியம் கிட்டும். பதவி, பட்டம், புகழ், செல்வாக்கு, செல்வங்கள் என அனைத்து நல்ல விஷயங்களை பெறவும், இழந்த நல்ல விஷயங்களை மீண்டும் பெற்று ராஜயோகம் வாழ்வில் பெற இத்தல இறைவியான ஸ்ரீராஜமாதங்கியையும் ஸ்ரீமதங்கீஸ்வரரையும் மனதார வழிபட்டாலே போதும்.திருத்தலம் நாகை மாவட்டம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கே 10 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருநாங்கூரில் உள்ளது.

தொகுப்பு: மகி

You may also like

Leave a Comment

four × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi