* மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், முழங்கால் மூட்டு காயம் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மும்பையில் நாளை அறுவைசிகிச்சை நடைபெற உள்ளது. இதையடுத்து, இந்திய மல்யுத்த அணியில் வினேஷ் போகத்துக்கு பதிலாக அன்டிம் பாங்கல் இடம் பெற உள்ளார்.
* 2023 ஜூலை மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சக வீரர் ஸாக் கிராவ்லி, நெதர்லாந்தின் பாஸ் டி லீட் ஆகியோரின் கடும் போட்டியை பின்னுக்குத் தள்ளி வோக்ஸ் ஐசிசி விருதை தட்டிச் சென்றார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கிறிஸ் வோக்ஸ் தொடர் நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
* 2025ல் ஜிம்பாப்வே அணியுடன் இங்கிலாந்து மோதும் ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2003க்கு பிறகு முதல் முறையாக ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.
* ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடிய டி20 தொடரில் தோல்வியைத் தழுவியது, இந்திய வீரர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக பாதிக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் நட்சத்திரம் சல்மான் பட் கூறியுள்ளார்.
* பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணிக்காக 2 ஆண்டுகளுக்கு விளையாட உள்ளார். இதற்கான டிரான்ஸ்பர் ஒப்பந்தத்தை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து கிளப் உறுதி செய்துள்ளது. அல் ஹிலால் அணியில் இணைந்த நெய்மருக்கு சுமார் ரூ1450 கோடி கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி கிளப் அணியில் அவர் 10ம் எண் ஜெர்சி அணிந்து விளையாட உள்ளார்.
* வெஸ்டர்ன் மற்றும் சதர்ன் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்க நட்சத்திரம் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வெரோனிகா குதெர்மதோவாவை (16வது ரேங்க்) வீழ்த்தினார். கடந்த 4 ஆண்டுகளில் அவர் முதல் முறையாக டாப் 20ல் உள்ள ஒரு வீராங்கனையை வென்றுள்ளார். முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான வீனஸ் தற்போது 533வது இடத்தில் பின்தங்கியுள்ளார்.
* ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், கேப்டன் பட்லரின் கோரிக்கையை ஏற்று தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், விரைவில் வெளியாக உள்ள உத்தேச அணியில் அவரது பெயர் இடம் பெறுமா என இங்கிலாந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
* 2024 எஸ்ஏ20 தொடர் ஜனவரி 10ம் தேதி தொடங்கி பிப்.10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.