Sunday, May 5, 2024
Home » சிறுகதை-பணித் தேனீ…

சிறுகதை-பணித் தேனீ…

by Nithya

நன்றி குங்குமம் தோழி

டோக்கன் வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்தபோதே நீண்ட வரிசை காத்திருந்தது. நீண்டு கிடந்த நாற்காலிகளில் மனிதர்கள் சொப்பிக் கிடந்தார்கள். குழந்தைகளின் வீச் வீச் என்ற சத்தங்களும், ஸ்டெக்சர் தள்ளும் சத்தமும்,தொப்பியை கோணலாக்கி வைத்திருந்த வார்டு பாய்களும்,கலவையான இரைச்சலுமாய்… இது எதுவுமே காதில் நுழைந்து மூளையை ஆக்ரமிக்கவில்லை விஜிக்கு.
வெள்ளை சீருடையில் இருந்த செவிலிப் பெண் பக்கத்தில் வந்து அட்டையுடன் நின்றாள்.

‘‘பேஷன்ட் யாரு..?’’
‘‘இவங்கதான்.’’
‘‘நீங்க அட்டெண்டரா..?’’
அம்மாவின் தலையாடியது.
‘‘டீடெயில் சொல்லுங்க.’’
‘‘விஜயலட்சுமி.’’

‘‘வயசு..?’’
‘‘நாற்பத்தி மூணு…’’
தொடையில் பரவிய நடுக்கம்,நெஞ்சுக்குழி தாண்டி தொண்டைக் குழியை அடைத்தது. இன்று நேற்றில்லை, இந்த இரண்டு வருடமாய் இதே வலிதான், அதே நடுக்கம் தான்.
‘‘உங்க பொண்ணா..?’’ பக்கத்து இருக்கையில் இருந்த கிழவி, அம்மாவிடம் பேச்சு வளர்த்தாள்.

‘‘ஆமாம்.’’‘‘என் பேத்திக்கு. ரெண்டாவது புள்ளை தங்க மாட்டேங்குது. அதான் சுத்தம் பண்ணிட்டு போகலாம்னு வந்தோம்…’’ சிரமத்தைக் கடந்து
கண்களை திறந்து பார்த்தாள் விஜி.ஐந்தாறு வயது பெண் குழந்தையோடு மலங்க பார்த்தபடி ஒரு பெண் அமர்ந்திருந்தாள். முப்பது கூட இருக்காது.
‘‘ஒன்று பத்தாதா..? நாடு இருக்கிற நிலமைக்கு…’’ உள்ளுக்குள் முணுகிக் கொண்டாள்.

‘‘நீ எதுக்கோ பயந்துகிட்டு இருக்கே..! டாக்டரம்மா தான் எல்லாம் பார்த்துகிடலாம்னு சொல்லி இருக்காங்கள்ல. நான் போய் காப்பி வாங்கிட்டு வர்றேன்…’’ அம்மா கண்களில் சமாதானம் மின்ன, பக்கத்து இருக்கை பாட்டி இவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தாள். முகத்தை திருப்பிக் கொள்ள, அம்மா அரைமனதாய் எழுந்து போனாள். அடிவயிறு புதிதாய் பொங்கியது. பயமாக இருந்தது. எல்லைகளை கடந்து உடைகளை மீறி உலகத்துக்கு அவள் அந்தரங்க செயல்களை காட்டிக் கொடுத்துவிடுமோ என்று.தொடைகள் இரண்டும் இரும்புக் குண்டை சுமந்ததுபோல் ஓய்ந்து போயிருக்க, அப்படியே சுருண்டு விழலாமா என்று உடம்பு கெஞ்சியது.

‘ஏன் பெண்ணாகப் பிறந்தோம்…’ லட்சமாவது முறையாய் அந்தச் சிந்தனை வந்தது.கூடச் சேர்ந்ததுகள் எல்லாம் பதிமூணு பனிரெண்டில் சடங்காக,இவள் மட்டும் பதினாறு வரைக்கும் காக்க வைத்தாள். அந்த மூணு வருடங்களும், அம்மா கும்பிடாத சாமியே இல்லை. முக்காலமும் தித்திப்பும், பப்பாளியும், அன்னாசியுமே அவளுக்கு தீனியாகும். தீட்டைக் கண்ணில் காண அம்மா தீட்டிக் கொண்டு காத்திருந்தாள். அதெல்லாம் எதற்கு என்று இப்போது நினைத்தால் சிரிப்பு வரும்.

முத்துபேச்சி அத்தை, ‘ மூத்ததுக்கு முந்திக்கொண்டு சின்னது உட்காருதா இல்லையானு பாரு.’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு சவால் விட்டது நடந்துதான் போனது. விஜிக்கு முந்திகொண்டு ரேவதி சடங்காகிப் போனாள்.ஏதோ பாவம் செய்ததுபோல், கண்ணாடி முன்நின்று உடைகளைக் களைந்து பார்த்து ஒப்பாரி வைத்து இருக்கிறாள் விஜி. தான் பெண்ணா..? என்ற சந்தேகம் அவளுள் முளைத்துக் கிளைத்தபோது அதைக் கேட்கவும் மனசு பயந்தது.மூத்தது கனியாதபோது இளையதுக்கு சடங்கு செய்ய, அலங்காரம் செய்து வைத்த ரேவதியை ரசிப்பதை விட்டுவிட்டு, அத்தனை கண்களும் விஜியையே ஆராய்ந்தது.

‘‘சாமிட்ட வேண்டிக்க, விரதம் புடி. செம்பருத்தியை தின்னு. ஸ்கிப்பிங் குதி…’’ ஆயிரமாயிரம் அறிவுரைகள்.இதில் எத்தனையில் உண்மை இருந்தது என்று அவர்களுக்கே வெளிச்சம்.
தள்ளிப் போகப்போக, மனசிற்குள் இனம் புரியாத பயம். கிணத்து மேட்டுக்கு போய் இரவு நேரத்தில் ஏதாவது ஆகி இருக்கிறதா என்று சோதித்து விட்டு வருவாள். அதெல்லாம் இந்த நிமிசம் வேதனையாய் நெஞ்சை அழுத்தியது.காபி குடிக்கப்போன அம்மா வந்திருக்கவில்லை. கூட்டம் குறைவதும், குறைவதிற்கு மேல் வருவதுமாக இருந்தது. கொஞ்சமாய் எழுந்து நடந்தால் நன்றாக இருக்கும் என்று, நினைத்தபோதே, ஒரு பெரும்வலி அடிவயிற்றில் பரவி, உடம்பு முழுக்க மின்சாரம் பாய்ச்ச, மெல்ல உதடுகள் முணுமுணுத்தன,‘‘அம்மா…’’அவள் கைகள் தன்னால் வயிற்றை வருட, பக்கத்தில் அமர்ந்திருந்த கிழவி, திரும்பிப் பார்த்தாள்.

‘‘என்ன பண்ணுதுமா..? வயிறு நோவுதா..? உங்கம்மாதானே அது..? எங்கே போனாங்க..?” விசாரிக்க,வேகமாய் தலை அசைத்தாள்.
‘‘என்ன உடம்புக்கு..?’’‘‘ரத்தப் போக்கு அதிகமா இருக்கு…’’ அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்துவிட்டு, ‘‘தூரம் நிற்கப் போகுது போல…’’ பாட்டி சொன்னபோது தொண்டையில் எதுவோ அழுத்தி பின்னே மிதந்து கீழே இறங்கியது.இப்போது பாட்டியின் பேரக் குழந்தை பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டது. சற்றே பெரிய கண்கள், சின்ன மூக்குத்தான், உதடுகள் அழுத்தமான நிறத்தில் இருந்தது. விஜியைப் பார்த்த பார்வையே அவளுக்குள் பரவசத்தை தந்தது.

மெல்ல கைநீட்டி அதன் கன் னத்தை வருடித் தந்தாள். மெது இட்லியை தீண்டியது போல் உணர்ந்தன உள்ளங்கைகள்.‘‘புள்ளைங்க எல்லாத்தையும் கட்டி கொடுத்திட்டியா…? ஏன் யாரும் கூட வரல..?’’ பாட்டி வயசின் சவுகரியத்தால், தன்னுடைய எல்லைகளுக்கு மேல் தெரிந்துகொள்ள முனைப்புக் காட்டிக் கொண்டு இருந்தாள். ‘‘அட..! இந்த சமயத்திலே புள்ளைங்க கூடயிருந்து பார்த்துக்க வேண்டாமா..? பாவம் இவங்கம்மா. என்னாட்டம் வயசுக்காரியா இருக்கு…’’அவர் தன் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருக்க, மீண்டும் கண்களை மூடி கொண்டாள் விஜி.

சமயபுரத்துல அரிசிகடை வச்சிருக்கான் பையன். தங்கமான குணம். ஆள் பார்க்க சுமாரா இருந்தாலும் குடும்பத்தை நல்ல
படியா வச்சுக்குவான். கணேசனின் வரனை இப்படித்தான் எடுத்துக் கொண்டு வந்தார் வேலு மாமா.

கருப்பான முகத்துக்கு, விபூதி கீற்றிட்டது பாந்தமாக இருந்தது.‘‘நான் வந்து வீட்டில பேசட்டுமா விஜி..? எதுக்கு இத்தனை பயம். இப்போ இதெல்லாம் சகஜம்…’’
ரகுமான் கேட்டது காதுகளுக்குள் வந்து உரசியது. இதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியாது. எழுந்து நின்றாள். கால்கள் வழியே அத்தனை உறுப்பும் கழன்று நழுவியது போல் இருக்க, சட்டென்று திரும்பிப் பார்த்தாள். உட்கார்ந்த இடத்தில் எதுவும் ஈரம்பட்டு விட்டதா என்று.கடவுள் புண்ணியம் அந்த அசிங்கமெல்லாம் நடக்கவில்லை. அதற்குள் அம்மாவும் வந்திட, நியூஸ் பேப்பரில் சுற்றி வைத்திருந்த ‘அதை’ எடுத்துக் கொண்டு புடவையில் மறைத்துக் கொண்டாள்.

‘‘நான் கூட வரட்டா விஜி…’’மறுப்பாய் தலையசைத்து விட்டு,‘‘பாத்ரூமில் தண்ணியெல்லாம் இருக்கா..?’’ சன்னமான குரலில் கேட்டாள். அம்மா தலையசைக்க, மெல்ல நடந்தாள். இடுப்புக்கு கீழே ஒரு உரலைச் சுமந்து கொண்டு செல்வது போல் இருந்தது. கால்களை சேர்த்துக் கொண்டு அடியெடுத்து வைக்க இயலவில்லை. நடக்க நடக்க, உடம்பு உருகிக் கரைந்து கொண்டு இருந்தது. அசைவுகளுக்கு கருப்பை ஆக்ரோசமாய் எதிர்வினை செய்வதை அவளால் உணர முடிந்தது.

இதெல்லாம் அவளுக்கு பழக்கம் இல்லை. எத்தனை நேரம் வெளியில் இருந்தாலும், வீட்டுக்கு வந்துதான் சிறுநீரே கழிப்பாள். உபாதைகள், கோட்பாடுகளை கரைத்து குடித்துதான் விடுகிறது. அசெளகரியங்கள், சவுகரியங்களை சாகடித்து விடுகின்றன. முழுசாய் பதினைந்து நிமிடங்கள் முழுங்கிக் கொண்டது கழிப்பறை நாற்றம்.

அம்மா யாருடனோ பேசிக் கொண்டு இருந்தாள் அலைபேசியில். இவள் அமர்ந்திருந்த இடம் யாராலோ ஆக்ரமிப்பு செய்யப்பட்டு இருக்க, அம்மா தன்னுடைய இடத்தில் அமரச் சொல்லி எழ முற்பட, வேண்டாம் என்று விட்டு ஓரமாய்ச் சென்று நின்று கொண்டாள். ‘‘பக்கத்துல தான் இருக்கா, பேசறியா..?’’ அம்மா வலுவில் கையில் ஃபோனை திணிக்க,
‘‘எப்படி இருக்கே விஜி..? ஃப்லோ குறைஞ்சிருக்கா..?’’.
‘‘ம்…’’

‘‘சுத்தமா நின்ன பிறகுதானே ஆபரேசன் வைப்பாங்க…’’
‘‘ம்…’’
‘‘எதுக்கும் பயப்படாதே. டேட் பிக்ஸ் ஆனதும் தகவல் குடு. நான் உடனே வர்றேன்.’’
‘‘ம்…’’

‘‘ஏன் விஜி..? என்னவோ போல இருக்கே..? நார்மலா இரு\”வைத்து விட்டாள். கால்கள் பலமிழந்து இருந்தாலும் உட்கார பிரியமில்லாமல், கால்களை வலுக்கட்டாயமாக தரையில் பாவித்துக் கொண்டு நின்றாள்.டோக்கன் அழைக்கப்பட்டது.‘‘போகலாமா… கூப்பிட்டாச்சு…’’ அம்மா நடைக்கு ஈடு தர முடியாமல் பின் நடந்தாள்.
‘‘உட்காருங்க…’’ இருக்கையை காட்டிய டாக்டர் முகம், வயதை கணிக்க முடியாமல் இருந்தது. இவளை விடவும் அதிகமாய் நரையோடி இருந்ததால், சின்ன நிம்மதி.
பைலை வாங்கி சரிபார்த்து விட்டுத் திரும்பித் தந்தார்.

‘‘எடுத்துதான் ஆகணும்…’’ இயல்பாய் சொன்னபோது உயிருக்குள் இருந்து எதையோ உருவிக் கொண்டு கடந்ததுபோல் இருந்தது. அவள் அவஸ்தையை உணர்ந்த டாக்டர்,‘‘இதுல வருத்தப்பட எதுவுமில்லை. நீங்க பார்ட்டி ப்ளஸ்ல இருக்கீங்க. ஆனால், குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே சிலருக்கு எடுக்க வேண்டி ஆயிடுது. ஆபரேசன் முடிஞ்சு பத்து நாள்ல நீங்க உங்க அன்றாட வேலையை செய்யலாம்.

எல்லாத்தையும் பாசிடிவ்வா பார்க்கறதுதான் இன்றைக்கு தேவை. இப்போ இருந்தாலும், நீங்க குழந்தை பெத்துக்கிற கட்டத்தை எல்லாம் தாண்டியாச்சு. மாசா மாசம் போட்டு வாட்டி எடுத்த இந்த இம்சை இல்லைன்னு நினைச்சு சந்தோசப்பட்டுக்கணும். இதுதான் இப்போதைக்குத் தேவை. நான் டேப்லெட்ஸ் எழுதித் தர்றேன். மூணு நாள் போட்டுகிட்டா கம்ப்ளீட்டா நின்னுடும். அதுக்குப் பிறகு என்னை வந்து பாருங்க…’’எழுதிக் கிழித்து நீட்டிய தாளை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தார்கள்.முன்னைவிட நடை தளர்ந்து இருந்தது.

‘‘விஜிமா, விஜி பாட்டி, விஜி அத்தாட்சி…’’ காதுகளுக்குள் விதவிதமாய்க் கேட்டது. அம்மா பற்றி இருந்த கைகளை மெல்ல விலக்கிவிட, முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். என்னவோ
புரிந்தும் புரியாத நிலை.‘‘பிள்ளைகளே இருந்தாலும் எல்லாரும் உன்னை மாதிரி இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா விஜி..? நீ அதிசய பிறவி.நம்ம பத்மா அத்தையோட பையன்,கென்யாவுக்கு போனவன் போனதுதான்.கிழவி சாவுக்கு கூட எட்டிப் பார்க்கல.சொந்த பந்தமெல்லாம் சேர்ந்து தூக்கிப் போட்டோம்…’’
‘‘இத்தனை தெரிஞ்சும் நீ எதுக்கு மூணு பெத்தே..?’’ கேட்க வேண்டும் போல் நாவு துடித்தது.

‘‘நீ நில்லு ஆட்டோ பிடிச்சுட்டு வர்றேன்…’’ அம்மா கொஞ்சம் மையமாய் நின்று சாலையில் விரைந்த ஆட்டோக்களை கைகாட்டி நிறுத்தி, அழைத்து வந்தாள்.
பயணமெல்லாம் ஒற்றை மெளனம். ஆட்டோ சத்தம். கண்கள் நகர்ந்த சாலையிலேயே கவனமில்லாமல் மாட்டி இருந்தது. அம்மா மென்மையாய் கைகளைத் தொட்டாள். சில்லென்றது.
‘‘கவலைப்படாத விஜி.ரேவதி, சரவணன் எல்லாம் இருக்காங்க. அவங்க புள்ளைங்க எல்லாம் இருக்காங்க. உன்னை விட்டுத் தந்துட மாட்டாங்க. இப்பவே ரேவதி பதறிட்டு இருக்கா. சரவணன் ஞாயித்துக் கிழமை வந்துடுவான் பாரு. இருப்புக் கொள்ளாது அவனுக்கும்.’’

பதில் சொல்லவில்லை. முகத்தையும் நிமிர்த்தவில்லை. கண்கள் அனிட்சையாய் சாத்திக் கொண்டது. பாதுகாப்பு எல்லாம் பரவசத்துக்கு ஈடாகுமா..? அத்தனை பேரும் அவரவருக்காக மட்டும் வாழ, இவளுக்கு மட்டும் பாதுகாப்பு போதுமா..? ‘‘கணேசன் வேணாம், ஜாதகம் பொருந்தல. வேற இடம் பார்க்கலாம்…’’முதலில் வந்த மறுப்புச் செய்தி,கணேசன்களாய்,கணபதிகளாய், முருகன்களாய், தண்டபாணிகளாய்….‘‘உன்னை படிக்க வச்சு அப்பா நல்ல வேலை வாங்கித் தந்துட்டாரு. நீதான் பெத்தவங்களையும், கூடப் பிறந்தவங்களையும் பாத்துக்கணும்…’’ தாரகமாய் வந்து வந்து விழுந்த வார்த்தைகள். இடைவெளி விட்டு பிறந்திருந்த தம்பி தங்கைகளை நிலைப்படுத்த காலம் பிடிக்க, அதற்குள் அப்பாவின் கைகால் சோர்ந்து போனது.

காரணம் எதுவோ, அவள் தனிமரமாக நின்றுபோக.,குலை தள்ளாமலே அவள் ஓய்ந்து போனாள். சஞ்சலங்களும், வருத்தங்களும் காலப்போக்கில் காணாமல் போனது. முப்பதின் மத்தியத்தில் நின்றபோது அப்பாவும் தவறிப்போக, தம்பியும், தங்கையும் அவரவர் வாழ்க்கைக்குள் நுழைய,மெல்லிய ஏக்கம் மனசிற்குள் ஊடாடத் தொடங்கியது.தன் வாழ்க்கையில் தான் மட்டுமே ஆவது எத்தனை அலுப்பு என்று உணர்ந்த நிமிசம், அவசரமாய் ஒரு இரண்டாம் தர வாழ்க்கைக்காவது முயன்று, ‘‘கவர்மென்ட் உத்யோகம்.

கைநிறைய சம்பாதிக்கிறே. அவனுக்கு நீயா…’’ அந்த ஒற்றைச் செங்கோலே கடைசிவரைக்கும் நின்றும் போனது. ஏனோ எதுவுமே நடக்காமல் போய்விட்டது. கடைசியாய் ரகுமான் கேட்டதுகூட நினைவில் இருக்கிறது… சாதி, மதம் எல்லாம், சக மனிதத்தை விட பெரியது இல்லை என்றதும் கூட ‘இதுக்கு மேல எதுக்கு…’ என்ற விரக்தியாலே கடந்து போனாள்.

ராணி தேனீக்கு இனப்பெருக்கம் செய்வதுதான் வேலை.ஆண் தேனீக்கு பெண் தேனீயை சூழ் சுமக்க வைப்பதுதான் வேலை. ஆனால் பணித் தேனீக்கு..? காலம் முழுக்க சுய சுகமே இல்லாமல், அந்த தேன் கூட்டை பராமரிக்கவும், மகரந்தத்தில் தேன் எடுத்து யாருக்கோ சேகரிக்கவும், பாதுகாக்கவும், ஓய்வு உளைச்சல் இல்லாமல்… யோசித்துப் பார்த்தால், கர்மமே கண்ணாக, எதற்கு பிறப்பெடுத்தோம் என்ற அர்த்தமே தெரியாமல்… தியாகம் செய்யவே வலுக்கட்டாயமாக பழக்கப்படுத்திக் கொண்டு…

பூக்காமல், காய்க்காமல், வேரை பிடுங்கும் போது, இனி உபயோகம் இல்லை என்று தெரிந்துமே கூட, உள்ளுக்குள் உடைப்பெடுக்கிறது. வீணாய் ஊற்றி சரிந்த உதிரத்தில் இருந்து, ஒரு உதிரச் சொந்தம் கூட உருவாகவில்லை என்று நிஜம் வலிக்கத்தான் செய்தது.‘‘தம்பி, வர்ற வழியில அங்காளம்மன் கோயில்ல ஒருநிமிசம் வண்டியை நிறுத்து. வேண்டுதல் வைக்கணும்…’’ அம்மா ஆட்டோ டிரைவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

தலையை மட்டும் நிமிர்த்திப் பார்த்தாள். பார்வை புரிந்த அம்மா மெல்லிய குரலில் சொன்னாள்,‘‘மாத்திரைக்கு கட்டுப்பட்டு நல்லபடி நின்னுடணும். அப்பதான் சீக்கிரம் ஆபரேசனை முடிக்க முடியும். எனக்கும் முடியாமப் போனா, நீ படுத்துகிட்டா யார் பார்ப்பா.?’’ தாழ்ந்த குரலில் சொல்ல, அம்மாவின் கண்களையே பார்த்தாள்.சில பல வருசங்களுக்கு முன்னே அம்மா இதே அங்காளம்மாவிடம் தான் ருஜுவாக வேண்டும் என்று வைத்த வேண்டுதல் நிறைவேறாமலே போயிருக்கலாம் என்று தோன்றியது.

You may also like

Leave a Comment

2 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi