
ராம்நகரம்: முன்னாள் முதல்வர் குமாரசாமி சென்னபட்டணாவில் ஏப்.19ல் வேட்புமனு தாக்கல் செய்கிறார். தனது மனைவி அனிதா குமாரசாமி எம்எல்ஏவாக உள்ள ராம்நகரம் தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். இது குறித்து குமாரசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ‘சென்னபட்டணா தொகுதியில் ஏப்.19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். அதே சமயம் எனது மகன் நிகில் குமாரசாமி ராமநகரம் தொகுதியில் ஏப்.17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். மஜத 93 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை டிசம்பர் மாதம் வெளியிட்டது. விரைவில் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம். 50 பேர் கொண்ட பட்டியல் தயாராக உள்ளது. மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்னும் 5 நாட்களில் வெளியாகும்’ என்றார். ராம்நகரம் தொகுதியில் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி எம்எல்ஏவாக உள்ளார். அந்த தொகுதி தற்போது அவரது மகன் நிகில் குமாரசாமிக்கு விட்டுக்கொடுத்துள்ளார். மஜத இளைஞரணி தலைவராக உள்ள நிகில் குமாரசாமி ஒரு நடிகர். இவர் மண்டியா மக்களவை தொகுதியில் நடிகை சுமலதா அம்பரீஷை எதிர்த்து கடந்த 2019ம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.