Wednesday, May 1, 2024
Home » சங்கடம் தீர்ப்பார் சனீஸ்வரன்

சங்கடம் தீர்ப்பார் சனீஸ்வரன்

by Kalaivani Saravanan
Published: Last Updated on

சனிப் பெயர்ச்சி

29.3.2023

  • நவகிரகங்களுள் மிக சக்தியும், பலமும் வாய்ந்தவராக கருதப்படுபவர் சனிபகவான்.
  • பற்பல சிவன் கோயில்களில் இவருக்குத் தனி சந்நதிகள் இருந்தாலும், திருநள்ளாரில் இருக்கும் தர்ப்பராண்யேஸ்வரர் சந்நதியின் கிழக்கு கோபுரத்தின் வடக்கு திசையில், மகர கும்ப ராசிகளின் அதிபனாக காக்கை வாகனத்தோடு, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
  • சாந்தி, பொறுமை, கருணை ஆகிய மேலான குணங்களைக் கொண்டு ஆதிமூர்த்தியாம் அந்த திருநள்ளாராரை தியானிக்கும் பக்தர்களுக்கு தன்னால் வந்த, அதாவது சனி தோஷத்தால் வந்த நோய், பொருள் விரையம், பேராபத்து, சஞ்சலம், துக்கம், விரக்தி, சோம்பல், தொழில் இடையூறு என அனைத்து சோதனைகளையும் நீக்கும் நீதி அரசராக கலியுகத்தில், சனி ஆட்சி செய்யும் இடம் இந்த தர்ப்பைக் காடு என்ற திருநள்ளாறு.
  • இங்கு உள்ள மூலவர் ஆதிமூர்த்தி – நள்ளாரார் – தர்ப்பராண்யேஸ்வரர், தானே உதித்த சுயம்பு மூர்த்தி. சப்தவிடங்க சிவதலங்களுள் மிகவும் போற்றப்படுவது. அருணகிரிநாதார், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற மேலோர்களால் பாடப்பட்ட ஸ்தலம். சிவபெருமான் உன்மத்த நடனம் செய்கிறார்.
  • நூலாறு, வஞ்சியாறு என இரண்டு நதிகள் வடபுறமும், தெற்கே அரசலாறு ஓட, இடையே சனிபகவான் கருணையே வடிவாக நின்ற கோலத்தில் அருள் பரிபாலிக்கின்றார்.
  • மணி என்ன? என்றால் ஏழரை என்று நம் முன்னோர்கள் சொன்னது இல்லை. `போடி சனியனே’… என்று மனைவியை சொன்னால் ஒருவாரம் சோறு கிடையாது. அப்படிப்பட்ட குரூர குணங்கொண்ட சனிபகவான் கருணை, சாந்தம், பொறுமை, மகிழ்ச்சி பொங்க வீற்றிருப்பது இங்குதான்.
  • நள மகராஜன் என்ற நிஷாத நாட்டு சக்ரவர்த்தி, தன் அழகு, நாடு, ஆஸ்தி, மனைவி, அனைத்தையும் இழந்து, மடையனாக மாமனின் அரண்மனையிலேயே சமையல் வேலை என்னும் சேவகம் புரிந்து வந்தான். ஒருமுறை நாரதர் அவன் கனவில் தோன்றி, நள்ளாரார் என்னும் சிவனைத் துதிக்கச் சொல்லி, பின் சனி பகவானை வணங்கும் முறையையும், ஸ்தோத்திரத்தையும் உபதேசித்து அருளினார்.
  • நளச் சக்கரவர்த்தியும் நள்ளாறு ஈசனுக்கு, பால், தயிர், பழரசம், சந்தனக் குழம்பு, பன்னீர், இளநீர், நல்லெண்ணெய் போன்றவற்றால் அபிஷேகம் செய்து சாதத்தில் நல்லெண்ணெயும், எள் பொடியும் கலந்து நைவேதியம் செய்தார். இவற்றை எல்லாம், சனி பகவான் ஒரு தூணில் மறைந்து நின்று கண்டு ரசிக்க, “போகமார்த்த பூண்முலையாள் நாயகனாம் சிவன்’’, பிரசன்னமாகி, நளன் வாட்டம் போக்கினார்.
  • பின் சனி பகவானை நோக்கி, ‘இங்கே நில். இன்று தொட்டு உனக்கும் ஈஸ்வரன் என்ற பெயர் சேரட்டும், நீ என்றார். அன்று முதல் சனி பகவான், சனீஸ்வரன் ஆனார். சூரிய குமாரன் ஆனதால், வாரத்தில் வரும் முதல்நாள் சூரியனுக்கும், கடைசி நாள் சனிக்கும் என்று வகுத்தார்கள்.
  • சனிக்கு கருமை உடல். எனவே, காக்கை வாகனம். கருப்பு வஸ்திரம். கருப்பு தான்யமான எள். எள் எண்ணெய் அவர் விரும்புவது. நீல குவளை மலர், வன்னி இலை, புளு சபையர் என்ற நீலக்கல் என அனைத்தும் சனீஸ்வரனுக்கு நளன் படைத்து வணங்கினார்.
  • அவரை வணங்கும் முன், நளமகாராஜன் ஒரு குளத்தை வெட்டினார். இதுவே `நள தீர்த்தம்’ என இன்றும் போற்றப்படுகிறது. நள தீர்த்தத்தில் எள் எண்ணெய் தேய்த்து நீராடிய பின், பழைய ஆடைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும் என்பது வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதை சனீஸ்வரர் நேசிக்கிறார். இப்படி செய்வதினால் எப்படிப்பட்ட தோஷமும், நவக்கிரஹ கோளாறும் நீங்கும் என்கிறது நாடி.
  • இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தங்களைத் தல புராணம் விரிவாக பட்டியல் இட்டு இருந்தாலும், இப்போது உள்ளவை நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அம்ச தீர்த்தம் எனும் ஐந்து தீர்த்தங்கள் மட்டுமே.
  • கோயிலுக்கு வடமேற்கே உள்ளது நள தீர்த்தம். இந்த நள தீர்த்தத்தில் எல்லாவிதமான தோஷங்களும் பீடைகளும் நீங்கும். நள தீர்த்தத்தின் அருகில் ‘நள கூபம்’ எனும் தீர்த்தம் உள்ளது. நளனுக்காகச் சிவபெருமான் தன் சூலாயுதத்தால் கங்கையை, இந்த இடத்தில் வரவழைத்தார். இதை அனைவரும் வணங்குவார்களே தவிர, இதில் நீராடுவதில்லை. கோயிலுக்குத் தெற்காக, அம்மன் சந்நதிக்கு எதிரில், மதிள் சுவரை ஒட்டி அமைந்துள்ளது சரஸ்வதி தீர்த்தம். இதில் நீராடுவோர் கலை ஞானங்களை அடைவார்கள். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக பிரம்மா, தன்னுடைய தண்டாயுதத்தால் உருவாக்கிய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம். கோயிலுக்கு நேரே கிழக்குப் பக்கத்தில் உள்ளது. இதில் நீராடுபவர்கள் பிரம்ம பதத்தை அடைவார்கள்.
  • சனிக்கிழமைகளில் ஒரு பொழுது உணவு உண்ணாது விரதம் இருப்பது ஐஸ்வர்யம், ஆரோக்கியம், ஆயுள் எல்லாம் விருத்தி அடையும் என்கிறார் அகஸ்தியர். திருநள்ளார் கோயிலை நளச் சக்கரவர்த்தி கட்டியபின், 7-ஆம் நூற்றாண்டு தொட்டு பற்பல மன்னர்கள் கோயிலை விரிவுபடுத்தினர்.
  • நாடியில் திருநள்ளாறு, `நள ஈஸ்வரம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பெயர்ச்சி ஏற்படும். அப்படி சனி பெயர்ச்சி அன்று உதயாதிவேளையில் கோதை நாச்சியாரால் ஆக்கப்பட்ட திருப்பாவையும், மற்றும் திருவெம்பாவையும் பாராயணம் செய்யப்படுகிறது. ஏனெனில், சனி பகவானை, ‘ஸ்ரீவிஷ்ணு ப்ரியாயை நமஹ’ என்று நாரதர் போற்றுகிறார்.
  • நள மகாராஜன் சொன்ன சனி பகவான் ஸ்தோத்திரத்தை ஒரு நாளைக்கு 107 முறை (108 அல்ல), காலைவேளையில் ஜபித்து வந்தால் கண் திருஷ்டி அகலும். சனி பகவானின் அதாவது சனி ஈஸ்வரனின் பெரிய அருள் சித்திக்கும்.

‘ஓம் அங் ஹ்ரீம் ஸ்ரீங் சங்
சநைஸ்வராய நம: ஓம்’

  • மதுரைக்குத் திருஞான சம்பந்தர் எழுந்தருளியபோது, அவருக்கும் அமணர்களுக்கும் அனல்வாதம் நடந்தது. ‘அவரவர் தம் தெய்வக் கொள்கைகளை எழுதித் தீயில் இட வேண்டும். எது எரியாமல் இருக்கிறதோ, அதுவே உயர்ந்தது’ எனத் தீர்மானித்தார்கள். அப்போது திருஞான சம்பந்தர், தம் திருமுறைகளில் கயிறு சார்த்திப் பார்க்க, ‘போகமார்த்த’ எனும் திருநள்ளாறு பதிகம் வந்தது. அதைத்தீயில் இட்டார்கள். அப்பதிகம் எழுதப்பட்ட ஏடு, எரியாமல் அப்படியே பச்சையாக இருந்தது. அனைவரும் வியந்தார்கள். தீயால் கூடத் தீண்ட முடியாத ‘திரு நள்ளாறு’ பதிகம் அது. அந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்தால், எந்தத் தீவினைகளும் நம்மை எரிக்காது! தீண்டாது!
  • திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில், பலி பீடம் சற்று விலகி உள்ளது. அபூர்வமான அமைப்பு இது. தடைகளை விலக்கி, திருநள்ளாறு ஈசர் காப்பார் என்பதை அழுத்தமாக விளக்கும் அமைப்பு இது.
  • சனீஸ்வரனின் தாயார் சாயா தேவி. எனவே சனி பகவானின் அர்த்தசாம பூஜையை பக்தர்கள் காணக் கூடாது என்பார்கள். தாயார் சாயாதேவி, தனியாக மகனை தரிசிப்பதாக சாஸ்திரம் கூறுகிறது.
  • சனி பகவானின் பிரசாதத்தையோ, சிவபெருமானின் பிரசாதத்தையோ வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டாலும், திருநாள்ளாறு சனீஸ்வர பிரசாதத்தை வீட்டிற்கு கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்கின்றனர் சித்தர்களும், ரிஷிகளும்.
  • புரட்டாசி மாத பௌர்ணமி பூஜையும், மகாசிவராத்திரி பூஜையும், சனி பெயர்ச்சி பூஜையும் சாலச் சிறந்தவை. இந்த காலங்களில் இங்கு தங்கி வழிபட்டால், முடியாதது ஒன்றும் இல்லை. எதையும் சாதிக்கலாம் என்கிறார் அகஸ்தியர்.
  • இங்குள்ள கலிதீர்த்த விநாயகரைத்தான் முதலில் தொழ வேண்டும் என்பது மரபு.

You may also like

Leave a Comment

1 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi