Wednesday, May 29, 2024
Home » பள்ளிக்கொண்டருளும் அரங்கநாதஸ்வாமி

பள்ளிக்கொண்டருளும் அரங்கநாதஸ்வாமி

by Kalaivani Saravanan

நின்ற, அமர்ந்த திருக் கோலத்தில் இருக்கும் பெருமாள், நாம் சொல்லும் குறைகளை அல்லது வேண்டுதல்களை மிக விரைவாக தீர்த்துவைப்பதாகவும், சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் தாமதப்படுத்துவதாகவும் ஒரு கூற்று பக்தர்களிடத்தில் நிலவி வருகின்றது. காரணம், சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதால், பக்தர்களின் வேண்டுதலை சற்று தாமதம் செய்கிறாராம். இது தவறான கூற்று. இன்னும் சொல்லப் போனால், சிறிய பரிகாரங்களைகூட எதிர்பார்க்காமலும், பக்தர்கள் செய்கின்ற (மொட்டையடித்தல், விரதம் இருத்தல்) வேண்டுதலை எதிர்பார்க்காமலும், பக்தர்கள் இடுகின்ற காணிக்கைகளைகூட முக்கியமாக கருதாமல், சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து, சீக்கிரமாக நிவர்த்தி செய்கிறார்.

அது எப்படி! என்று ஆச்சரியமாக இருக்கிறதா!

இதற்கு நம் முன்னோர்கள் மிக அழகான ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறார்கள். அதாவது, ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் சயன கோலப் பெருமாள், பக்தர்களின் வேண்டுதல்களை கேட்டு, சயன கோலத்திலிருந்து சற்று கண்விழிப்பாராம். எங்கு இந்த வேண்டுதல்கள் எல்லாம் நம் தொடர் நித்திரைக்கு ஆபத்தாகி விடுமோ? என்கின்ற அச்சத்தினால், சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் வேண்டியதை தந்து விடுவாராம்.

அடடா… என்ன அருமையாக முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கின்றார்கள். அப்போது, சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் யார்? என்ற கேள்வி எழுகின்றதல்லவா? பலரும் அறிந்ததே.. பெரும்பாலான கோயில்களில், சயன கோலத்தில் காட்சிக் கொடுப்பது சாட்சாத் அந்த “ரங்கநாத பெருமாள்தான்’’! ரெங்கநாதர் என்று சொன்ன உடனே, ஸ்ரீரங்கத்தில் கோயில் கொண்டுள்ள `ரங்கநாதஸ்வாமி’தான் நம் நினைவுக்கு முதலில் வரும். ஆஜானுபாகு தோற்றம், பெரியத் திருவடி என நம் கண்கள் முன்னே நிற்கும்.

அப்படி நம் கண்கள் முன்னே நிற்கும் மற்றுமொரு கோயிலும் உள்ளது. சென்னை பட்டாபிராம், திருத்தண்டுரை என்கின்ற இடத்தில் `ஸ்ரீஅரங்கநாயகி தாயார் சமேத, ஸ்ரீஅரங்கநாதப் பெருமாள்’ எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்து வருகிறார். கோயிலின் முகப்பை கண்டவுடனே;

`பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே!’
என்னும் `தொண்டரடி பொடி ஆழ்வாரின்’

பாசுரத்தை மனதில் நினைத்தவாறே உள்ளே சென்றோம். அழகிய தோற்றம். பழமை மாறாத வாசம். கோயிலை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருந்தோம். உள்ளே சென்றதும் கோயிலின் நிர்வாகியிடம் கேட்கத் தொடங்கினோம். 1948-ஆம் ஆண்டில், திருத்தண்டுரையில் வசிக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தினமும் சில சத்சங்கத்தை செய்ய ஆசைப்பட்டனர். அதனால், ஒரு கூடாரம் ஒன்றினை அமைத்து, அவ்வூர் மக்கள் அனைவரும் இணைந்து நித்தியப்படி சுவாமி பஜனைகளை செய்துவந்துள்ளார்கள். மேலும், 1958-ல் அவ்விடத்தில் கருங்கற்களைக் கொண்டு, சுவர் எழுப்பி கோயில் போன்ற வடிவமைத்து, பாமா – ருக்மணி சமேதராக இருக்கக்கூடிய ஸ்ரீகிருஷ்ணரின் புகைப்படத்தைக்கொண்டு, வெகு சிறப்பான முறையில் பூஜையும், பஜனையும் செய்து வந்திருக்கின்றார்கள்.

1983 – ஆம் ஆண்டு முதல் சிவக்குமார் என்பவர் இந்த பஜனை செய்யும் பொறுப்புகளை ஏற்கிறார். ஒருநாள் இந்த இடத்தில் கோயில் கட்டினால் எப்படியிருக்கும் என்று மனதில் நினைத்திருக்கிறார். நாட்கள் செல்ல.. சுமார் 2007 – ஆம் ஆண்டில், சிவக்குமாருக்கு கனவு ஒன்று ஏற்படுகிறது. அந்த கனவில், ஐந்து தலை பெரிய நாகத்தின் மீது அரங்கநாதஸ்வாமி பள்ளி கொண்டிருப்பதையும், `இதே போன்று எமக்கு ஒரு அழகிய கோயில் ஒன்றினை கட்டுமாறு’ உத்தரவிட்டிருக்கிறார், பள்ளிக் கொண்டான்.

அதன் படி, 2007-ஆம் ஆண்டு முடிவில், கோயில் எழுப்ப திட்டமிடுகிறார். மகாபலிபுரத்தில் உள்ள சில சிற்பிகளிடம் ஆலோசனைகளை பெற்று, ஒரே கற்களினால் ஆன அரங்கநாதரை வடிவமைத்தார்கள். அந்த பெருமானை, 2008 – ஆம் ஆண்டு மேற்கூரைகளை மட்டும் தகர்த்துவிட்டு, அரங்கநாதரை ஒரு நாள் முழுவதும் உள்ளே நகர்த்தி பிரதிஷ்டை செய்தார்கள். எப்படி அந்த சிறிய இடத்திற்குள் அரங்கநாதர் எழுந்தருளினார் என்று இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

பிறகு, கோபுரங்களை அமைக்கும் பணிகள் தொடங்கி, நிறைவுபெற்று 2009 – ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது. இந்த அரங்கநாதஸ்வாமிக்கு முன்பாக கருடாழ்வாரும், சுற்று பிரகாரத்தில் அரங்கநாயகி தாயாரும், ஆண்டாளும் வீற்றிருக்கிறார்கள். கருவறைக்குள், ஐந்து தலை சேஷனின் மீது வலது கரத்தை தலையில் வைத்துக்கொண்டு புஜங்க சயனமாகவும், இடது காலை சற்று மடக்கி, வலது காலை நீட்டி, அனந்த சயன திருக்கோலத்தில் அரங்கநாத ஸ்வாமி சேவை சாதிக்கிறார். அருகில் ஸ்ரீதேவி – பூதேவியும், அரங்கநாதரின் வயிற்றுப்பகுதியில் இருந்து தோன்றிய பிரம்மாவும் பக்தர்களுக்கு அருளுகிறார்கள். மேலும், மூலவரின் முன்பு சில உற்சவ மூர்த்திகளும் உள்ளன.

புரட்டாசி காலங்களில், அரங்கநாதருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அதே போல், ரங்கநாதர் என்று சொன்னாலே வைகுண்ட ஏகாதசி விழா முக்கியமல்லவா! இங்கும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதே போல், மாதந்தோறும் ரேவதி நட்சத்திரத்தன்று மஹா சுதர்சன ஹோமமும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது. சித்திரை திருவாதிரை அன்று ராமானுஜர் உற்சவம், ஆடிப்பூரம், கோகுலாஷ்டமி, புரட்டாசி மாதத்தில் அன்னகூட உற்சவம், மார்கழி தனுர் மாத உற்சவம், ஆண்டாள் திருக்கல்யாணம், அனுமன் ஜெயந்தி, மாசிமகம் அன்று சமுத்திரத்தில் தீர்த்தவாரி, பங்குனி உத்திரத்தன்று தாயாருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

மேலும், திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்காக அலங்காரக் குடைகள், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சமர்ப்பிக்கப்படும். அப்படி செல்லும் வழியில், இந்த கோயிலுக்கும் குடைகள் வந்துவிட்டு செல்லுகின்றது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அரங்கநாதர் ஏராளமான வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக, ஆண்டாளுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்தால் விரைவாக திருமணம் நடைபெறுகிறது.

அதே போல், பள்ளிக்கொண்டிருக்கும் அரங்கநாதருக்கு, தயிர் அபிஷேகம் செய்து, அந்த தயிரை உட்கொண்டால், சந்தான பாக்கியம் அதாவது, குழந்தை பேறு நிச்சயம் கிட்டும். நிறைவேறினால் துலாபாரமும் போடுவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலை நிர்மால்யம் செய்து, மேலும் சில கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில், ராஜகோபுரம், விமான கோபுரம், வைகுண்ட ஏகாதசிக் கென்று தனி பகுதி என செய்து, வரும் வைகுண்ட ஏகாதசி தினத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த கோயிலுக்கு கைங்கர்யம் செய்ய விரும்புவோர் 9841996683 என்னும் எண்களை தொடர்பு கொள்ளவும்.

காலை: 7.00 முதல் 10.00 வரை, மாலை: 6.00 முதல் 9.00 வரை கோயில் திறந்திருக்கும். சனிக்கிழமை மற்றும் விழா காலங்களில் நேரம் மாறுதலுக்கு உட்பட்டதாகும்.

தொகுப்பு: ரா.ரெங்கராஜன்

You may also like

Leave a Comment

nineteen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi