Monday, May 20, 2024
Home » சிறுகதை-நாணயத்தின் மதிப்பு

சிறுகதை-நாணயத்தின் மதிப்பு

by Nithya

நன்றி குங்குமம் தோழி

“டேய் முத்துப்பாண்டி, பப்ளிக் எக்ஸாம் பீஸ் 500 ரூபாய் கட்ட நாளைக்கு கடைசி தேதி, நாளைக்கு எக்ஸாம் பீஸ் கொண்டாரலைன்னா ஸ்கூலுக்கு வர வேண்டாம்னு
வாத்தியார் சொல்லிட்டார்.”பத்தாவது படிக்கும் முத்துப்பாண்டி, தன் அம்மா முனியம்மாவிடம் சொன்னான்.முனியம்மா வருத்தத்தோடு காலண்டரை பார்த்தாள். இன்று தேதி 20. ஒன்றாம் தேதி வராமல், அவள் ஒன்றும் செய்ய முடியாது. அவள் மூன்று வீடுகளில் வேலை பார்க்கிறாள். இரண்டு வீடுகளில், அட்வான்சாக, இப்போதே பாதி சம்பளம் வாங்கியாகிவிட்டது. மூன்றாவது வீட்டு எசமான், வேலைக்கு சேரும் போதே, அட்வான்ஸ் எல்லாம் கேட்கக்கூடாதென்று கறாராகச் சொல்லி இருந்தார்.

அவள் கணவன் குடிகாரன். ஜேப்டித் திருடனும் கூட. இப்போது ஜெயிலில் இருக்கிறான். வெளியே வர ஆறு மாதமாகும். ஆனால், வந்தும் அவளுக்குப் பெரிய உபகாரமாக இருக்கப் போவதில்லை. அவனுக்கும் சேர்த்து, அவள்தான் செலவு செய்ய வேண்டும்.ஒரே மகன் முத்துப்பாண்டி படிப்பில் கொஞ்சம் நல்ல மார்க் வாங்குகிறான்.

அவனாவது நன்றாகப் படித்து உருப்பட வேண்டும் என்று, அவளும் படாதபாடுபடுகிறாள். ஆனால், மாத வருமானத்தில் பாதி, வீட்டு வாடகைக்கே போய் விடுகிறது. மீதியில் வீட்டுச் செலவை சமாளிக்க, இன்றைய விலைவாசி ஒத்துழைக்க மறுக்கிறது.

நாளைக்குள் கட்டவேண்டிய பப்ளிக் எக்ஸாம் பீஸ் 500 ரூபாய் கட்டா விட்டால், அந்த வாத்தியாரும்தான் என்ன செய்வார் பாவம். அவருக்கும் கடமை என்ற ஒன்று இருக்கிறதே என்று முனியம்மாக்கு தோன்றியது. அவர் மேல் தப்பு சொல்ல அவளுக்குத் தோன்றவில்லை.‘இந்தப் பாழாப்போன மனுஷன் மட்டும் ஒழுங்கா இருந்தா, இப்படி ஒவ்வொண்ணுக்கும் நான் கஷ்டப்பட வேண்டியதில்லை…’ என்று விரக்தியுடன் வாய்விட்டுச் சொன்னாள். (பெண்ணாகப் பிறந்துவிட்டாளே..!) முத்துப்பாண்டி இந்தக் கால குழந்தைகளுக்கே உரிய சுட்டித்தனத்துடன் அவளைக் கேட்டான்… “நான் நாளைக்கு ஸ்கூலுக்கு போகலாமா, வேண்டாமா அதை சொல்லு முதல்ல…”முனியம்மா பெருமூச்சு விட்டாள்…

‘வேறு வழியில்லை. அட்வான்ஸ் தர முடியாது என்று சொன்ன, அந்த மூன்றாவது வீட்டுக்கார எசமானைத்தான், ஏதாவது மன்றாடி அட்வான்ஸ் பணம் வாங்கி, இவனிடம் தந்து நாளைக்கு பீஸ் கட்ட அனுப்ப வேண்டும்…’ என்று நினைத்துக் கொண்டாள்.

இரண்டு வருஷமாய், அவர் வீட்டில் வேலை பார்க்கிறாள். இந்த ஒரு தடவையாவது அவர் உபகாரம் செய்தால் நன்றாக இருக்கும். அவருடைய மனைவி கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், அந்த அம்மாள் ஊருக்குப் போயிருக்கிறாள். இப்போது போய் அந்த வீட்டில் பாத்திரம் கழுவி விட்டு வர வேண்டும். எதற்கும் பையனையும் அழைத்துக் கொண்டு போய் கேட்டுப் பார்க்கலாம் என்று முடிவு செய்து, முனியம்மா அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

போகும் போதே முத்துப்பாண்டி கேட்டான். ‘‘அந்த ஆள் தர மாட்டேன்னு சொன்னா என்ன செய்யறது?” ‘‘வாயை மூடிட்டு வாடா… போறப்பவே அபசகுனமாய் பேசாதடா…’’அந்த வீட்டு சொந்தக்காரர் வராந்தாவில் உட்கார்ந்து, அவர் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அவள் முத்துப்பாண்டியை கூட்டி வந்ததைப் பார்த்தவுடனேயே, அவர் முகம் சுளித்தார். “உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது, பையனை எல்லாம் கூட்டிக்கிட்டு வரக்கூடாதுன்னு…’’‘‘இல்லை எசமான்… ஒரு ஓரமா சும்மா உக்காந்துக்குவான். குறும்பு செய்ய மாட்டான்…’’ வேண்டா வெறுப்பாய் அவர் தலையசைத்தார்.

சமையலறையில் இருந்த பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் அந்த வீட்டுக்காரர் தண்ணி குடிக்க உள்ளே வந்தார். தனியாக பேசக் கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் மெல்ல கேட்டாள் முனியம்மா…‘‘எசமான் ஒரு சின்ன உதவி…’’‘‘என்ன?”‘‘அட்வான்சா, ஒரு ஐநூறு ரூவா குடுத்தீங்கன்னா உதவியா இருக்கும். எக்ஸாம் பீஸ் கட்ட நாளைக்கு கடைசி நாள்…’’‘‘ஆமா, உன் பையன் படிச்சு கலெக்டர் ஆகப்போறான். நான் முதல்லயே உன்கிட்ட சொல்லி இருக்கேன். அட்வான்சு, கடன்னு எல்லாம் என்கிட்ட கேட்கக் கூடாதுன்னு…” அவர் நிற்காமல் சப்தமாகச் சொல்லிக் கொண்டே போய்விட்டார்.

முனியம்மாவிற்கு அவர் பேசியது வேதனையாக இருந்தது. பெரிய பங்களாவில் வசிக்கிற அந்த மனிதருக்கு மனம் சிறுத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால், அவரிடம் ஒன்றும் சொல்லாமல் பாத்திரம் கழுவி முடித்தாள்.மகனை அழைத்துக் கொண்டு, அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினாள். போகிற வழியில், அவள் கண்களை துடைத்துக் கொண்ட போது, முத்துப்பாண்டி கேட்டான். ‘‘அழறியாம்மா?’’ ‘‘இல்லடா… கண்ணுல தூசி…’’‘‘நீ எதுக்கும்மா கவலைப்படறே… இதை பாத்தியா?” என்ற முத்துப்பாண்டி, ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை அவளிடம் காண்பித்தான்.

முனியம்மா திகைப்புடன், அந்த பணத்தை வாங்கிக் கொண்டே கேட்டாள். “இது எங்கடா கிடைச்சுது?”“அந்த வீட்டுல கீழே கிடந்தது. அந்த ஆளுக்கு தெரியாம, அதை எடுத்து ஜோபுல போட்டுக்கிட்டேன்…”முனியம்மா அந்த இடத்திலேயே மகன் முதுகில் மாறி மாறி அடித்து, “இது என்னடா திருட்டுப் பழக்கம், எப்ப இருந்து ஆரம்பிச்சுது. அப்பன் புத்தி அப்படியே வந்திருச்சா உனக்கு, ஏழையா இருந்தாலும், கவுரவமா பொழைக்கணும்னுதானடா இவ்வளவு கஷ்டப்படறேன். என்ன காரியம் செய்திருக்கே…”அப்படியே திரும்பி, மகனை தரதரவென்று இழுத்து, அந்த வீட்டுக்குச் சென்றாள்.

இன்னமும் அந்த வீட்டுக்காரர், அந்த நண்பரிடம் பேசிக் கொண்டுதான் இருந்தார். அவளை பார்த்தவுடன் எரிச்சலுடன் கேட்டார்… ‘‘என்ன..?’’‘‘என் மகன் தெரியாத்தனமா தப்பு செய்திட்டான் எசமான். உங்க வீட்ல கீழே விழுந்து கிடந்ததாம், இந்த ஐநூறு ரூபா. அதை எடுத்து வச்சுகிட்டான்…’’அவள் அந்த ஐநூறு ரூபாயை அவரிடம் நீட்டினாள். அவர், முத்துப்பாண்டியை சுட்டெரிக்கிற மாதிரி பார்த்துக் கொண்டே, ஐநூறு ரூபாய்த் தாளை வாங்கினார்.

“உன் புருஷன் பிக்பாக்கெட்டு அதனால வேலையில சேர்த்துக்க வேண்டாம்னு அன்னைக்கே பல பேரு சொன்னாங்க… இன்னைக்கு, உன் பையனும் அதையே
செய்திருக்கிறான்…”வார்த்தைகள் சுட்டெரிக்க, முனியம்மா துடித்துப் போனாள். அதுவும், முன்பின் தெரியாத ஒரு மனிதர் முன் இப்படி அவமானப்படுத்துகிறாரே என்று அழுகை அழுகையாக வந்தது.

‘‘என்ன எசமான், குழந்தை ஏதோ தெரியாத்தனமா செய்ததை இப்படி சொல்றீங்க, அதான் அவனுக்குப் புத்தி சொல்லி, நான் திருப்பிக் குடுத்துட்டேனில்ல…’’அவர், தன் நண்பர் முன்னிலையில், அவள் அப்படிக் கேட்டதை கவுரவக் குறைவாக நினைத்தார். கோபத்துடன் சொன்னார். ‘‘நீயா கொண்டு வந்து தந்திருக்கலைன்னா உன் வீட்டுக்கு போலீஸ் வந்திருக்கும். திருட்டுத்தனம் செய்யலாமாம்… நான் அதை சொல்லக்கூடாதாம். இப்படிப்பட்ட ஆள் வேலைக்கு வேண்டாம். நாளையில் இருந்து நீ வேலைக்கு வராதே…”முனியம்மா கூனிக் குறுகிப் போனாள், ‘என்ன மனிதர் இவர்? ஆனால், ஒரு வீடு இல்லையென்றால், வேலைக்கு ஆயிரம் வீடு’ என்று எண்ணியவளாக சொன்னாள்.

‘‘சரி எசமான்… நாளையில் இருந்து நான் வேலைக்கு வரலை. இந்த, 25 நாள் செய்த வேலைக்கு சம்பளம் கொடுத்திடுங்க, போயிடறேன்…”வேலைக்கு வரக்கூடாது என்று சொன்னதைக் கேட்டு, அவள் அதிர்ந்து போய், கெஞ்சிக் கூத்தாடுவாள் என்று நினைத்த அவருக்கு, அவள் அதை செய்யாமல், செய்த வேலைக்கு சம்பளம் கேட்டது, அவர் கோபத்தை
அதிகப்படுத்தியது. “முதலில் என் வீட்டுல என்ன எல்லாம் காணாமல் போய் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, கணக்கு போடாமல், உனக்கு நயா பைசா தர மாட்டேன்” என்றார். மனசாட்சி இல்லாமல் பேசும் அந்த மனிதரை, கண்கலங்கப் பார்த்தாள் முனியம்மா.

அவர், அவளை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தார். பக்கத்தில் இதை எல்லாம் பார்த்தபடி உட்கார்ந்திருந்த அவரது நண்பரை, நியாயம் கேட்கும் பாவனையில் பார்த்தாள் முனியம்மா. ஆனால், அவரோ, ஆழ்ந்த யோசனையுடன், வேறெங்கோ பார்த்தபடி இருந்தார்.ஏழைக்கு யாரும் துணை இல்லை என்ற எண்ணம், அவள் மனதில் மேலோங்கி நின்றது. ஓரிரு நிமிடங்கள் நின்றவள், அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். முத்துப்பாண்டி அழவில்லை. அவன் முகத்தை உர்ர்…ரென்று வைத்திருந்தான்.

அவன், அவளை பார்த்த பார்வை, ‘நீ ஒரு முட்டாள்…’ என்று குற்றம் சாட்டுவது போல தெரிந்தது. அவளால் அதைத் தாங்க முடியவில்லை. அவள் நேர்மைக்கு கிடைத்த மரியாதையை கண்டு, மகன் எள்ளி நகைப்பது போல் இருந்தது; மனம் வலித்தது.சிறிது தூரம் அவர்கள் போயிருப்பர், அவர்கள் அருகில் ஒரு கார் வந்து நின்றது. பயத்துடன் முனியம்மா பார்த்தாள். அந்த வீட்டுக்காரரின் நண்பர் காரில் இருந்து இறங்கினார். அவரை பார்க்கவே, அவளுக்கு அவமானமாக இருந்தது. தலை குனிந்து நின்றாள். அவர் ஒன்றும் சொல்லாமல், தன் விசிட்டிங் கார்டை நீட்டினார்.

“பக்கத்து ரோட்டில், புதிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒண்ணு வந்திருக்கில்லையா? அது என்னோடதுதான். அங்கே இந்த கார்டை கொண்டு போய், நாளைக்கு காலைல காண்பி. உனக்கு, நல்ல சம்பளத்துல, தகுந்த வேலை போட்டுக் கொடுப்பாங்க. நான் சொல்லி வைக்கிறேன்.”அவளால், தன் காதுகளை நம்ப முடியவில்லை. அந்தக் கார்டை வாங்கியபடியே அவரை திகைப்புடன் பார்த்தாள்.அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோர், மூன்று மாடிக் கட்டடம். ஐநூறு பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். நல்ல சம்பளம், அந்த வழியாகப் போகும் போதெல்லாம் அண்ணாந்து பார்த்திருக்கிறாள். அதிலெல்லாம் ஒரு வேலை கிடைக்கும் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை.அவர், அவளை பார்த்துக் கனிவாகச் சொன்னார்…

“நாணயமான ஆட்கள் வேலைக்கு கிடைக்கிறது, இந்த காலத்துல ரொம்ப கஷ்டம்மா… ஒரு நல்ல ஆளை கண்டுபிடிக்கறதுக்கு, பத்து பேரை வேலைக்கு சேர்க்க வேண்டியிருக்கு. பல ஊர்கள்ல தொழில் செய்ற என்னோட அனுபவம் இது. பணத்தேவை இருக்கிறப்பவும், எடுத்தது மகன் என்றும் பார்க்காமல், அந்தப் பணத்தோட திரும்பி வந்தே பாரு… உன்னை மாதிரி ஒரு நாணயமான வேலையாள் கிடைக்கணும்னா, ஆயிரத்துல ஒருத்தர் தேர்றது கூட கஷ்டம்.

நாளைக்கு கண்டிப்பா வா,” சொன்னவர், சட்டைப் பையில் இருந்து, இரண்டு ஐநூறு ரூபாய்களை எடுத்து, அவள் கையில் திணித்தார். ‘‘ஏதோ அவசரத் தேவைன்னு சொன்னியே… அதுக்கு வச்சுக்கோ.”எதிர்பார்க்காமலே, நல்ல வேலை கிடைத்த சந்தோஷத்தை விட, நேர்மைக்கு மதிப்பில்லை என்று தன் மகன் நினைக்க இருந்த தருணத்தில், அவர், நாணயத்திற்கு உண்டான மதிப்பை உணர்த்திவிட்டுப் போனது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

தொகுப்பு: நீ.த.வெங்கட்

You may also like

Leave a Comment

20 − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi