Friday, May 3, 2024
Home » ஸ்ரீ ஸாயி பாபா புராணம்!

ஸ்ரீ ஸாயி பாபா புராணம்!

by Porselvi

புராணம் என்ற சொல் தமிழில் முதன் முதலாக மணிமேகலையில் கூறப்பெற்றுள்ளது. ‘‘காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான்’’. இங்கு கடல்வணன் புராணம் என்பது விஷ்ணு புராணத்தைக் குறிக்கும்.‘புராணம்’ என்பது புராதனம் (பழமை) என்னும் சொல்லின் அடியாக அமைந்ததாகும். பழையதாயினும் புதிதாகத் தோன்றுவது. மேலும், புரா-நவ என்ற இரு வேர்ச் சொற்களிலிருந்தும் பிறந்தது என்றும் கூறப்படும். பழமைக்கும் பழமையாய்ப் புதுமைக்கும் புதுமையாய் உள்ளது எதுவோ அதுவே புராணம். புராணம் என்பதைப் பழங்கதை (Ancient Tale) என்று கூறுவதைக்காட்டிலும் வழிவழி வந்த மரபு வரலாறு (Traditional History) என்று கூறுவதே மிகவும் பொருத்தம் என்பார் ‘தமிழில் தல புராணங்கள்’ என்னும் ஆராய்ச்சி நூலைத் தந்த டாக்டர். வே. இரா. மாதவன்.

புராணம் என்பவை உலகோடிக் கதைகள். உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவில் வழங்கிவருகின்றன. புராணம் என்ற சொல்லை குறைவாக எண்ணி ஒதுக்கும் போக்கினை விடுத்து இலக்கியம் என்ற வகையில் அணுக வேண்டும். புராணக் கதைகளின் பொருள் ஆழம் நம் ஆராய்ச்சிக்கு எட்டுவதில்லை. இவற்றுக்கு தத்துவார்த்தம் கூறும் முயற்சி தொன்றுதொட்டு எல்லா நாட்டிலும் வழங்கிவருகிறது. ஒவ்வொருவருடைய அடிமனத்திலும் ஆழ்ந்து படிந்த இந்தப் புராணக் கதைகளை உளவியல் அறிஞர் C.G.யூங் (C.G.Jung) தொன்மைப் படிவங்கள் (Archetypes) என்று கூறுகிறார்.புராணங்களை மகா புராணங்கள், இதிகாசப் புராணங்கள், சிவபுண்ணியம் சிவதருமம் கூறும் புராணங்கள், தல புராணங்கள், குலப்பெருமை கூறும் புராணங்கள், இறையடியார்களை இறைவனாகக் கருதி அவர்களின் அற்புதச் செயல்களைக் கூறும் புராணங்கள் என்று வகைப் படுத்தலாம்.

பதினெண் புராணங்கள் மகா புராணங்கள் என்றும், காப்பிய அமைப்போடு ஒரு குறிப்பிட்ட கடவுளின் வரலாற்றைக் கூறும் கந்த புராணம், விநாயக புராணம் போன்றவை இதிகாச புராணங்கள் என்றும், மகா புராணங்களின் ஒரு பகுதியாக உபதேச காண்டம், காசி காண்டம் முதலியவை சிவ புண்ணியம் சிவதருமம் கூறும் புராணங்கள் என்றும், ஒரு தலத்திலுள்ள இறைவன் புகழை விரித்துச் சொல்லும் திருவாரூர் புராணம், நாகைக் காரோண புராணம் போன்றவை தல புராணங்கள் என்றும், குறிப்பிட்ட குல மரபைப் பாடும் செங்குந்தர் புராணம், குலாலர் புராணம் போன்றவை குல மரபுப் புராணங்கள் என்றும், அடியார்களின் வரலாற்றைக் கூறும் சேக்கிழார் புராணம், திருவாதவூர் அடிகள் புராணம் போன்றவை அடியார் புராணங்கள் என்றும் கூறப்படும்.

அவ்வகையில் பகவான் தத்தாத்ரேயரின் திவ்ய அவதாரமான சீரடி சாயி நாதரைப் போற்றி, ‘‘ ஸாயிபாபா புராணம்’’ மதுரைத் தமிழ் சங்கப் புலவர் சு. நல்ல சிவம் பிள்ளையவர்களால் பாடப்பெற்றது. பூஜ்ய நரசிம்ம சுவாமிஜியால் வசனநடையில் எழுதப்பெற்ற ‘ஸாயிபாபா சரித்திரம்’ என்னும் நூலே இப்புராணத்திற்கு அடிப்படையாய் அமைந்த முதல் நூலாகும்.விநாயகர் காப்பு, நாமகள், திருமகள், பரபிரம்ம துதி, அவையடக்கம் உட்பட முதல் 6 பாடல்களின் பாயிரத்தோடு, சாயிநாதர் பிறந்த நகரச்சிறப்பு, அவர் பிறப்பு, அவர் குருவைச் சந்தித்த அனுபவம், அதன் பின் சீரடி வருதல் முதலிய வரலாறுகள் அடுத்துவரும் 83 பாடல்களில் விரிவாகச் சொல்லப்படுகின்றன. இப்புராணத்தின் முதல் பாகம் அகில இந்திய ஸாயி சாமஜம் மூலமாக 1946 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இப்புராணத்தின் முதல் பாகத்திற்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழராய்ச்சித் தலைவர் ராவ் சாஹிப் S. வையாபுரிப்பிள்ளை செய்யுட் பாயிரமும், முதுபெரும்புலவர் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் உரைப்பாயிரமும் வழங்கியுள்ளனர்.

‘‘பண்கனிந்த இன்றமிழிற் பாடியளித்தனனங்
கண்கனிந்த அன்பாற் களிசிறந்து –
விண்கனிந்த
தீங்கனியாம் பாபாவின் தெய்வச் சரிதமிதை
ஓங்குபுகழ் நல்லசிவ னுற்று’’
என்பது வையாபுரிப்பிள்ளையின் செய்யுட் பாயிரம்.

அதன்பிறகு 1951 ஆம் ஆண்டு, ஸாயிபாபா புராணம் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. விநாயகர் காப்பு தொடங்கி ஸாயிபாபா சரித்திரத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் 203 பாடல்களில் வரலாற்று முறைப்படி தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளன. பாபாவின் அடியவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அற்புத நிகழ்ச்சிகள், பாபாவின் உபதேசம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பாகமாகிய இந்நூலின் செய்யுள்களுக்கு தருமபுர ஆதீன தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பு.சி. புன்னைவன நாத முதலியார் உரை வரைந்துள்ளார்கள்.

தம் அவதார காலத்தில் பாபா எந்தவித கல்வியையும் கற்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. மிக உயர்ந்த உண்மைக் கல்வியாகிய ஆத்ம ஞான ஸ்வரூபமாகவே பாபா வந்தார். இருப்பினும் குரு தத்துவத்தின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் காட்டும் விதமாக, சேலூவில் திருப்பதி வெங்கடேசப் பெருமானின் அம்சமாக விளங்கிய வெங்கூசாவை குருவாகப் பெற்றார் பாபா. அங்கு குருவின் திருவருளால் குறைவில்லாமல் வாழும் நாளில் சிஷ்யபாவத்தில் இருந்த பாபா மேல் குரு கருணை கொண்டார்.

‘‘உலகை ஒற்றுமைப் படுத்தும் உயர்
குருவாகி வாழ்வாய்
அலகிலா ஞானம் மாவைராக்கியம் சத்தி
மூன்றும்
இலகிடத் தந்தேன் யார்க்கும் இதஞ்
செயென்று இசைத்து ஆவின்பால்
விலகிடாச் சீடர்க்கு ஈந்தார் மெய்க்குரு தமது
கையால்’’

அவ்வாழ்த்துகளோடு பாபா அங்கிருந்து மேற்குத் திசை நோக்கிக் கிளம்பி தற்போது இருக்கும் சீரடியை அடைந்தார்.

‘‘மேற்றிசை நோக்கிப் போந்து
விழைதரு பம்பாய் என்னும்
ஏற்றமிக் குளஇ ராச்சி
யத்தில் அகமத் தென்ன
சாற்றிடும் நகர்ச்சில் லாவைச்
சார்ந்த சீரடிப்பேர் வாய்ந்த
போற்றிடு பதிக்கண் உள்ளம்
பொருந்திவீற் றிருந்தா ரன்றே’’

அங்கு சில நாட்கள் வேப்பமரத்தடியில் இருந்து தம்மைத் தேடி வருபவர்களுக்கு இதங்கள் செய்தும் உபதேசங்கள் செய்தும் பிச்சை வாங்கிப் புசித்தும் திரிந்தார் பாபா.
‘‘பண்டிதரென்றும் பாமரரென்றும்
பணமுளார்
பணமிலா ரென்றும்
மண்டலம் மதிக்கும் வயிணவ சைவ மகமது
மதத்தினர் என்றும்
விண்டிடு கிறிஸ்து மதத்தினர் என்றும்
வேற்றுமை சிறிதும்உட் கொளாது
தெண்டிரைஉலகில் அவரவர்க் குரிய
செய்தரு நலன் எலாஞ் செய்வார்’’

படித்தவர் என்றும், படிக்காதவர் என்றும், பொருள் உள்ளவர் என்றும், பொருள் இல்லாதவர் என்றும், வைணவ சமயத்தவர், சைவ சமயத்தவர், மகம்மதிய சமயத்தவர், கிறிஸ்து சமயத்தவர் என்னும் பேதங்கள் பார்க்காமல் தன்னை நாடி வருகின்ற அனைவர்க்கும் அவரவர்க்கு வேண்டிய நன்மைகளைப் பாபா செய்தார் என்று பாபாவின் சமயப் பொதுமையையும், சமயப் பொறையையும் ஒருசேர எடுத்துக் காட்டுகிறார் வித்துவான் நல்லசிவம் பிள்ளை.

உபாசினி பாபா என்ற சீடருக்கு, ஸாயி பாபா உபதேசம் செய்ததைப் பாடுகின்ற புராண ஆசிரியர் தாம் சார்ந்த தமிழ்ச் சைவ மரபின் வழி நின்று பாடுகிறார்.‘‘எல்லாப் பொருள்களிடத்திலும், எவ்விடத்தும் இறைவன் இருக்கின்றான் என்ற உண்மையையும், பதி, பசு, பாசம் ஆகிய மூன்று பொருள்களின் இயல்பையும் இன்னவென முறைப்படி விளக்கி உபாசினிக்கு பகவான் பாபா உபதேசம் செய்தார் எனில் இப்பேரின்ப நிலையை உபாசினி போல் உலகில் அடைந்திட்டவர் யார்?’’

‘‘எப்பொருள்களிலும் எங்கும் இறை உளது
என்னும் உண்மை
முப்பொருள்தன்மை இன்ன முறைமுறை
விளக்கிக் காட்டி
ஒப்பரும் பெறும்பேறு ஈந்தார் உபாசினிக்கு
அவர்போல் யாரே
மெய்ப் பொருள் காண்பேரின்பம் விபுலம்மீது
அடைந்திட் டோரே’’
என்று சைவ நலம் சார்ந்த சமய மரபு உபதேசமாகக் காட்டுகின்ற புராண ஆசிரியரின் திறம் போற்றுதலுக்குரியது.

(விபுலம்- உலகம்).
இவ்வாறு சாயிநாதரின் புகழை அவருடைய உண்மைச் சரிதத்தைக் கூறும் எனது புன்சொல்லும் இலக்கண நூலை அறிந்த அறிவுடையோர் முன் நன்மையாகிய சொல்லாகி விளங்கும் என்பது புராண ஆசிரியர் காட்டும் அவையடக்கம்.

‘‘எழுத்துணர் புலவர்முன் எனது புன்சொலும்
வழுத்துபு நன்சொலாய் வயங்கும் மாசிலா
விழுத்தகு பெருந்தவ விரதன் மெய்க்கதை
வழுத்திடப் பெறும்ஒரு மாண்பினால் அரோ’’
‘மணம் நாறும் நின்தாள் இணைக்கு என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகை யுடைத்தே’ என வரும் அபிராமிபட்டரின் வாக்கை இப்பாடலோடு சிந்திப்பது மகிழ்வு தரும்.இங்ஙனம் பொருள் நலம் சார்ந்த ஸாயிபாபா புராணத்தை சாயி அன்பர்கள் படித்துப் பாபாவின் திருவடிகளைப் பிரார்த்திப்போம்.

 

You may also like

Leave a Comment

eighteen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi