Sunday, May 19, 2024
Home » பாபா குருஸ்தான்

பாபா குருஸ்தான்

by Porselvi

சீரடியில் திடீரென்று ஒருநாள் வேப்ப மரத்தடியில் ஓர் இளைஞன் அமர்ந்திருந்தான். அவனுக்குச் சுமாராக பதினாறு வயது இருக்கலாம். அவன் எப்பொழுதும் பகலும் இரவும் கண் மூடி தியானத்தில் இருந்தான். சூட்டையோ, குளிரையோ பொருட்படுத்தாமல் ஆசனத்திலேயே அமர்ந்திருந்தான். அவன் யாருடனும் பேசுவதில்லை; எந்த வீட்டிற்கும் செல்வதில்லை. சீரடிக்கு அந்த இளைஞன் எங்கிருந்து வந்து இங்கு அமர்ந்து இருக்கிறான் என ஆச்சரியப்பட்டனர். அழகும், சுறுசுறுப்பும்கொண்ட அவ்விளைஞனை எல்லோரும் அன்புடன் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தெய்வாம்சத்தில் ஒன்றியிருந்தான். பிரம்ம ஞானத்தால் நிரம்பிய ஞானியின் செயல்களைப் போல அவ்விளைஞனின் செயல்கள் இருந்தன.

ஒருநாள் சீரடி மக்கள் சிலபேர் ஒன்றுகூடி அந்த இளைஞனை அணுகினர். அதில் ஓர் அடியவருக்கு சீரடியின் தெய்வமான ‘‘கண்டோபா சாமி’’ வந்தது. அப்போது கூடியிருந்தவர்கள் ‘கண்டோபா தெய்வமே! இவ்விளைஞன் யார்? அவன் எப்போது வந்தான் என்பதைச் சொல்ல வேண்டும்’ என்று வேண்டினர்.கண்டோபா அவர்களை ஒரு மண்வெட்டி கொண்டு வரச் சொல்லி, வேப்ப மரத்தடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தோண்டச் சொன்னது. அவ்விடம் தோண்டப்பட்ட போது செங்கற்கள் காணப்பட்டன. அதற்கடியில் சமதளக்கல் ஒன்று இருந்தது. அந்தக் கல்லை அப்புறப்படுத்திய பொழுது ஒரு நிலைக்கதவு தெரிந்தது. அங்கு நான்கு விளக்குகள் திசைக் கொன்றாய் எரிந்துகொண்டிருந்தன. அதன் பக்கத்தில் ஜபமாலைகள், ஜபம் செய்யும் பசுமுக உருவங்கள், மரப்பலகைகள் இருந்தன.

அப்போது கண்டோபா கடவுள் கூறியதாவது: ‘இந்த இளைஞன் இங்கு 12 ஆண்டுகளாக இந்த நான்கு நந்தா தீபங்களின் நடுவில் தவம் செய்து கொண்டிருந்தான்.’ இதைக் கேட்ட மக்கள் அவ்விளைஞனிடம் இதுபற்றி கேட்டனர். அதற்கு அவன் அவர்களை திசை திருப்பி, அது அவனுடைய குருவின் இடம் (குருஸ்தான்) என்றும், அவருடைய புனிதமான ‘வாதன்’ என்றும் சொல்லி அதை நன்றாகப் பாதுகாக்கும்படி வேண்டிக் கொண்டான். மக்கள் அப்போது தோண்டிய இடத்தையும், கதவையும் முன்பு இருந்தபடியே முடிவிட்டனர்.

மஹல்ஸாபதியும் மற்ற அடியவர்களும் வேப்ப மரம் உள்ள இடத்தை அவ்விளைஞனின் குருநாதர் சமாதியடைந்த இடமாகக் கருதி வழிபடத் தொடங்கினர். அவ்விளைஞன் யார்? சீரடி என்றாலே பாபாதான்.2. வேதகாலச் சிந்தனையின் மணி மகுட மாகத் திகழ்பவை உபநிடதங்கள். தியானங்களின் விளைவாக ரிஷிகள் பெற்ற அனுபூதிச் செல்வங்கள். ‘அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே கேளுங்கள்’ என்று பூமியில் வாழ்பவர்களை நோக்கிச் சொல்லப்பட்ட அருள் மொழிகள். ஒவ்வொருவரும் கடவுளைச் சென்றடைவதே வாழ்க்கையின் இலட்சியம். அந்த இலட்சியத்தை அதாவது குறிக்கோளை (Ultimate Goal) அடைவதற்கு ஒவ்வோர் உபநிடதமும் சில தியான முறைகளைக் கற்பிக்கின்றன.

‘வேதங்களைப் பாடுபவர்களின் உபநிடதமான’ சாந்தோக்ய உபநிடதம் ஓம்கார தியானமான உத்கீத தியானம் முதல் தஹரவித்யை, பிரஜாபதி வித்யை வரை எட்டு அத்தியாயங்களில் அவற்றை விவரிக்கிறது. இவ் உபநிடதத்தை பழமையான, தொன்மையான உபநிடதம் என்று அறிஞர்கள் கூறுவர். பிரம்ம சூத்திரத்தில் பிரம்ம தத்துவப் பொருளுக்கு இருபத்தெட்டு பிரமாணங்களில் பன்னிரண்டு சாந்தோக்யத்திலிருந்துதான், எடுத்தாளப்பட்டிருக்கின்றன. ‘‘ஓம் இதி ஏதத் அக்ஷரம் உத்கீதம் உபாஸீத”, ஓம்காரமாகிய இந்த எழுத்தை உத்கீதமாக இசைத்து உபாசிக்க வேண்டும் என்று ஓம்காரத்தின் உபா சனையிலிருந்தே தொடங்குகிறது. இதனை ‘பிரம்ம சைதன்யத்தின் அர்த்த கர்ப்பம்’ என்பார் அரவிந்தர். இவ் உபநிடதத்தை சங்கரர் ‘அஷ்டாத்யாயீ மந்த்ர ப்ரமாணம்’ என்பார்.

இவ் உபநிடத்தின் நான்காம் அத்தியாயத்தில் கெளதமர் சத்யகாம ஜாபாலனுக்கு உபதேசித்த ‘ஷோடஸகலா வித்யை’ இயற்கையுடன் இயைந்து இறைவனைச் சார்ந்து வாழ்தலைக் குறிக்கிறது.
கௌதமர் சத்யகாம ஜாபாலனை சீடனாக ஏற்றுக்கொண்டு தீக்ஷை அளித்தார். பிறகு தமது பசுக்களில் மெலிந்த, பலவீனமான நானூறு பசுக்களைத் தேர்ந்தெடுத்து மேய்த்துக் கொண்டு வருமாறு கூறினார். அவனோ ஆயிரமாக அவை பெருகினால் தான் திரும்புவேன் என்று சபதம் செய்கிறான். எந்த ஆன்மாவிலிருந்து ஆன்மீகத் தூண்டுதல் வருகிறதோ அவரே குரு. எந்த ஆன்மா தூண்டப்படுகிறதோ, அவனே சீடன், மாணவன். இந்த இரண்டும் நிறைவேறும்போது அற்புதமான ஆன்மிக வளர்ச்சி ஏற்படுகிறது.

இறைவனைப் பதினாறு மகிமைகள் உடையவராகத் தியானிப்பது ‘ஷோடஸகலா வித்யை’. இந்தப் பதினாறு மகிமைகளும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. சீரடியில் பாபா இளைஞனாக நான்கு விளக்குகளின் நடுவில் தியானம் செய்தது ஷோடஸகலா வித்யையைக் குறிப்பதாக பாத வல்லப சரிதாம்ருதம் விளக்குகிறது. பிரம்மத்தின் நான்கு பகுதிகளை நான்கு விளக்குகளின் யோகாக்னியாகக் கொண்டு தவம் செய்தார் பாபா. நான்கு திசையை நோக்கிய விளக்குகள் பிரம்மத்தின் நான்கு நிலைகளில் பதினாறு கலைகளை விளக்குகின்றன.
சபதம் செய்த சத்யகாம ஜாபாலனின் தவத்தைக் கண்டு வாயுதேவன் மகிழ்ந்து அவனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

முதல் விளக்கின் விளக்கம் சத்யகாமனிடம் காளை உபதேசித்த இறைவனின் ஒரு கால் பகுதியாகும். ‘‘கிழக்குத் திசை ஒரு பங்கு; மேற்குதிசை ஒரு பங்கு; தெற்குத்திசை ஒரு பங்கு; வடக்குத் திசை ஒரு பங்கு”. இந்த நான்கு பங்குகள் சேர்ந்து இறைவனின் ஒரு கால்பகுதி. இந்நிலையில் அவர். ‘ஒளிர்பவர்’ என்று பெயர் பெறுகிறார். ‘ஒளிர்பவர்’ என்றால் ‘பொருள் சேர் புகழுடையவர்’ என்பது பொருள். இந்நிலையில் தியானிப்பவன் உலகில் ஒளிர்பவனாக ஆகிறான் (ப்ரகாசவான் பவதி).

இரண்டாம் விளக்கின் விவரம் அக்கினி சத்யகாமனுக்கு உபதேசித்த மற்றொரு கால் பகுதியாகும். ‘‘பூமி ஒரு பங்கு; இடைவெளி ஒரு பங்கு; வானம் ஒரு பங்கு; கடல் ஒரு பங்கு.’’ இந்த நான்கு பங்குகள் சேர்ந்த நிலையில் இறைவன். ‘எல்லையற்றவர்’ என்று பெயர் பெறுகிறார். அதாவது பிரபஞ்ச நிலையில் எல்லையற்றவராக உள்ளார் (ஆதிபகவன் முதற்றே உலகு). இந்நிலையில் யார் பிரபஞ்சத்தைத் தியானிக்கிறானோ அவன் எல்லா உலகங்களிலும் அதாவது நிலமிசை நீடு

வாழ்வான் (அனந்தவான் பவதி).
மூன்றாம் விளக்கின் தத்துவம் அன்னப்பறவை உபதேசித்த மூன்றாவது கால்பகுதியாகும். ‘‘அக்கினி ஒரு பங்கு; சூரியன் ஒரு பங்கு; சந்திரன் ஒரு பங்கு; மின்னல் ஒரு பங்கு”. இந்த பங்குகள் சேர்ந்த நிலையில் இறைவன் ‘ஒளிவடிவினர்’ என்று பெயர் பெறுகிறார். இறைவனை ஒளிப்பொருளாகத் தியானிப்பவன் ஒளி உலகங்களைப் பெறுகிறான் (ஜோதிஷ்மான் பவதி).

நான்காம் விளக்கின் மகிமை என்பது ஒவ்வொரு உயிரும் இறைவனுக்கு இருப்பிடமாக இருப்பதால் தன்னுள் இறைவனைக் காணும் தியானமாக நீர்ப்பறவையால் நான்காவது கால்பகுதியாக உபதேசிக்கப்படுகிறது. ‘‘பிராணன் ஒரு பங்கு; கண் ஒரு பங்கு; காது ஒரு பங்கு; மனம் ஒரு பங்கு”. இறைவன் இந்தப் பகுதிகளைக் கொண்ட உயிரை இருப்பிடமாக உடையவர் என்று பெயர் பெறுகிறார். உயிருக்கு உயிராக அதற்கும் ஆதாரமாகத் திகழ்கிறார். இந்நிலையில் இறைவனைத் தியானிப்பவன் ஆன்மதரிசனம் பெறுகிறான் (ஆய தனவான் பவதி).

ஆயிரம் பசுக்களுடன் சத்யகாமன் குருவான கௌதமரை அடைகிறான். அப்பொழுது கௌதமர், ‘இளைஞனே இறைஞானம் பெற்றவனைப் போல ஒளிர்கிறாய். உனக்கு யார் உபதேசித்தார்?’ என்று கேட்டார். அதற்கு சத்யகாமன் ‘மனிதர்களைத் தவிர மற்றவர்கள் உபதேசித்தார்கள். எனக்குத் தாங்கள் உபதேசிக்க வேண்டும்’ என்று கூறினான். அவர் அவனுக்கு எல்லாவற்றையும் உபதேசித்தார். எதையும் அவர் விடவில்லை. எதையும் அவர் விடவில்லை.

யாருடைய வாழ்க்கை தாமரை குருவிடமிருந்து பெற்ற ஞானஒளியால் மலர்ந்து விட்டதோ அது பிரபஞ்சத்துடன் ஒன்றிணைந்து (Oneness) இயற்கையின் ஒத்திசைவோடு (Resonance with the Nature) ஞானநிலை அனுபவங்களைப் பெறுகிறது. இது இயற்கையுணர்வு அனுபவம் (Nature Mysticism) ஆகும்.மொட்டுக்கள் மலரும் ஓசை, பறவைகளின் பேச்சு, வலைபின்னும் சிலந்தி, சாரையாய்ச் செல்லும் எறும்புகளின் சங்கேதங்கள், நுண்ணொலிகளின் ஓசை, அனைத்தும் பிரபஞ்ச நாடகத்தின் அனுபவங்கள். சேரமான் பெருமாள் நாயனார், உயர்திணை, அஃறிணை என்ற இரண்டு வகை உயிர்களும் பேசுவனவற்றை அறியும் அறிவு பெற்றவர் என்று சேக்கிழாரின் பெரிய புராணம் போற்றுகிறது.

‘‘யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும்…
எல்லாம் கைவந்துறப் பெற்றார்’’ (பெரியபுராணம் 3761)
அதனால் கழறிற்றறிவார் நாயனார் (பிற உயிர்கள் கழறுவது, பேசுவது) என்ற பெயரும் பெற்றார்.இதைப் போன்றே இஸ்ரேல் ஐக்கிய இராஜியத்தின் புகழ் பெற்ற மன்னர் சாலமன் பறவைகளிடம், விலங்குகளிடம் பேசும் திறன் கொண்டார் என்று விவிலியமும், இஸ்லாமிய பாரம்பரியமும் கூறுகின்றன.

‘‘Find tongues in trees, books with running brooks
Sermons is stones and good in everything”
Shakespeare, As you like it,

நாடகத்தின் வழியாக, ‘‘மரங்கள் பேசுகின்றன, ஓடைகள் புத்தகங்களாகின்றன; கற்கள் போதிக்கின்றன’’ என்று தன் இயற்கை அனுபவங்களைப் பதிவு செய்கிறார்.
And hark! How I like the throstle sings
He too, is no mean preacher
Come forth us to the light of things
Let Nature be your teacher

எனவரும் William Wordsworthன்
‘‘The Tables Turned”

என்னும் கவிதை ‘வெட்கப்படும் குரலால் இயற்கை குசுகுசுக்கிறது, அதனைச் செவிமடுத்துக் கேள்; அது நமக்கான போதனையே தவிர வேறு ஏது? இயற்கையே நம் குரு’’ என்று இயற்கையைக் குரு என ஆராதிக்கிறது.இயற்கை வாழ் அற்புத அனுபவம் பெற்ற பின்பு, குரு உபதேசத்தின் வாயிலாக இறை அனுபவத்தைப் பெறுகிறான் சீடன். பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களையும் இயங்கச் செய்யும பரமசைன்யத்தை அடைந்து தன்னலமற்ற தன்மையினால் எல்லா உயிர்களாலும் வணங்கப்படும் சக்தியுடையவன் ஆகின்றான். ‘தன்னுயிர் தான் அறப் பெற்றானை (தவ வலிமையினால் ‘தான்’ என்னும் பற்று நீங்கப் பெற்றவனை) ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் என்பது குறள்.

இதற்குக் காரணம் குருவே. இயற்கையிலிருந்து அனுபவம் பெற்றாலும் குருவின் உபதேசமே இறைஞான அனுபவத்தைத் தரும். குருவை கைகள் கூப்பி வணங்கச் சீடனின் இருதயம் மலரும். ‘கரங்கள் மொட்டித்து இருதயம் மலர’ என்பது திருவாசகம். 3. குரு உபதேச மஹிமையைக் காட்டும் வண்ணம் வேப்ப மரத்தின் அடியில் பாபா பன்னிரண்டு ஆண்டுகள் மௌனத்திலும் தியானத்திலும் அமர்ந்து இருந்தார். அதனால் மஹல்ஸாபதி, உபாசினி மஹாராஜ், ஜி.கே.தீக்ஷித் போன்ற பாபாவின் அடியவர்கள் அவ்விடத்தை பாபாவின் ‘குருஸ்தான்’ என்று போற்றி வந்தனர். பம்பாயைச் சேர்ந்த டாக்டர் ராமராவ் கோதாரியும் ஒரு கம்பவுண்டர் பக்தரும் மற்றும் சில பக்தர்களும் பாபா அமர்ந்திருந்த இந்த வேப்ப மரத்தினடியில் பாபாவின் பாதுகைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர்.

அக்கல்கோட் மஹாராஜின் அடியவர் பாயி கிருஷ்ணாஜி அக்கல்கோட் சென்று குருவின் பாதுகைகளைத் தரிசனம் செய்துவர வேண்டும் என்று நினைத்தார். அங்கு செல்வதற்கு முன் அக்கல்கோட் மஹாராஜ் அவர் கனவில் தோன்றி, ‘இப்போது ஷிர்டியே எனது இருப்பிடம்; அங்குச் சென்று உன் வழிபாட்டைச் செலுத்து’ என்றார். அதன்படி சீரடியில் பாபாவை தரிசித்து அவர் சுமார் ஆறுமாத காலம் அங்கேயே தங்கியிருந்தார். அப்போது அவர் ஒருமுறை பாபாவிடம் அக்கல்கோட் செல்ல அனுமதி கேட்டபோது ‘அங்கே என்ன இருக்கிறது’ என்று பாபா கேட்டார். தான் கண்ட கனவிற்கும், பாபா கூறியதற்கும் ஒற்றுமையை உணர்ந்தார் பாயி கிருஷ்ணாஜி.

அதனால், வேப்ப மரத்தடியில் பாதுகை பிரதிஷ்டை செய்யும் அடியார்களோடு அவரும் சேர்ந்துகொண்டார். பாபாவின் பாதுகைகள் முதலில் சாதாரண கல்லில் செய்வதாக இருந்தபொழுது, கம்பவுண்டர் பக்தரால் தன் முதலாளி வழியாக உயர்ந்த தரத்தில் பாதுகைகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.டாக்டர் கோதாரி கொடுத்த பாதுகையின் மாதிரி வரைபடத்தில் உபாசினி பாபா சில திருத்தங்கள் செய்து கொடுத்தார். தாமரைப் பூக்கள், சங்கு, சக்கரம் ஆகியவற்றை வரைந்தும், பாபாவின் யோக சக்தி,வேப்ப மரத்தின் மகிமை ஆகியவற்றை விளக்கும் ஒரு ஸ்லோகத்தையும் பாதுகைகள் பிரதிஷ்டை செய்யப் படும் இடத்தில் வைக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். அதன்படி அவர் எழுதிய ஸ்லோகமும் அதில் பொறிக்கப்பட்டது.

‘‘ஸதா நிம்பவ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்
ஸுதாஸ்ராவினம் திக்தமப்யப்ரியம் தம் |
தரும் கல்பவ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் சாயிநாதம் ||’’
நான் சாயிநாத பிரபுவை வணங்குகிறேன்.

வேப்பரம் கசப்பாகவும் இனிமையற்றதாகவும் இருப்பினும் அவரது நிரந்தர இருக்கையினால் அமிர்தத்தை கசிகிறது. கல்பவிருக்ஷத்தை விடச் சிறந்தது.அவ்வகையில் பாதுகைகள் பம்பாயில் தயாரிக்கப்பட்டு கம்பவுண்டர் பக்தர் மூலமாக சீரடிக்குக் கொண்டு வரப்பட்டன. ஜி.கே. தீக்ஷித் கண்டோபா கோயிலிலிருந்து துவாரகமாயி வரை தன்தலைமேல் தாங்கி வந்தார். ஆவணி மாதம் பௌணர்மியன்று (10-8-1912) வேப்பமரத்தின் அடியில் புனிதமான பாபாவின் பாதுகைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பாதுகைகளை முதல் ஐந்தாண்டுகள். ஜி.கே.தீக்ஷித் ஆராதித்து வந்தார். மாதந்தோறும் அப்பாதுகை அமைந்த அவ்விடத்தில் விளக்கேற்றுவதற்காக டாக்டர் கோதாரி மாதம் இரண்டு ரூபாயை அனுப்பிக்
கொண்டிருந்தார்.

மயிலாப்பூர் சாயி சமாஜத்தை நிறுவிய சாயி பக்தரான பி.வி.நரசிம்ம சுவாமிஜி, ‘குருஸ்தான் வேப்பமரமானது அநேக நூற்றாண்டுகளாகவே அங்கு இருக்கிறது; அம்மரத்தினடியில் பாபா தன் கரதல பிக்ஷா (கையால் பிச்சையெடுத்தல்), தருதல வாஸத்தை (மரத்தடியில் வசித்தல்) துவக்கினார் என்று குறிப்பிட்டு, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட பாதங்கள் பாபாவின் பாதங்கள் என்று சிலாசாசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறார்.

இவ்வாறாக சீரடியில் உள்ள வேப்பமரத்தடி, ‘குருஸ்தான்’ என்று பாபாவின் பக்தர்களால் புனிதமாகப் போற்றப் பெறுகிறது. மேலும், புதிதாகக் கட்டப்படும் பாபா ஆலயங்களில் வேப்பமரத்துடன் கூடிய குருஸ்தான் அமைக்கப்பட்டு வழிபடப் பெறுகிறது. இன்றும் பாபாவின் பக்தர்கள் உபாசினி பாபா இயற்றிய ஸ்லோகத்தைப் பாடி அதனை வழிபாடு செய்துவருகின்றனர்.

முனைவர் அ.வே. சாந்திகுமார சுவாமிகள்

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi