திருவள்ளூர்: எஸ்ஏ கல்லூரியில் மாணவர்களின் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது. எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் இணைந்து சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் மற்றும் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 100 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மாலதி செல்வக்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி இயக்குநர் சாய்சத்யவதி அனைவரையும் வரவேற்றார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஊழல் தடுப்பு அதிகாரி சுரேஷ்குமார் மிதிவண்டி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய மிதிவண்டி பேரணி 12 கிலோமீட்டர் பயண தூரத்தை எட்டும் இலக்கை நோக்கி மாணவர்களின் உற்சாகத்தோடு ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழி ஏற்புடன் ஆரம்பமானது. இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.