Saturday, May 18, 2024
Home » சிறப்பு வாய்ந்த கார்த்திகை சோமவாரம்

சிறப்பு வாய்ந்த கார்த்திகை சோமவாரம்

by Kalaivani Saravanan

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைபிடிக்கப்படும். ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம வார விரதத்தை தொடங்குதல் வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்கலாம்.

சோமவார விரதத்தின் மகிமை வசிஷ்டர் கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டித்து கற்புக்கரசி அருந்ததியை இல்லாளாக அடைந்தார். இந்த சோமவாரத்தன்று விரதம் இருந்து பலன் பெற்ற ஒரு புராண வரலாறு உண்டு. மன்னன் சந்திரவர்மனுக்கு அழகிய ஒரு பெண் மகள் பிறந்தாள். அவளுக்கு சீமந்தினி என்று நாமம் சூட்டப்பட்டது. அவளது ஜாதகத்தை கணித்தவர்கள் அவள் சிறு வயதிலேயே தனது கணவனை இழந்து விடும் துர்பாக்கியம் கொண்டவள் என்று கூறினார்கள்.

அதனால் மன்னன் மிகவும் துக்கம் கொண்டு பல்வேறு முனிவர்களை கலந்தாலோசித்தான். யாக்யவல்லியர் என்ற முனிவர் அவளை முறையாக கார்த்திகை சோம வார விரதத்தை கடைப்பிடிக்க ஆலோசனை அருளினார். அவளும் கார்த்திகை சோமவாரம் தோறும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து நாள் முழுதும் “ஓம் நமசிவாய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாது ஜபித்து உபவாசம் இருந்து மாலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டு வரலானாள். அவள் பருவம் அடைந்தவுடன் அவளுக்கு நளமஹாராஜாவின் பௌத்ரனான இந்திரசேனனின் மகன் சந்திராங்கதனுடன் விவாகம் நடந்தேறியது.

ஒரு சமயம் அவர்கள் யமுனை நதியில் நீராடும் போது நீர் சுழலில் சிக்கி அவன் மூழ்க நேர்ந்தது. ஆயினும் சீமந்தினி அனுசரித்த சோம வார விரதத்தின் பலனால் அவனை நாக கன்னியர் காப்பாற்றினர். பின்னர் இறையருளால் அவன் பாதாள லோகம் விடுத்து மீண்டும் பூலோகம் வந்து தன் மனைவியுடன் இணைந்தான். இவ்வாறு நம் தலைவிதியையும் மாற்றும் வல்லமை கொண்டது இந்த சோமவார விரதம். கைலாயப் பேறு அளிக்கும் விரதமிது. இவ்விரதத்தை முறையோடு கடைபிடிப்பவர்கள் இந்த பிறவி இறப்பென்னும் சாகரத்திலிருந்து முக்தி அடைந்து எம்பெருமானுக்கு கைலாயத்திலே சென்று பணி செய்யும் பேறு பெறுவர்.

கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறை ஸ்கந்த புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதிகாலையில் துயில் எழுந்து நீராடி, பஞ்சாட்சர மந்திரம் ஓதி, உடல் முழுவதும் வெந்நீராடி, சந்தியாவந்தனம் முடித்து, பரம கருணாமூர்த்தியான உமாபதியை மனதில் எந்நேரமும் தியானித்து, சிவபெருமானின் அடியவர்களான ஒரு தம்பதியரை சிவன் சக்தியாக பாவித்து, பாத பூஜை செய்து வணங்கி, அவர்களுக்கு அமுது செய்விக்க வேண்டும்.

விரதம் இருப்பவர் நாளின் ஒரு நேரம் மட்டுமே எளிய உணவை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய முடியாதவர்கள் திருக்கோவிலுக்கு சென்று உமா-மஹேஸ்வரரை வழிபட்டு, பஞ்சாமிர்தம் முதலிய இனிய பொருட்களால் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்து, வில்வ தளங்களால் எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்து, எம்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து அந்த பிரசாதத்தை சிவனடியார்களுக்கு வழங்கி தாங்களும் அந்த பிரசாதத்தை உண்ணலாம்.

இந்த விரதத்தை முறையாக, தூய மனத்துடன் கடைபிடிப்பவர்கள், இந்த மண்ணுலகில் எல்லா செல்வங்களையும் அடைந்து வாழ்வில் மகிழ்ச்சியை காணலாம் கார்த்திகை சோமவார ஆலய வழிபாடுகள் கார்த்திகை சோமவாரத்தன்று சகல சிவாலயங்களிலும் சந்திரனாம் சோமனுக்கு அருள்புரிந்து தட்சன் சாபம் நீக்கி பிறை சந்திரனை ஜடா முடியில் அணிந்த சந்திர சேகரராம் லிங்க மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூசனைகள் நடை பெறுகின்றன. பல்வேறு ஆலயங்களிலும் பல்வேறு வகைகளில் வழிபாடு நடைபெறுகின்றது. பெரும்பாலான ஆலயங்களில் 108 சங்காபிஷேகமும் சில விசேஷ தலங்களில் 1008 சங்காபிஷேகமும் நடைபெறுகின்றது. திருநெல்வேலியில் நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி தந்தருளுகின்றார்.

கார்த்திகை மாதம் தீப மாதம் என்பதால் பல ஆலயங்களில் 1008, லட்சம் என விளக்குகள் ஏற்றப்படுகின்றன. சென்னை பூந்தமல்லியிலுள்ள ஒத்தாண்டீஸ்வரர் ஆலயத்தில் மூன்றாவது வாரம் லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகின்றது. சங்காபிஷேகம் இல்லாத சில ஆலயங்களில் சம்போ சங்கர உமாபதிக்கு, சாம்ப சுந்தர பசுபதிக்கு, நந்தி வாகனனருக்கு, நாகபூஷணருக்கு, சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.

*பிரியா மோகன்

You may also like

Leave a Comment

eight + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi