கொழும்பு: ஆசிய கோப்பை ஒருநாள் தொடரில், வங்கதேச அணியுடனான சூப்பர்-4 சுற்று லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 257 ரன் குவித்தது. கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச முடிவு செய்தது. இலங்கை அணி தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா, திமத் கருணரத்னே களமிறங்கினர். கருணரத்னே 18 ரன் எடுத்து ஹசன் மகமூத் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரகிமிடம் பிடிபட்டார். அடுத்து நிசங்கா – குசால் மெண்டிஸ் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தனர். நிசங்கா 40 ரன் எடுத்து ஷோரிபுல் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார்.
குசால் மெண்டிஸ் 50 ரன் (73 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேற, அடுத்து வந்த சரித் அசலங்கா 10, தனஞ்ஜெயா டி சில்வா 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இலங்கை அணி 37.1 ஓவரில் 164 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில், சதீரா சமரவிக்ரமா – கேப்டன் தசுன் ஷனகா பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தது. ஷனகா 24 ரன் எடுத்து ஹசன் மகமூத் பந்துவீச்சில் கிளீன்போல்டானார். துனித் வெல்லாலகே 3, மஹீஷ் தீக்ஷனா 2 ரன்னில் பெவிலியன் திரும்ப, சமரவிக்ரமா 93 ரன் (72 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 257 ரன் குவித்தது. வங்கதேச பந்துவீச்சில் டஸ்கின் அகமது, ஹசன் மகமூத் தலா 3, ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. சூப்பர்-4 சுற்றில் வங்கதேச அணி ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்ததால், பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.