Saturday, May 4, 2024
Home » கட்டு கட்டு கீரைக்கட்டு!

கட்டு கட்டு கீரைக்கட்டு!

by Porselvi

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி‌ மட்டுமில்லாமல் கரும்பு, எள், உளுந்து, கடலை, பருத்தி, சோளம் உள்ளிட்ட பலவகைப் பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள திருவையாறு பகுதி வாழை மற்றும் வெற்றிலை சாகுபடிக்கு பேர் போன பகுதியாக விளங்குகிறது. இந்தப் பகுதியில் தற்போது இயற்கை முறையில் செய்யப்படும் கீரை சாகுபடியும் அதிகரித்து வருகிறது. கீரை சாகுபடியில் நல்ல வருமானம் பார்த்து வரும் திருவையாறு அடுத்த வடுகக்குடியைச் சேர்ந்த மதியழகனைச் சந்தித்தோம். சாத்தனூர் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் பல வகை கீரைகளைச் சாகுபடி செய்து வரும் மதியழகன், கீரைகளைக் கட்டு கட்டி விற்பனைக்காக அனுப்பிக் கொண்டிருந்த பிசியான நேரத்திலும் நம்மிடம் உரையாடினார்.

“ நான் மொத்தம் மூனு ஏக்கர்ல கீரை வகைகள் சாகுபடி செஞ்சிட்டு இருக்கேன். உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பதில் கீரைகளுக்கு நிகர் கீரையேதான். அதனாலதான் லாபத்தை பெரியளவுக்கு எதிர்பார்க்காமல், இயற்கை முறையில் ரசாயனக் கலப்பு இல்லாம கீரை வகைகளை உற்பத்தி செஞ்சிட்டு இருக்கேன். கீரை சாகுபடிக்கு மண் நன்றாக பொலபொலவென்று இருக்கணும். இதற்காக 2 முறை உழுது பின்னர் அடியுரமாக சுமார் 4 டிராக்டர் எரு மட்டும் அடிப்போம். மீண்டும் ஒரு முறை உழவு செய்தால் நிலம் தயாராகி விடும். கீரை விதைகள் சிறியதாக இருப்பதால் அதனுடன் மணல் அல்லது உலர்ந்த மண்ணைக் கலந்து தூவிவிட வேண்டும். விதையைத் தூவிய பின் லேசாக துடைப்பத்தை வைத்து கிளறிவிட்டால் விதைகள் மண்ணில் புதைந்துவிடும். நிலத்தின் தன்மையைப் பொறுத்து விதையின் அளவும் மாறுபடும். வல்லாரை, அரைக்கீரை போன்றவற்றிற்கு விதை தேவையில்லை. தண்டு நட்டாலே வளர்ந்துவிடும்.

நான் 3 ஏக்கரில் பல கீரைகளை சாகுபடி செய்துக்கிட்டு இருக்கேன். உதாரணத்திற்கு அறுபது சென்ட் நிலத்தை 4 பாகமாகப் பிரித்து, உழவு செய்வோம். இங்க பம்ப் செட் போட்டு இருக்கிறதுனால தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சினால் போதும். சிறுகீரை, அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, முளைக்கீரை, மணத்தக்காளி கீரைன்னு 10 வகை கீரைகளை சாகுபடி செய்யறோம். விதைக்கறதுக்கு முன்னாடி விதைகளை ஒரு மணி நேரம் வெயிலில் உலர்த்தி, பின்பு மாலை வேளையில் விதைப்பு செய்ய வேண்டும். வெயில் காலங்களில் சிறுகீரையில் மாவுப்பூச்சித் தாக்குதல் இருக்கும். இதை வெள்ளை மொட்டு என்று சொல்வோம். ஆரம்பத்திலேயே கவனித்து பூச்சி தாக்கிய செடியை பிடுங்கி அழித்து விடவேண்டும். இல்லையேல் கட்டுப்படுத்த முடியாது.

பனிக்காலங்களில் இலைப்புழுத் தாக்குதல் இருக்கும். ரசாயன விவசாயத்தில் இலைப்புழுத் தாக்குதல் அதிகமாக இருக்கும். இயற்கை விவசாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. இதுல முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். கீரைகளின் வயதைப் பொறுத்து தனித்தனியாக பிரித்து பயிர் செய்வோம். உதாரணமா ஒரு மாத வயதுடைய கீரைகளை அருகருகே உள்ள பாத்தியில் போடுவோம். நான்கு மாதங்களுக்கு பலன் தரக்கூடிய கீரைகளை தனியாகப் போடுவோம். ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடிய கீரைகளை தனிப்பகுதியில் போடுவோம். ஒரு ஏக்கர் நிலம் பயிர் செய்யப் போறோம்னா மூன்று பாகமா பிரித்து பயிர் செய்யலாம்.முளைக்கீரை, சிறுகீரை போன்றவை ஒரு மாதத்தில் வளர்ந்து விடும். இந்தக் கீரைகளை விதைத்து 21 முதல் 25 நாட்களுக்குள் பறிக்கலாம். பறித்த பின் மீண்டும் விதைகளை விதைத்து விட வேண்டும். அரைக்கீரை, பாலக்கீரை, மணத்தக்காளிக்கீரை, புளிச்சக்கீரை போன்ற கீரைகளை விதைத்து ஒரு மாதத்திலிருந்து நான்கு மாதங்கள் வரை பறிக்கலாம். அகத்திக்கீரை போன்ற கீரைகள் ஒரு வருடத்திற்கு மேல் பலன் கொடுக்கக்கூடிய நீண்ட காலப்பயிர்கள் ஆகும்.

இப்படி வயதுக்கேற்ப தனித்தனியாக பிரித்துப் போடுவதால், பயிர்முடிஞ்ச பிறகு அடுத்த உழவு செய்ய வசதியா இருக்கும். ஒரு மாத பயிர், நான்கு மாதப்பயிர், ஒரு வருடப்பயிர் இவைகளை அருகருகில் நடவு செய்துவிட்டால் உழமுடியாது. இடமும் வீணாகும், இடைஇடையே கொத்தி விட்டு பயிர் செய்வதற்கும் அதிக வேலையாட்கள் தேவைப்படும். மழைக்காலங்களில் கீரைகளை வெகு ஜாக்கிரதையாக தண்ணீர் நிற்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் 2 முறை நாங்களே களை பறித்து விடுவோம். உரம் தெளிக்கிற வேலை இல்லை. பம்ப் செட் தண்ணீர் பாத்தி வழியாக பாய்ச்சுவோம்.

பொதுவாக கீரை சாகுபடி செய்ய வெயில் காலம்தான் உகந்தது. மழைக்காலத்தில் கீரைகள் அழுகிப் போயிரும். நாங்க மக்கள்ட்ட நேரடியா விக்கும்போது ஒரு கட்டு கீரை ரூ.5-க்கு விற்பனை செய்வோம். ஆனா அதுலயும் ரேட் கம்மி பண்ணி கேப்பாங்க, ஒரு கட்டு கீரைக்கு ஆள் செலவு கூலி எல்லாம் போக இரண்டு ரூபாய்தான் கிடைக்கும். நேரடியா போய் விற்பனை செய்ய, வண்டியில் வைத்து எடுத்துட்டு போகணும். அதுல நிறைய செலவு ஏற்படறதால மக்கள் கிட்ட நேரடி விற்பனை முறைய கம்மி பண்ணிக்கிட்டோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மெஸ், மருத்துவமனை உணவகங்களில் நேரடியாகவும், வியாபாரிகளுக்கு மொத்த விலைக்கும் கீரைகளை கொடுக்கிறோம்.
அவங்களுக்கு ஒரு கட்டு கீரை ரூ.5க்கு தரோம். ஒரு நாளைக்கு இரண்டு முறை கீரைகள் பறிப்போம். காலையில சீக்கிரமா 500 கட்டு கீரை பறிச்சு வச்சா வியாபாரிகள் வந்து நேரடியாக வாங்கிக்கிட்டு போயிடுவாங்க. அதுக்கு அப்புறமா வெயில் தாழ்ந்த பின்னாடி மறுபடியும் 450ல் இருந்து 500 கட்டு வரை பறிப்போம். இது மாலை வேளையில் காய்கறி சந்தையில விக்க வியாபாரிகள் வந்து வாங்கிக்கிட்டு போவாங்க. வியாபாரிகள் மூலம் விற்பனை செய்வதால் லாபம் கம்மிதான். ஆள் கூலி, தண்ணீருக்கு ஆகும் செலவு, உள்ளிட்ட செலவுகள் போக ஒரே கட்டு கீரைக்கு 2 ரூபாய் கிடைக்கும்.

புளிச்சக்கீரை எல்லாம் உடலுக்கு அவ்வளவு குளிர்ச்சி. வல்லாரை குடல் புண்களைப் போக்கும். அதே மாதிரி ஒவ்வொரு கீரைக்கும் நம்ம உடலுக்குத் தேவையான ஏகப்பட்ட ஆரோக்கியமான சத்துகள் இருக்கிறது. ஆட்டுக்கறி ரூ.800க்கு விக்குது. கோழிக்கறி ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுது. அதை வாங்கி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டும்‌ நம் மக்கள் ஐந்து ரூபாய் கொடுத்து கீரை வாங்குறதுக்கு எங்க கிட்ட கணக்கு பார்க்கிறாங்க. கீரையில் உள்ள சத்துக்களை தெரிஞ்சுக்கிட்டு அடுத்த தலைமுறையினர் தினமும் உணவுல கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்ப பழைய சோற்ற விக்கிற காலம் வந்திருச்சு. அதனால கீரைகளுக்கு மதிப்பு கொடுத்து எங்கள மாதிரி விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில மக்கள் பேரம் பேசக்கூடாது.

கீரை சாகுபடியில் மாதத்திற்கு எங்களுக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. இதே நாங்கள் நேரடியாக விற்பனை செய்தால் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை கீரைகள் பறிக்க வேண்டும் என்பதால் வருமானம் கம்மியாக இருந்தாலும் பரவாயில்லை என்று வியாபாரிகளிடமே நேரடியாக விற்று விடுகிறோம். முக்கியமாக வல்லாரை, சிவப்பு புளிச்சக்கீரை, பசலைக் கீரை போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. அதேபோல் தண்டுக்கீரை, அரைக்கீரை, முளைக்கீரை ஆகியவற்றையும் மக்கள் விரும்பி வாங்குறாங்க. கீரை விவசாயிகளிடம் மக்கள் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் பேரம் பேசாமல் வாங்கினால் அவர்களது குடும்பமும் நன்றாக வாழும். தற்போதைய உணவு முறையில் பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் ஃபுட் என்று சாப்பிடுகிறோம். இதற்காக செய்யும் செலவில் பத்தில் ஒரு மடங்குதான் கீரை வாங்குவதற்கு ஆகிறது. இதை பேரம் பேசாமல் வாங்கினால் நிச்சயம் உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் உதவிகரமாக இருக்கும்’’ என்ற வேண்டுகோளோடு முடித்துக்கொண்டார்
மதியழகன்.
தொடர்புக்கு:
மதியழகன்: 98655 21504.

You may also like

Leave a Comment

13 − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi