Saturday, June 1, 2024
Home » சகலங்களையும் தந்தருளும் சாதுர்மாத விரதம்!

சகலங்களையும் தந்தருளும் சாதுர்மாத விரதம்!

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிறப்பு நேர்காணல் – ஸ்ரீவித்யாதீஷா தீர்த்தர்

துவைத சித்தாந்தத்தை உருவாக்கிய ஸ்ரீமத்வாச்சாரியார், அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்காகவும், தனக்கு பின், தான் நிறுவிய உடுப்பி கிருஷ்ணரை பூஜிக்கவும், பேஜாவர் மடம், பலிமார் மடம், சோதே மடம், அதமார் மடம், காணியூர் மடம், கிருஷ்ணபூர மடம், சீரூர் மடம், புத்திகே மடம் ஆகிய அஷ்ட (எட்டு) மடங்களை ஸ்தாபித்தார்.

இதில், பலிமார் மடம் மிக முக்கிய மடங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஸ்ரீஹிருஷிகேச தீர்த்தரில் (1271 – 1349) ஆரம்பித்து, ஸ்ரீசமத்மேஷ தீர்த்தர் (1288 – 1366), ஸ்ரீசம்பாவ தீர்த்தர் (1311 – 1389), ஸ்ரீஅபராஜித தீர்த்தர் (1332 – 1410), ஸ்ரீவித்யாமூர்த்தி தீர்த்தர் (1343 – 1481), ஸ்ரீராஜ ராஜேஸ்வர தீர்த்தர் (1356 – 1434), ஸ்ரீஸ்ரீநிதி தீர்த்தர் (1371 – 1449), ஸ்ரீவித்யேஷா தீர்த்தர் (1381 – 1459), ஸ்ரீ ஸ்ரீவல்லப தீர்த்தர் (1396 – 1474), ஸ்ரீஜகத்பூஷண தீர்த்தர் (1405 – 1483) என இப்படியாக பல மகான்கள் பலிமார் மடத்தின் பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

பலிமார் மடத்தின் 30-வது பீடாதிபதி ஸ்ரீவித்யாமான்ய தீர்த்தர் (1922 – 2000) ஆவார். மத்வரின் வாக்குப்படி, அவர் ஸ்தாபித்த துவைத சித்தாந்தத்தை கட்டிபாதுகாத்த பெருமை வித்யாமான்ய தீர்த்தருக்கு உண்டு. அவரின் சிஷ்யர்தான் ஸ்ரீவித்யாதீஷா தீர்த்தர். 1979 – ஆம் ஆண்டு முதல் சந்நியாசத்தை ஏற்று, பலிமார் மடத்தின் அடுத்த குருவாக நியமிக்கப்பட்டார்.

அன்று முதல் இன்றுவரை அதாவது 43 ஆண்டு களாக ஸ்ரீமத்வாச்சாரியார் மற்றும் தனதுகுருவான ஸ்ரீவித்யாமான்ய தீர்த்தர் அருளிய துவைத சித்தாந்தத்தையும், உடுப்பி ஸ்ரீகிருஷ்ணரை பூஜை செய்துவருவதுடன் மட்டுமல்லாது, ஒரு ஆன்மா மோட்சம் செல்வதற்கான ஞானம், பக்தி, வைராக்கியம் ஆகிய மூன்றையும் தொடர்ந்து பக்தர்களிடத்தில் உபன்யாசம் மூலமாக பிரச்சாரம் செய்து வருகிறார், ஸ்ரீவித்யாதீஷா தீர்த்தர்.

தற்போது, சாதுர் மாதத்தை முன்னிட்டு ஜூலை 11 முதல் செப்டம்பர் 29 வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பலிமார் மடத்தில் தங்கியிருந்து, காலையில் நித்ய பூஜை, பக்தர்களின் வீடுகளுக்கு சென்று பாத பூஜை முதலான பூஜைகள், மாலையில் உபன்யாசங்கள், இரவில் தொட்டில் பூஜை என மிக விசேஷமாக நடைபெற்று வருகிறது.

இதனை கேள்விப்பட்ட நாம், அருள் தரும் ஆன்மிகம் வாசகர்களுக்காக எக்ஸ்க்ளுசிவாக ஸ்ரீவித்யாதீஷா தீர்த்தரிடம் சில கேள்விகளை முன்வைத்து பேட்டி கண்டோம். பேட்டியை படிப்பதற்கு முன்பாக, ஸ்ரீவித்யாதீஷா தீர்த்தரை பற்றிய ஓர் சில குறிப்புகள்.

கர்நாடக மாநிலம் ஷிபரூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீஹயக்ரீவ தந்திரி மற்றும் கஸ்தூரியம்மா தம்பதியருக்கு, திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாளின் அனுகிரகத்தில், 13.05.1956 அன்று ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு, ஸ்ரீரமேஷா தந்திரி (ஸ்ரீவித்யாதீஷா தீர்த்தர்) என்று பெயரிட்டனர். சுமார் ஒரு 14 – வயதில் படிப்பில் கவனம் செல்லாது, ஆன்மிக குருவைத் தேடி உடுப்பிக்கு சென்றடைந்தார், ரமேஷா தந்திரி. அந்த சமயத்தில், ஸ்ரீவித்யாமான்ய தீர்த்தரை சந்தித்து வணங்கி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அவரின் வழிகாட்டுதலின் பெயரில், ஆன்மிக சிந்தனையில் தன்னை மூழ்கடித்தார்.

இதனை கண்ட ஸ்ரீவித்யாமான்ய தீர்த்தர், வேதாந்தத்தில் ரமேஷா தந்திரி கொண்டிருந்த ஆர்வத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்து, அவருக்கு `இலக்கணம்’, `ஸுமத்வ விஜயம்’ மற்றும் `தாத்பர்ய நிர்ணயம்’ போன்ற நூல்களைக் கற்றுக் கொடுத்தார். மேலும், காலையில் சமஸ்கிருதக் கல்லூரிக்கு சென்று சமஸ்கிருதத்தை பயின்றார். மாலை நேரங்களில், ஸ்ரீவித்யாமான்ய தீர்த்தரிடம் பல்வேறு நூல்களைப் பாடமாக கற்றுக் கொண்டார். தவிர, அவர் சமஸ்கிருதக் கல்லூரியின் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதிலும், பங்கேற்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். இவ்வாறாக, சுமார் 7 முதல் 8 ஆண்டுகளாக ஸ்ரீவித்யாமான்ய தீர்த்தரிடம் துவைத ஞானத்தை கற்றுதேர்ந்தார். கற்றலை நோக்கிய அவரது அணுகுமுறை, அவரின் பணிவு, ஆகியவை அன்றைய உடுப்பியில் உள்ள பல குருமார்களின் இதயத்தையும், குறிப்பாக தனது ஆன்மிக வழிகாட்டியான ஸ்ரீவித்யாமான்ய தீர்த்தரின் இதயத்தையும் வெல்ல வைத்தது. நாட்கள் கடந்தன.

பல துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள், ரமேஷா தந்திரி முன்னே கொட்டிக்கிடந்தது. மேலும், பலபல தொழில் வாய்ப்புகளும் அவர் முன்னே இருந்தன. இவைகள் எல்லாம் வேண்டாம் என புறம் தள்ளிவிட்ட ரமேஷா தந்திரி, குடும்ப உறவுகளையும் துறந்து, முழு நேரமும் இறைவனுக்கு தொண்டு செய்வதை (சந்நியாசம்) தேர்ந்தெடுத்தார்.

`குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டால், மீண்டும் இந்த ஜட உலகில் தன் ஆன்மா பிறக்க நேரிடும். எனவே, குடும்பப் பற்றுகளிலிருந்து விடுபட நான் முடிவு செய்துள்ளேன். இறைவனை நெருங்கிச் செல்வதற்காக, புனிதமான சந்நியாசத்தை ஏற்க முடிவு செய்திருப்பதாக ஒரு நாள், தனது விருப்பத்தை குருவிடம் வெளிப்படுத்தினார். ஸ்ரீவித்யாமான்ய தீர்த்தர் மனதிற்குள்ளும், ரமேஷா தந்திரிக்கு சந்நியாசம் வழங்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது.

அதன் படி 10.6.1979 அன்று, அதமார் கிராமத்தில் உள்ள அதமார் மடத்தில், ஸ்ரீவிபூதேஷா தீர்த்தர் மற்றும் ஸ்ரீவித்யாமான்ய தீர்த்தர் ஆகியோர், அவருக்கு “ஸ்ரீவித்யாதீஷா தீர்த்தர்’ என்று பெயர் சூட்டி, ஸ்ரீபலிமார் மடத்தின் வாரிசாக, நியமனம் செய்தனர். துறவியாக மாறியப் பிறகு, அதமாருவில் உள்ள ஆதர்ஷ (தொன்மையான) குருகுலத்தில், `சர்வமூல கிரந்தங்கள்’, `ஸ்ரீமன் நியாய சுதா’ மற்றும் `வியாச த்ரயா’ ஆகியவற்றை  வித்யாமான்ய தீர்த்தரிடம் கற்றுக் கொண்டார், ஸ்ரீவித்யாதீஷா தீர்த்தர். எண்ணற்ற பல நல்ல காரியங்களை ஸ்ரீவித்யாதீஷா தீர்த்தர் செய்து வருகிறார். அதில் சிலவற்றை பார்ப்போம்.

“பௌரோஹித்ய’’, “தந்திரம்’’, “ஜோதிடம்’’ மற்றும் வேத நூல்களில் கல்வி கற்பதற்காக, “ஸ்ரீயோகதீபிகா குருகுலம்’’ என்ற பெயரில் பலிமாருவில் நிறுவினார். மேலும், இங்கு படிக்கும் மாணவர்களின் 6 வருட படிப்பை முடித்ததும், வேதாந்த சாஸ்திரத்தில் உயர்கல்வி பெற வசதியாக, “ஸ்ரீதத்வதீபிகா வித்யாபீடம்’’ என்ற பெயரில் 2005-ல் உடுப்பியில் தொடங்கினார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப்நகரில், தனது குருவின் நினைவாக “ஸ்ரீவித்யாமான்ய பாடசாலை’’யை நிறுவினார்.

அதே போல், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் அருகே ஊத்துக்குளி என்னும் கிராமத்தில், 2010-ஆம் ஆண்டு வேதக் கல்வி கற்பதற்காக “பட்டாபிராமகிருஷ்ணா வேத வித்யாபீடம்’’ என்கின்ற பெயரிலும், ஸ்ரீவித்யாதீஷா தீர்த்தர் அமைத்தார்.

ஸ்ரீவித்யாதீஷா தீர்த்தரின் பர்யாயம் காலத்தில் (உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணருக்கு இரண்டு ஆண்டு காலம் தினமும் பூஜை செய்யவேண்டும். இந்தமுறை அஷ்ட மடாதிபதிக்குள் சுழற்சி முறையில், இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை `பர்யாயம்’ என்ற பெயரில் வெகு விமர்சையாக விழாவாக கொண்டாடப்படும்) மூன்று கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள வஜ்ராங்கி என்று சொல்லப்படுகின்ற வைர அங்கியினை உடுப்பி ஸ்ரீகிருஷ்ணருக்கு அணிவித்து அழகு பார்த்தார்.

உடுப்பியில், முதல் முறையாக 108 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகளை வழங்கும் திட்டத்தை வடிவமைத்தார். ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த துளசியினைக் கொண்டு, ஒரு கோடி துளசி இலைகளை அர்ச்சனை செய்து அர்ப்பணித்தார். அதன் மூலம்,  கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இது போல இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இதோ.. ஸ்வாமிகளுடன் உரையாடியவற்றை பார்ப்போம். சாதுர் மாதத்திற்காக வந்திருக்கும் ஸ்ரீவித்யாதீஷ தீர்த்தரிடம் முதல் கேள்வியாக, சாதுர் மாத விரதத்தை பற்றிய கேள்வியை தொடங்கினோம்.

? சாதுர் மாதம் என்பது என்ன? அந்த விரதத்தை ஏன் கடைப் பிடிக்க வேண்டும்?

* சாதுர் மாதம் விரதம் என்பது, நான்கு மாதங்கள் கடைப் பிடிக்கும் மிக முக்கிய விரதமாகும். கடவுளின் அபிமானத்தை பெறக்கூடிய விரதம். குறிப்பாக, என்னை போன்ற சந்நியாசிகள் விடாது கடைப்பிடிக்கக் கூடிய விரதம். இந்த விரதத்தை ஏன் சந்நியாசிகள் கடைப் பிடிக்க வேண்டும் என்பதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, மழை காலங்களில் எறும்புகள், பூச்சிகள் போன்ற சிறு பிராணிகள் தன் பொந்துகளை விட்டு வெளியே வர ஆரம்பிக்கும். அந்த சமயத்தில், துறவிகளின் கால்களில்பட்டு அந்த ஜீவன்கள் துன்பப்படலாம். மேலும், மழை காலங்களில் சந்நியாசிகள் சஞ்சாரம் செய்வதும் கடினம்.

இன்னொரு காரணம், சாதுர் மாதம் என்பது மாதங்களில் சிறந்தமாதமாகும். அந்த காலத்தில், ஒரே இடத்தில் பகவானை நினைத்து தியானம், பிரவச்சனம், மேலும், பகவானுக்கு பூஜைகள் செய்வதன் மூலம், நம் கவனங்கள் சிதறாது ஒரு நிலையோடு இருக்கும். பகவானுக்கும் இது ப்ரீத்தி ஆகிறது.

உதாரணத்திற்கு; “கிருஷ்ணஜெயந்தி’’, கிரகண காலங்கள் அதாவது “சூர்ய கிரகணம்” – “சந்திர கிரகணம்” போன்ற தினங்களில், எத்தகைய பகவானின் காரியங்களை செய்தாலும், அது பகவானுக்கு இஷ்டமாகிறது. அதே போல, இந்த நான்கு மாதமான சாதுர் மாதத்தில், ஆச்சாரியர்கள் சொல்லப்பட்ட விரதங்களை கடைப் பிடித்து, பகவானை ஸ்மரனை செய்தால், அதிக பலன் கிட்டும். இதில் முக்கியமானது, நான்கு மாதத்தில், ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு உணவு முறைகளை கடைப் பிடிக்க வேண்டும்.

முதல் மாதம், ஷாக விரதம் அதாவது காய் கறிகளை தவிர்க்க வேண்டும். அடுத்த மாதம் ததி விரதம் – தயிர் சேர்த்துக் கொள்ள கூடாது. ஷீர விரதம் – பால் சேர்த்துக் கொள்ள கூடாது. கடைசியாக, த்வீ தள விரதம் – உணவில் பருப்பு வகையினை தவிர்க்க வேண்டும். இதனை, நான்கு மாதங்கள் சந்நியாசிகள் ஒரே இடத்தில் இருந்து விரதத்தை கடைப் பிடிப்பார்கள். இதற்கு பிரமாணம்கூட இருக்கிறது.

ராமாயணத்தில் ராமர், நான்கு மாதங்கள் சாதுர் மாத விரதத்தை கடைப் பித்ததாக வருகிறது. அதே போல, முன்மொரு காலத்தில் அனைத்து சந்நியாசிகளும் ஒன்று சேர்ந்து விரதத்தை கடைப் பிடிக்கும்போது, சிறு குழந்தையாக இருக்கும் நாரதர், தனது தாயுடன் அங்கு வந்து இந்த விரதத்தை கடைப் பிடித்துள்ளார். அப்போது, சந்நியாசிகள் சொல்லும் உபன்யாசத்தை கேட்கிறார். பின் நாட்களில், அது அவருக்கு உபயோகமாக இருந்திருக்கிறது என்று பாகவதத்தில்கூட சொல்லப் பட்டுள்ளது. இவ்விரதம், ஏதோ சந்நியாசிகளுக்கானது என்று நினைத்துவிட வேண்டாம். சந்நியாசிகளுடன் இணைந்து கிரஹஸ்தர்களும் (குடும்ப வாழ்க்கையில் வாழ்பவர்) சேர்ந்து செய்யவேண்டும்.

? நான் தினம் தோறும் கடவுளே கதி என்று கோயிலுக்கு செல்கிறேன், பூஜை செய்கிறேன், கடவுளை வேண்டுகிறேன். ஆனால் கடவுள், என்னை போன்ற கடவுளே கதி என்று இருப்பவர்களைத்தான் அதிக துன்பங்களை கொடுத்து சோதிக்கிறான். கடவுளே வேண்டாம் என்று சொல்பவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்களே? என்று பலரின் மனதில் இருக்கிறது. உங்கள் கருத்து?

* இரண்டு விஷயங்கள் அதனுள் இருக்கிறது. ஒன்று, அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள், ஆனந்தமாக வாழ்கிறார்கள், பிரச்னையின்றி வாழ்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்படுவது, நம் மனதில் இருக்கும் பிரம்மை (கற்பனை). முந்தின ஜென்மத்தின் பலனாக, மனிதர்களாக பிறந்த எல்லாருக்கும் இன்ப – துன்ப வாழ்வு என்பது நிச்சயம் கிடைத்தே தீரும். கடவுள் ஒருவருக்கே இன்ப – துன்ப வாழ்வு என்பது கிடையாது. ஒரு ஆச்சரியத்தை பாருங்கள்…! மனிதனாக அவதாரம் எடுத்த ராமருக்கும் துக்கம் வந்ததல்லவா! ஆகையினால், துன்பம் என்பது கடவுளை வழிபட்டாலும் படாவிட்டாலும், வந்தே தீரும். இன்னொன்று, நாம் எப்போதோ.. யுகம் யுகமாக செய்த பாவ – புண்ணியத்திற்கு ஏற்றார் போல், தற்போது (இந்த பிறவியில்) துன்பம் அமைகிறது.

இன்று நீங்கள் பகவானை வேண்டிக் கொண்டால், நாளை (அடுத்த பிறவியில்) உங்களுக்கு நிச்சயம் நன்மை கிடைக்கும். இது கர்மாவின் ரகசியம். இன்னும் ஆழமாக சொல்லவேண்டும் என்றால், ஒரு பழத்தின் விதைகளை மண்ணிற்குள் புதைக்கின்றீர்கள். தினமும் அதற்கு தண்ணீரை ஊற்றி வளர்க்க பல நாட்கள் தேவைப்படும்.

அதன் பின், சிறு முளைவிடும். நாட்கள் செல்லச் செல்ல சிறிய செடியாக வளர்ந்து, பெரிய செடியாக மாறி, மரமாக மாற எத்தனையோ மாதங்கள் தேவைப்படும்தானே! மரமாக வளர்ந்தால் போதுமா? காயாகி, கனியாக இன்னும் சில மாதங்கள் எடுக்குமல்லவா? அது போலத்தான். இன்று செய்யும் நற்செயல்களுக்கு இன்றே பலன் கிடைப்பதில்லை. எத்தனையோ ஆண்டாண்டு காலமாக கடவுளை சிறுகச்சிறுக தியானித்துவந்துள்ளோம்.

இப்பிறவியில், மேலும் வழிபடுங்கள். அடுத்த பிறவியில் முக்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள். தவிர, கடவுள் காரியத்தை செய்தால் அது என்றைக்குமே வீணாகாது.

? இத்தனை ஆண்டுகளாக கிருஷ்ணருக்கு பூஜைகளை செய்துவரும் ஸ்வாமிகளுக்கு, கிருஷ்ணர் நிகழ்த்திய அற்புதம் என்ன?

* (சிறிய சிரிப்புடன்) உடுப்பி கிருஷ்ணரை தொட்டு பூஜை செய்வதே, கிருஷ்ணர் எனக்கு நிகழ்த்திய அதிஅற்புதமாக நான் கருதுகிறேன்.

? நம் இந்து தர்மத்தில் சொல்லப்பட்டுள்ள ஏகாதசி போன்ற விரதங்களை கடைப் பிடிக்க எங்களுக்கு (பக்தர்கள்) ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால், மருத்துவர்கள் விரதம் இருக்கக் கூடாது என்று சொல்கிறார்களே என்ன செய்ய?

* உண்மையாக சொல்ல வேண்டும்மென்றால், மருத்துவர்களும் மறைமுகமாக உபவாசம் இருக்க சொல்கிறார்கள். ஆம்..! நம் தர்மம் என்ன சொல்கிறது, உபவாசம் என்கிறது. மருத்துவர்கள் `டயட்’ என்கிறார்கள். இதில் என்ன வேறுபாடு? எல்லாம் ஒன்றுதானே. வார்த்தைகள் மட்டுமே மாறுகின்றன. ஆனால், அர்த்தம் ஒன்றுதான். மருத்துவர்கள் கூறிய டயட்டை ஃபாலோ செய்ய தயாராக இருக்கிறோம். உபவாசம் செய்ய தயாராக இல்லை. வீட்டில் ஒரு மிஷின் இருக்கிறது, அது தினமும் ஓடிக் கொண்டே இருந்தால், அது வீணாகிவிடாதா? அது போலத்தான் நமது உடலும். தினமும் இயங்கிக் கொண்டே இருந்தால், என்னவாகும்!

சாஸ்திரம் – தர்மம் எல்லாமே அறிவியலோடும் தொடர்பு கொண்டவை. மேலும், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு விதிவிலக்குகள் உள்ளன. இன்னும் சொல்லவேண்டும்மென்றால், டாக்டர்கள் தினமும் டயட் இருக்க சொல்கிறார்கள். ஆனால், ஏகாதசி 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. அதை செய்வது மூலமாக உடலில் இருக்கும் அசுத்தங்கள் வெளியேறிவிடுகின்றன.

? இந்து மார்க்கத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?

* கிருஷ்ணர் கீதையில் மிக தெளிவாக கூறியுள்ளார்.

“ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்து’’

கடவுள் என்பவர் ஒருவனே. அதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர்தான் அனைத்தையும் உருவாக்கியவர். பிறகு ஏன் பிற தெய்வங்கள்? அதுதானே! உதாரணத்திற்கு; ஒரு அதிகாரி இருக்கிறார் அவரை தேடி ஆயிராயிரம் நபர்கள் தினமும் வந்துபோவார்கள்.

அந்த அதிகாரி, அனைவரையும் கண்டு, குறைகளை கேட்டறிந்து, பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியுமா? அதற்குதான், தனக்கு கீழே சில அதிகாரிகளை நியமித்து, மக்களின் குறைகளை கேட்டறிந்தபடி செய்கிறார்களோ, அதுபோலத்தான் கடவுளும். தனக்கு கீழ் பல தெய்வங்களை உருவாக்கி வைத்திருக்கிறார். ஒரு அமைச்சரிடம் நமக்கு மிக சுலபமாக காரியம் ஆகவேண்டும்மென்றால், அவரின் பி.ஏ.வை பார்த்தால் போதும் அல்லவா!

? பணம், பணம் என்று பணத்தை நோக்கியே நாங்கள் (மக்கள்) ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், நிம்மதி இல்லை?

* சாந்தி, நிம்மதியை அனைவரும் விருப்புகிறார்கள். ஒன்று வேண்டும் என்று சொல்லும்போது அதில் நிறைய பிரச்னைகள் வருகின்றன. வேண்டாம் என்று நினைக்கும் போது, அதில் பிரச்னைகள் வருவதில்லை. அதே போல், பணம் வேண்டும்வேண்டும் என்று நினைக்கும் போது, பிரச்னைகள் அதிகமாக வருகின்றன. பணம் குறைவானபோது பிரச்னைகளும் குறைவே! பிரச்னைகள் குறைவென்றால், ஆட்டோமெட்டிக்காக நிம்மதி; சந்தோசம் வந்துவிடும். ஏழைகள் எங்கு தூங்கினாலும் தூக்கம் வருவதற்கு காரணம் இதுதான். வாழ்வதற்கு போதுமான பணத்தை வைத்துக் கொண்டால் போதும். நிம்மதி தானாக வரும்.

? பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்தால் பாவங்கள் விலகுமா?

* சில பாவங்கள் பிராயச்சித்தம் செய்தால் சரியாகிவிடும். சில பாவங்கள், அதனை அனுபவிப்பதன் மூலமாகவே பிராயச்சித்தம் ஆகிறது. மேலும், தெரியாமல் செய்த சில பாவங்களுக்கு பிராயச்சித்தம் உள்ளது. ஒருவரை நீங்கள் தெரியாமல் கால்களை மிதித்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

நீங்களும் மனப்பூர்வமாக சாரி.. என்று கேட்கிறீர்கள், அவரும் உங்களை மன்னித்து விடுகிறார். பாவம் ஏறக்குறைய டாலி (Tally) ஆகிவிட்டது. இது தெரியாமல் செய்த பாவம். ஆனால், தெரிந்தே பாவம் செய்தால்? அதற்கு நிச்சயம் ஆண்டவன் தண்டனைகளை கொடுப்பான். ஒருவரிடம் திருடிவிட்டு மனம் வருந்தி, அவரிடமே சென்று பகிரங்கமாக மன்னிப்பை கேட்பதும் பிராயச்சித்தமே. இதன் மூலம் பாவம் பரிகாரம் ஆகிறது.

? வெங்காயம், பூண்டு, முருங்கை ஆகியவற்றை ஏன் சிலர் தவிர்க்கிறார்கள்?

* சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என மூன்று குணங்கள் உணவில் உள்ளன. தாமஸம் என்னும் குணமுடைய உணவினை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ராஜஸம் குணமுடைய உணவினை உண்பது உசிதமில்லை (தவிர்ப்பது நல்லது). சாத்வீக உணவுகளை மட்டுமே உட்கொள்வது நல்லது. காரணம், நம் மனதில் தீய எண்ணத்தை உண்டாக்கும். உதாரணமாக; குடிக்கவேண்டாம் என்கிறார்கள் காரணமென்ன? குடித்தால், புத்தியும் கெட்டுவிடும், ஆரோக்கியமும் குறைந்துவிடும். அது போலத்தான், சில உணவிலும் தீங்கு இருக்கிறது.

மழை காலங்களில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். மேலும், ஒருவர் குடித்தால் எத்தகைய பிரச்னைகளை அவர் சந்திக்க போகிறார் என்று மருத்துவர்களுக்கு தெரிகிறது. அதனால், குடிக்கவேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். அது போலவே வெங்காயம், பூண்டு போன்ற உணவில் தாமஸம் குணம் உள்ளது. உண்ண வேண்டாம் என்று தர்மம் சொல்கிறது. நம் முன்னோர்களுக்கு அதுபற்றி தெரிந்திருக்கிறது. அதனை நமக்கு அறியுரையாக கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் பின்பற்றினார்கள்; பின்பற்றியும் வருகிறார்கள், பின்பற்றுவது நல்லது.

தொகுப்பு: ரா.ரெங்கராஜன்

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi